Friday, September 27, 2013

திருச்சியில் மோடி: “பிரதமரே, காதில் விழுகிறதா? தமிழக இளைஞர்களின் குரல் கேட்கிறதா?”

திருச்சியில் மோடி: “பிரதமரே, காதில் விழுகிறதா? தமிழக இளைஞர்களின் குரல் கேட்கிறதா?”




திருச்சியில் நடைபெறும் இளந்தாமரை மாநாட்டில் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, தமது உரையை தமிழ் மொழியில் தொடங்கினார். “பாரத் மாதாஹே ஜே, தமிழ் மண்ணே வணக்கம்! பெரியோர்களே, தாய்மார்களே, வாலிப சிங்கங்களே! அனைவருக்கும் வணக்கம்!

தமிழ்நாடு பெருமை வாய்ந்த நாடு, கம்பன், வள்ளுவன் பிறந்த நாடு இந்த தமிழ்நாடு. தமிழ்நாடு என்று சொன்னால் காதில் தேன் வந்து பாயும் என்று பாடினார் பாரதியார். திருச்சி தமிழ்நாட்டின் இதயம் போல் மத்தியில் இருக்கும் மாவட்டம், காவிரியும் அலங்கரிக்கும் மாவட்டம், சோழர்கள் ஆண்ட திருச்சியில் வசிக்கும் அனைவருக்கும் மீண்டும் வணக்கம்” என்றார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், “தமிழர்தான் இ-மெயிலையும் கண்டுபிடித்தவர். உலகின் முன்னணி மென்பொருள் நிறுவனங்களில் தமிழர்கள்தான் முக்கிய பொறுப்புகளில் இருக்கின்றனர்.

தமிழகமும், குஜராத்தும் பொதுவான அம்சங்களைக் கொண்டிருக்கின்றன. இரண்டு மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் நாட்டு விடுதலைக்காகப் போராடி இருக்கின்றனர். இங்கே ஒரு சிறிய குஜராத் என்று சொல்லும் அளவுக்கு செளகார்பேட்டை இருக்கிறது. குஜராத்திலேயே ஒரு சிறிய தமிழகமாக மணிநகர் இருக்கிறது.

அந்த மணிநகர்தான் எனது சட்டசபை தொகுதி. மணிநகர் தமிழ் வாக்காளர்கள்தான் என்னை பெரும் வெற்றி பெற வைத்தனர்.
கடற்கரையை ஒட்டி இருக்கிற நமது இரு மாநிலங்களுக்கும் சில முக்கியமான பிரச்சனைகள் இருக்கின்றன. எப்படி குஜராத் மீனவர்கள் பாகிஸ்தானால் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்படுகின்றனரோ, அதேபோல் இலங்கை அரசால் தமிழக மீனவர்கள் துன்புறுத்தப்படுகின்றனர்.

குஜராத் மீனவர்களை பாகிஸ்தான் ஏன் தூக்கி செல்கிறது? தமிழக மீனவர்களை இலங்கை ஏன் தூக்கி செல்கிறது? இதற்கான தைரியம் இந்த நாடுகளுக்கு எப்படி வந்தது? பிரச்சனை மத்தியில் உள்ள கடல் அல்ல! மத்தியில் இருக்கிற பலமற்ற அரசால்தான் இந்த தைரியம் இந்த நாடுகளுக்கு வந்துள்ளது!!

பாகிஸ்தானில் இருந்து இங்கு வந்து ராணுவத்தினர் தலையை வெட்டி எடுத்துச் செல்கின்றனர், பாகிஸ்தான் ராணுவத்தினர் இங்கு வந்து படுகொலை செய்து விட்டு செல்கின்றனர் என நடந்து கொண்டிருக்கும் போது அந்த நாட்டு பிரதமருடன் விருந்தில் பங்கேற்கிறார்.

பிரதமர் என்றால் என்ன அர்த்தம்? இந்த நாடு கையாலாகாத நாடா? பலவீனமான நாடா? என்று நமக்கு கேள்வி எழும்.

அவர்கள் என்ன செய்தாலும் நாம் கண்ணை மூடிக் கொண்டு இருக்க வேண்டும் என்ற நிலை ஏன் வந்தது? பாகிஸ்தான் நமது நாட்டின் மீது தாக்குதல் நடத்தும் போது நமது பிரதமர், பாகிஸ்தான் அரசியல் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அவசரம் வேண்டுமா? (கூடாது கூடாது என்று கூட்டத்தினர் குரல் எழுப்பினர்.)

பிரதமரே, காதில் விழுகிறதா.. தமிழக இளைஞர்களின் குரல் கேட்கிறதா?

பிரேசில் நாட்டின் மீது அமெரிக்கா உளவு பார்த்தபோது அமெரிக்கக் குழுவை பிரேசில் திருப்பி அனுப்பியது. பிரேசிலின் தன்மான உணர்ச்சியை நாம் பாராட்ட வேண்டும்.

