Friday, October 12, 2012

21 மாத இடைவெளிக்கு பிறகு இந்தியாவில் மீண்டும் போலியோ

21 மாத இடைவெளிக்கு பிறகு இந்தியாவில் மீண்டும் போலியோ




இந்தியாவில் இருந்து போலியோ நோய் விரட்டி அடிக்கப்பட்டதாக கருதப்பட்ட நிலையில் 21 மாத இடைவெளிக்கு பிறகு பீகாரில் 18 மாத ஆண் குழந்தைக்கு போலியோ நோய் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகள் பலவற்றில் போலியோ நோய் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது. இந்த நோய்க்கு கடந்த 1950களிலேயே தடுப்பு ஊசி கண்டுபிடிக்கப்பட்டது. முதன் முதலாக அமெரிக்கா போலியோ இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து பல நாடுகளும் போலியோவிலிருந்து விடுதலை பெற்றன.

இந்தியாவிலும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக உலக சுகாதார அமைப்பின் உதவியோடு தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டன. கடந்த 2011ம் ஆண்டு ஜனவரி மாதம் மேற்கு வங்கத்தில் ஒரு குழந்தைக்கு போலியோ இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் இந்தியாவில் எந்த பகுதியிலும் புதிதாக போலியோ நோய் பாதிப்பு கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் நாட்டிலிருந்து போலியோ நோய் விரட்டி அடிக்கப்பட்டதாக கருதப்பட்டது. உலக சுகாதார அமைப்பும் மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு பாராட்டு தெரிவித்தது.

இந்நிலையில், பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் 18 மாத ஆண் குழந்தை ஒன்றுக்கு போலியோ பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இந்தக் குழந்தைக்கு இதுவரை 13 தடவை போலியோ தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. குழந்தைக்கு வந்திருப்பது போலியோவா அல்லது வேறு நோயா என்பது குறித்து மருத்துவ பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவுகள் வெளிவர ஒரு வாரம் ஆகும் என சுகாதார அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தர்பங்கா உள்ளிட்ட 28 மாவட்டங்களில் அடுத்த வாரம் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடத்த சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!