Monday, September 10, 2012

இந்தியாவில் பால் வளத்தை மேம்படுத்திய வர்கீஸ் குரியன் காலமானார்


இந்தியாவில் பால் வளத்தை மேம்படுத்திய வர்கீஸ் குரியன் காலமானார்




இந்தியாவுடைய வெண்மைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படும் டாக்டர் வர்கீஸ் குரியன் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 90.

பால் உற்பத்தியில் மிகவும் பின் தங்கியிருந்த இந்தியாவை, தன்னிறைவு காண வைத்ததோடு உலகின் மிகப் பெரிய பால் உற்பத்தியாளர் என்ற நிலைக்கு கொண்டுவந்த பெருமை டாக்டர் குரியனுக்கு உண்டு.

அவர் உருவாக்கிய அமுல் நிறுவனம் இந்தியாவின் முன்னணி பால் உற்பத்திப் பொருள் நிறுவனமாக வளர்ந்தது. அந்நிறுவனத்தை நூறு கோடி டாலர் மதிப்புள்ள ஒரு மாபெரும் தொழிலாக அவர் உருமாற்றினார்.

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் 1921 ஆம் ஆண்டு பிறந்த குரியன், சென்னை லயோலா கல்லூரியிலும், அப்போதைய கிண்டி பொறியியல் கல்லூரியிலும் பயின்றவர்.

பால் பண்ணைத் தொழில் பயிற்சி பெற்ற பின்னர் அமெரிக்கா சென்று மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் பால் உற்பத்தி பொறியியலில் நிபுணத்துவம் பெற்று நாடு திரும்பினார்.


குஜராத்தின் கைரா மாவட்டத்தில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தில் சேர்ந்து அவ்விடத்தில் குரியன் உருவாக்கிய பால் பதனிடும் தொழிற்சாலைதான் அமுல் நிறுவனமாக மலர்ந்தது.

அமுல் கொண்டுவந்த கூட்டுறவு பால் உற்பத்தி முறை பெரும் வெற்றியடையவே. அம்முறை குஜராத் எங்கும் பின்பற்றப்பட்டது.

குஜராத் விவசாயிகளும் கால்நடை வளர்ப்போரும் கூட்டுறவுத் திட்டங்கள் மூலம் வாழ்வில் முன்னேற குரியன் வழிவகுத்தார்.

அப்போதையப் பிரதமர் லால் பகதுர் சாஸ்திரி கேட்டுக்கொண்டதற்கு இணங்க தேசிய பால் வள மேம்பாட்டு வாரியத்தை வடிவமைத்து. அதன் தலைவராக செயல்பட்டு, அமுல் பாணியில் நாடெங்கும் கூட்டுறவு பால் உற்பத்தி சங்கங்களை குரியன் கொண்டுவந்திருந்தார்.

1965 தொடங்கி 1998 வரை 33 வருடங்கள் தேசிய பால் வள மேம்பாட்டு வாரியத்தின் தலைவராக குரியன் விளங்கினார்.

60களில் வெறும் 20 மில்லியன் மெட்ரிக் டன் பால் மட்டுமே உற்பத்தி செய்துவந்த இந்தியா சென்ற வருடம் 122 மில்லியன் மெட்ரிக் டன் பாலை உற்பத்தி செய்திருக்கிறது என்றால் அதில் குரியனின் பங்களிப்பு இன்றியமையாத ஒன்று.

இந்திய மக்கள் அனைவரும் பால் அருந்த வழிவகுத்த குரியன், இயல்பில் பால் அருந்த மாட்டார்.

ஆச்சரியமான பல சாதனைகளைச் செய்தவரின் வாழ்க்கையில் இதுவும் ஒரு ஆச்சரியம்தான்.








No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!