அமெரிக்காவில் உளவுத் துறையில் பணியாற்றியவர் ஸ்னோடன். உளவுத் துறையில் அவர் அறிந்த விஷயங்களை வெளியிட்டார். தேசத் துரோகத்தில் ஈடுபட்ட காரணத்தால் அமெரிக்கா அவரை கைது செய்ய முனைந்தது. ஆனால் ரஷியாவோ ஸ்னோடனுக்கு அடைக்கலம் கொடுத்தது. அதனால், என் நாட்டிலே துரோகம் செய்து ஓடியவனுக்கு அடைக்கலம் கொடுத்த உன் மண்ணில் கால் வைக்க மாட்டேன் என்று சொன்னார் அதிபர் ஒபாமா.

சிறிய நாடோ, பெரிய நாடோ ஒரு நாட்டின் தன்மானத்துக்கு இழுக்கு ஏற்பட்டால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தன் நாட்டின் சுய கவுரவத்தையும் மரியாதையும் காப்பாற்ற வீறு கொண்டு எழத்தான் செய்யும்.

நான் பிரதமரிடம் கேட்க விரும்புவது நீங்கள் முன்னுரிமை கொடுப்பது எதற்கு? இந்த நாட்டின் தன்மானத்துக்கா? கவுரவத்துக்கா? அல்லது பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தைக்கா? பதில் சொல்லுங்கள்..

இங்கே தாக்குதல் நடத்தும் போது நீங்கள் பேச்சுவார்த்தையின் பெயரால் விருந்து சாப்பிடுகிறீர்களா?

நாட்டில் ராணுவ வீரர்களுக்கு, எல்லைக்கு, மாநிலங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற சூழல் இருக்கிறது. இந்த சூழலில் நாம் செய்ய வேண்டிய முதல் கடமை, இதற்கு காரணமான மத்திய அரசை தூக்கி எறிய வேண்டும் என்பதுதான்.

இன்று டில்லியில் ஒரு அரசு இருக்கிறது. அந்த அரசு, இந்த நாட்டின் பொருளாதாரத்தை பலவீனப்படுத்தி இருக்கிறது. பொருளாதாரத்தை வீழ்ச்சி அடையச் செய்திருக்கிறது. நாட்டி ரூபாய் மதிப்பை வீழ்ச்சி அடையச் செய்திருக்கிறது. இந்திய ரூபாய்க்கு இப்போது மதிப்பு இல்லை. இன்னும் இந்த அரசு நீடித்தால் ரூபாய்க்கு மதிப்பே இல்லாமல் போய்விடும்.

இந்த ஆட்சி தொடருமேயானால் 5 ஆண்டுகளில் கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில்லாமல் பிச்சை எடுக்க நேரிடும் என்று நாட்டின் பொருளாதாரம் பற்றி பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்த அரசின் நடவடிக்கையால் தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன. திருச்சியில் செயல்படும் பெல் நிறுவனத்தின் துணை நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன. இதனால் பெல் நிறுவனத்துக்கு சிக்கல் எழுந்துள்ளது. சிறிய தொழிற்சாலைகள் அனைத்தும் அரசின் தவறான கொள்கைகளால் மூடப்பட்டு வருகின்றன.

பல்லாயிரம் கோடி ரூபாய் மூலதனத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தொழிற்சாலைகளுக்காக, வங்கிக் கடன்களை பெற்றுவிட்டு திருப்பிச் செலுத்தாதவர்கள் பெயர்கள் பத்திரிகைகளில் வருகிறதா? ஆனால் லட்சம் ரூபாய் கடன் பெற்று தராதவர்கள் பெயரை பகிரங்கப்படுத்தி அவர்களை தற்கொலைக்குத் தூண்டுகிறது மத்திய அரசு.

நீங்கள் தன்மானத்தோடு வாழ வேண்டும். தன்மானத்தை விட்டுவிடக் கூடாது. உங்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் ஒரு அரசு மத்தியில் அமையும்.

20,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டன என்கிறது அரசின் புள்ளி விபரம். காரணம் நிலக்கரி கிடைக்கவில்லை. ஒருபக்கம் நிலக்கரி சுரங்கங்கள் மூடப்பட்டு கிடக்கின்றன. இன்னொருபுறம் தொழிற்சாலைகள் மூடப்பட்டு கிடக்கின்றன. மற்றொருபுறம் பல மாநிலங்களில் மின்வெட்டு அமலில் இருக்கிறது.

இந்த நிலை மாற இந்த மத்திய அரசு தூக்கி எறியப்பட வேண்டும்.

ஆதார் அடையாள அட்டையை வைத்துக் கொண்டு மத்திய அரசு ஆனந்தக் கூத்தாடுகிறது. இந்த விஷயத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பாக உச்சநீதிமன்றம் மத்திய அரசின் தலையில் குட்டு வைத்தது. இந்த ஆதார் அடையாள அட்டை விவகாரத்தில் பலன் அடைந்தவர் யார்? எவ்வளவு செலவிடப்பட்டது என்பதை இந்த நாட்டு மக்களுக்கு பிரதமர் மன்மோகன்சிங் சொல்ல வேண்டும்.
ஆதார் அடையாள அட்டை தொடர்பாக உச்சநீதிமன்றம் எழுப்பிய கேள்விகளை 3 ஆண்டுகளுக்கு முன்பே நான் கேட்டேன். நாட்டில் ஊடுருவியிருப்பவர்களும் ஆதார் அடையாள அட்டையைப் பெற்றுவிடுவார்கள். அது மாநிலத்தில் பிரச்சனையை உருவாக்கும் என்றேன்.

