Friday, September 27, 2013

கரப்பான் பூச்சியைப் போல டி.வி. கேமராவை பார்த்து மிரண்ட தமிழக காங்கிரஸ் வி.ஐ.பி.கள்!

கரப்பான் பூச்சியைப் போல டி.வி. கேமராவை பார்த்து மிரண்ட தமிழக காங்கிரஸ் வி.ஐ.பி.கள்!


தமிழகத்தில் இருந்து டில்லி சென்ற காங்கிரஸ் பிரமுகர்கள், கரப்பான் பூச்சியைப் போல டி.வி. கேமராவை பார்த்து மிரண்டதால், ராகுல் காந்தி கடும் கோபமடைந்தார் என தெரியவந்துள்ளது. தமிழகத்தில் இருந்து டி.வி. கேமராவை பார்ப்பதற்காக 5 தமிழக காங்கிரஸ் பிரமுகர்கள் சென்றபோதே, இந்த சம்பவம் நடைபெற்றது.

தமாஷான இந்த விவகாரம் என்னவென்றால், நம்ம காங்கிரஸ் கட்சி, தமது பிரசார பலத்தை அதிகரிக்க திட்டமிட்டது. அதையடுத்து, காங்கிரஸ் சார்பில், டிவி சேனல் விவாதங்களில் பங்கேற்க தகுதியான ஆட்களை தேர்ந்தெடுத்து, முறையான பயிற்சி அளிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியின் ஐடியா இது.

டி.வி. சேனல்களில் பிரிந்து மேயும் திறமை கொண்ட 5 பேரை ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் தேர்ந்தெடுத்து, டில்லிக்கு அனுப்பி பயிற்சி கொடுக்க முடிவு செய்யப்பட்டது. ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் 5 பேர் கொண்ட பட்டியலை அனுப்பி வைக்கும்படி, மற்றைய மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட உத்தரவு போல, தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனுக்கும் உத்தரவு வந்து சேர்ந்தது.

ஞானதேசிகனும் ஒரு பட்டியல் தயார் செய்தார்.

அதில், பீட்டர் அல்போன்ஸ், அழகிரி, கோபண்ணா, ஞானசேகரன், விஜயதரணி ஆகியோர் பெயர்கள் ஞானதேசிகனின் பட்டியலில் இடம் பெற்றன. அதுவரைக்கும் சரி. ஆனால், பட்டியலை டில்லிக்கு அனுப்புவதற்கு முன், மத்திய அமைச்சர் வாசனிடம் பட்டியலைக் காட்டிவிட்டார் ஞானதேசிகன்.

இவர் தயாரித்த பட்டியலை அப்படியே அனுப்பிவிட்டால், அப்புறம் அவர் எதற்காக அமைச்சராக இருக்க வேண்டும்? எனவே அவர் பட்டியலில் சில திருத்தங்களை செய்து கொடுத்தார்.

பீட்டர் அல்போன்ஸ், கோபண்ணா, அழகிரி ஆகிய மூவரும் நீக்கப்பட்டனர். பிரின்ஸ், யசோதா, சேலம் பாலு ஆகியோருடைய பெயர்கள் சேர்க்கப்பட்டன. இது பட்டியல்-2!

இந்த நிலையில் ஞானதேசிகனின் மூளையில் அபூர்வ நரம்பு ஒன்று அசைந்தது.

இனியும் இந்த பட்டியலை வேறு தமிழக காங்கிரஸ் பிரமுகர்கள் யாரிடம் காட்டினாலும் ‘பட்டியல்-3’ உருவாக நேரிடும் என்பதை அவரது கூரிய அறிவு அவருக்கு சொன்னது. அதையடுத்து, கமுக்கமாக பட்டியலை டில்லிக்கு அனுப்பிவிட்டு, கம்மென்று இருந்துவிட்டார் ஞானதேசிகன்.

பட்டியல் டில்லி போய் சேர்ந்தது.

தமிழகத்தில் இருந்து சென்ற பட்டியல் டில்லியில் அப்படியே ராகுலின் கைகளுக்கு போய்விட்டால், அந்து காங்கிரஸ் பாரம்பரியத்துக்கு அழகா? இதனால் இந்தப் பட்டியல் டில்லியில் ட்ரான்சிட்டில் இருந்தபோது, அதில் தன் பெயரையும் சேர்க்க ஏற்பாடு செய்துவிட்டார், அமெரிக்க நாராயணன்.

‘நாராயணனுடன் சேர்ந்து அறுவரானோம்’ என்ற நிலையில் பட்டியல் ராகுலின் கைகளை சென்றடைந்தது.

