Friday, October 11, 2013

கிர் காடுகளில் அதிகரிக்கும் சிங்கக்குட்டிகள்

கிர் காடுகளில் அதிகரிக்கும் சிங்கக்குட்டிகள்




உலகிலேயே ஆசிய சிங்கங்களுக்கான ஒரே வனவிலங்கு சரணாலயமாக கிர் காடுகள் இருந்து வருகின்றன.
கடந்த 2010 ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி, 97 ஆண் சிங்கங்கள், 162 பெண் சிங்கங்கள், 152 குட்டிகள் ஆக மொத்தம் 411 சிங்கங்கள் அங்கிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இது கடந்த 2005 ஆம் ஆண்டு இருந்த 48 சதவிகிதத்தைவிட அதிகரித்து 62 சதவிகிதமாக இருந்தது என்பது குறிப்பிடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் இந்தக் காட்டில் 80-85 புதிய குட்டிகளின் வரவு காணப்படும். இந்தக் குட்டிகள் முதல் ஆண்டு உயிருடன் இருப்பது மிகவும் முக்கியம் என்று வனத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். அவர்களின் கருத்தின்படி 56 சதவிகிதமே மூன்றாவது ஆண்டில் உயிருடன் காணப்படுகின்றன.

இந்த ஆண்டு கிட்டத்தட்ட 100 குட்டிகள் உயிருடன் காணப்படுவதாக கணக்கீடுகள் தகவல் தருவது அதிகாரிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முதன்முறையாக குட்டிகளின் எண்ணிக்கை மூன்று இலக்கத்தைத் தொடுவதால் தங்களின் விலங்குகள் பாதுகாப்பு முயற்சிக்கு பலன் கிடைத்துள்ளதாகவே இந்த அதிகாரிகள் கருதுகின்றனர்.



ஒவ்வொரு வருடமும் குட்டிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இதற்குக் காரணம் ரோந்துப் பணியில் உள்ள ஊழியர்களும், அருகிலுள்ள கிராமப்புறத்தினரும் தங்களுக்கு அளிக்கும் ஒத்துழைப்புதான் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

அவர்கள் பகுதியில் ஏதேனும் காயமடைந்து கிடக்கும் குட்டியைப் பார்க்க நேரிட்டால் அலட்சியப்படுத்தாமல் அவர்கள் உடனே தங்களுக்குத் தகவல் அளிப்பதால் தங்களால் அவற்றைக் காப்பாற்ற முடிகின்றது என்றனர். இது குட்டிகளின் இறப்பு விகிதத்தைப் பெருமளவு குறைக்கின்றது என்று குஜராத்தின் தலைமை வன பாதுகாப்பு அதிகாரியான சி.என்.பாண்டே தெரிவித்தார்.

கடந்த 2008 ஆம் ஆண்டில் இயற்கை பாதுகாப்பு சர்வதேச ஒன்றியம் கிர் காடுகளை ஆபத்தான பட்டியலிலிருந்து நீக்கி ஒப்பீட்டளவில் ஆரோக்கியமான ஆபத்து என்று குறிப்பிட்டுள்ளது. இதனால் இந்த பாதுகாப்பு மையத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.


இதனால் பார்வையாளர்களுக்கு இந்தக் குட்டிகளைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது என்று துணை பாதுகாப்பு அதிகாரியான சந்தீப் குமார் கூறினார். ஆயினும், குஜராத் அரசின் விருப்பத்திற்கு மாறாக உச்ச நீதிமன்றம் சிங்கங்கள் உயிர் பிழைப்பதற்கான நீண்டகால நலன்களை கருத்தில்கொண்டு அவற்றுள் சிலவற்றை மத்தியப் பிரதேசத்தின் குனோ-பல்பூர் வனவிலங்கு சரணாலயத்திற்கு மாற்றும்படி உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!