இப்போது உச்சநீதிமன்றமே குட்டு வைத்துள்ளது.

அரசின் அனைத்து துறைகளும் அனைத்து மாநிலங்களும் இந்த ஆதார் அடையாள அட்டையை ஏற்றுக் கொண்டார்களா? இந்த நாட்டு மக்களின் பல நூறு கோடி பணம் ஆதார் அட்டை எனும் உங்கள் அரசியல் நாடகத்துக்காக வீணடிக்கப்பட்டிருக்கிறதே!
காங்கிரஸ் கட்சி, நாட்டு மக்களை பிரித்து ஆட்சியை நிரந்தரமாக காப்பாற்ற முயற்சிக்கிறது. இதனால் நாட்டில் மிகப் பெரும் பிளவு ஏற்பட்டிருகிறது. நாட்டு மக்கள் ஒருமைப்பாட்டுக்காக போராடுகிறார்கள். ஆனால் காங்கிரசோ நாட்டை பிளவுபடுத்தியது. இந்த நாட்டின் அரசியல் சாசனத்தை உருவாக்கிய போதும்கூட ஜம்மு காஷ்மீருக்கு ஒரு சட்டம், ஜம்மு காஷ்மீருக்கு தனி பிரதமர், தனி கொடி என்ற பிரிவினையை உருவாக்கி பாவத்தைச் செய்தது காங்கிரஸ்.

நாட்டின் மாநிலங்களுக்கு இடையே நதிநீர் பிரச்சனையை உருவாக்கி தண்ணீருக்காக மாநில மக்கள் மோதிக் கொள்ளும் பாவத்தைச் செய்தது மத்திய அரசு. இத்தகைய பிரித்தாளும் சூழ்ச்சிதான் மொழிவாரி மாநிலங்களை உருவாக்கியது. 1857-ல் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் சுதந்திரத்துக்காகப் போராடிய போது மதத்தின் பெயரால் பிளவை உருவாக்கிய பாவத்தைச் செய்தது காங்கிரஸ்தான்!

காங்கிரஸ் கட்சி வாக்கு வங்கிகளுக்காக இத்தகைய பிரித்தாளும் சூழ்ச்சி எனும் பாவத்தைத் தொடர்கிறது காங்கிரஸ்.

அதேபோல் ஜாதிகளுக்கு இடையே முற்பட்டோர், பிற்பட்டோர் என்ற பிளவை எழுப்பியதும் காங்கிரசே! இம்மாதிரியான பிளவு மனப்பான்மை கொண்ட காங்கிரஸால் நகரம் மற்றும் கிராமங்களுக்கிடையே மோதல் வெடித்துள்ளது.

சகோதரர்களுக்கு இடையே சண்டையை மூட்டிவிட்டு ஆட்சியை தக்க வைக்க முயலும் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து இந்த நாடு விடுதலை பெற்றாக வேண்டும். நாம் காங்கிரஸைப் பற்றி அறிந்திருப்பதைவிட அதிகம் அறிந்தவர் காந்தி. அதனால்தான் நாடு விடுதலை அடைந்தவுடன் காங்கிரஸ் கட்சியை கலைக்கச் சொன்னார்.

மகாத்மா காந்தியின் அந்த விருப்பத்தை நிறைவேற்றும் பொறுப்பு நமக்கு இருக்கிறது.

நம் நாட்டைக் காப்பாற்ற காங்கிரஸ் கட்சியிடம் இருந்து, காங்கிரஸோடு சேர்ந்து செயல்படுகிற கட்சிகளிடம் இருந்து அவர்களின் தரகர்களிடம் இருந்து நாட்டை விடுவிக்க வேண்டும்.

என் அரசியல் வாழ்க்கையில் இவ்வளவு பிரம்மாண்ட கூட்டத்தை இப்போதுதான் பார்க்கிறேன். இது இளைஞர்களின் சமுத்திரமாக காட்சி தருகிறது.

நீங்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை குலைந்து போக, உங்களது கனவுகள் உடைந்து போக விடமாட்டோம். உங்கள் நம்பிக்கையை கனவை நனவாக்க எங்கள் சக்தியை முழுமையாக பயன்படுத்துவோம்.

எங்களுக்கு நம்பிக்கையை கொடுத்திருக்கும் தமிழக பா.ஜ.க. இளைஞர் அணியினருக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்” என்று பேசிய மோடி, தமது உரையின் முடிவில் “வந்தே..” என்று முழக்கம் எழுப்ப, “..மாதரம்” என்று கூட்டத்தினர் பின் தொடர்ந்து முழக்கமிட்டனர்.

Join with us on Facebook  >>>

              அறிவியல்


No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!