இந்த நிலையில் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி, வழமைபோல சென்னை ஏர்போர்ட்டில் விமானம் ஏறுமுன், “கூடங்குளம் மின்சார உற்பத்தி 2-ம் கட்டம் இன்னமும் 8.5 நாட்களில் தொடங்கும் என்று பேட்டி கொடுத்துவிட்டு, டில்லி சென்று லேன்ட் ஆனார். தற்செயலாக ராகுலையும் சந்தித்துவிட்டார்.

ஞானதேசிகன் அனுப்பிய பட்டியல் பற்றி அவருக்கு தெரியவந்தபோது, “பீட்டர் அல்போன்ஸ், கோபண்ணா ஆகிய இருவரையும் மீண்டும் சேர்த்தால் நன்றாக இருக்கும்” என தன் பங்குக்கு ஒரு அட்வைஸ் கொடுத்துவிட்டு சென்றார்.

ராகுலுக்கு தலை சுழன்றது. ‘பட்டியல்-3’ உருவாகும் சந்தர்ப்பம் உருவானது.

ஆனால் ராகுல் பட்டியலை மாற்றுமுன், வாசனால் திருத்தப்பட்ட ‘பட்டியல்-2’ பிரமுகர்கள் கட்சி செலவில் டில்லி வந்து இறங்கி விட்டனர். டில்லியில் இவர்களுக்கான பயிற்சிப் பாசறைக்கான ஏற்பாடுகள் ரெடியாக இருந்தன.

இவர்களை தேர்ந்தெடுக்கும் முன், சின்னதாக ஒரு டெஸ்ட் வைத்தார்கள்.

டில்லி ஸ்டூடியோ ஒன்றில் டிவி சேனல் விவாத நிகழ்ச்சி போலவே, அரங்கம் செட்டப் செய்யப்பட்டு, அனைத்து மாநிலங்களில் இருந்து வந்தவர்களுக்கும் டெஸ்ட் நடத்தப்பட்டது. அதற்காக, பிரபல ஆங்கில சேனல்களை சேர்ந்த நிருபர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

அவர்கள் கேட்கும் சரமாரியான கேள்விகளுக்கு சளைக்காமல் ஆங்கிலத்தில் பதில் சொல்ல வேண்டும். மத்திய அரசின் திட்டங்கள், செயல்பாடுகள், எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் ஊழல் குற்றச்சாட்டுகள் என்று அடுக்கடுக்கான கேள்விகள் கடகடவென கேட்கப்பட்டன. தமிழகத்தில் இருந்து சென்ற சிலருக்கு வயிற்றுக்குள் தடதடவென அதிர்ந்தது.

எல்லா மாநிலத்தில் இருந்து வந்தவர்களும் கலந்து கொண்ட இந்த டெஸ்ட்டில், ஒவ்வொருவரும் சொல்லும் பதிலில் உள்ள தெளிவு, ஆங்கில உச்சரிப்பு, விஷய ஞானம், புள்ளிவிவரம் ஆகியவற்றின் அடிப்படையில் ரிப்போர்ட் ஒன்று தயாராகி, ராகுலின் கையில் கொடுக்கப்பட்டது.

ரிப்போர்ட்டை ஆய்வு செய்த ராகுல், அதிர்ச்சி அடைந்து விட்டார். மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்களின் ஸ்கோர் ஓகோவென்று இருக்க, தமிழகத்தை சேர்ந்த திறமைசாலிகள், தரையை தடவும் நிலையில் இருந்ததே ராகுலின் அதிர்ச்சிக்கு காரணம்.

“தமிழகம் இந்தளவுக்கு பின்தங்கிய நிலையில் உள்ளதா?” என்று ராகுல் நாலு பேரை விசாரித்தபோதுதான், பின்தங்கியது தமிழகம் அல்ல, அங்குள்ள காங்கிரஸ்காரர்கள்தான் என்று தெரியவந்தது. அத்துடன், பட்டியல் மாற்றப்பட்ட விஷயமும் ராகுலுக்கு தெரியவந்தது.

இதையடுத்து, பீட்டர் அல்போன்சை டில்லிக்கு அழைத்த ராகுல், என்ன நடந்தது என்பதை விசாரித்து அறிந்தார்.

ஞானதேசிகனின் பட்டியல்-2, குப்பைத் தொட்டிக்கு போய்ச் சேர்ந்தது. பட்டியல்-3, ராகுலால் உருவாக்கப்பட்டது. அதில் மூன்றே மூன்று பேர்தான். பீட்டர் அல்போன்ஸ், கோபண்ணா, அமெரிக்க நாராயணன் ஆகியோர் அழைக்கப்பட்டனர். அவர்கள் கடந்த 15-ம் தேதி நடந்த டி.வி. ஒத்திகை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மற்றையவர்களின் கதி என்னாச்சு என்று தெரியவில்லை. லோக்கலில் “The Cow Jumped Over the Moon” என்று பாடி பயிற்சி எடுக்கிறார்களோ, என்னவோ!


Join with us on Facebook  >>>

              அறிவியல்

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!