Friday, August 23, 2013

உலக வர்த்தகத்தில் மிக அதிகமாக பயன்படுத்தப்படும் 'டாப் 10' கரன்சிகள்

உலக வர்த்தகத்தில் மிக அதிகமாக பயன்படுத்தப்படும் 'டாப் 10' கரன்சிகள்


டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து விரைவிலேயே 65 ரூபாயை எட்டிவிடும் என்று கருதப்படும் நிலையில், உலகளவில் பங்குச் சந்தைகளில் மிக அதிகமாகப் புழங்கப்படும் கரன்சிகள் குறித்து இந்த நேரத்தில் ஆராய்வது நல்லது.

அமெரிக்க டாலர்: 

உலகம் முழுவதும் சர்வதேச வர்த்தகத்தில் மிக அதிகமாக, அன்னிய செலாவணியாகப் பயன்படுத்தப்படுவது அமெரிக்க டாலர் தான். இதனால் தான் டாலருக்கு ஏதாவது நடந்தால் உலகம் முழுவதுமே அதன் தாக்கம் உணரப்படுகிறது.

யூரோ: 

இதில் இரண்டாவது இடத்தில் இருப்பது யூரோ. ஐரோப்பிய நாடுகள் இணைந்து 1999ம் ஆண்டில் அறிமுகப்படுத்திய மிக இளம் கரன்சி தான் யூரோ. ஆனாலும் விரைவிலேயே உலகின் மிக முக்கியமான 2வது கரன்சி என்ற இடம் யூரோவுக்குக் கிடைத்துவிட்டது. இதை வெளியிடுவது ஐரோப்பிய மத்திய வங்கி.

ஜப்பானின் யென்: 

இதில் 3வது இடத்தில் இருப்பது ஜப்பானின் யென். 1871ம் ஆண்டில் அப்போதைய மெய்ஜி ஆட்சியாளர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட பணம் தான் யென்.

பிரி்ட்டிஷ் பவுண்ட்: 

உலகளவில் கரன்சி வர்த்தகத்தில் 4வது இடத்தில் இருப்பது பிரிட்டனின் பவுண்ட். இதன் முழுப் பெயர் பவுண்ட் ஸ்டெர்லிங். 1694ம் ஆண்டு உருவாக்கப்பட்ட உலகின் மிகப் பழமையாக மத்திய வங்கியான பேங்க் ஆப் இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் உள்ள கரன்சி இது.

ஆஸ்திரேலிய டாலர்: 

அடுத்த இடத்தில் இருப்பது ஆஸ்திரேலிய டாலர். 1911ம் ஆண்டு வரை தனியார் ஆஸ்திரேலிய வங்கிகளே கூட கரன்சியை அச்சடித்து வினியோகிக்கும் உரிமை பெற்றிருந்தன. பின்னர் இது ஆஸ்திரேலிய கரூவூலத்துறையின் கட்டுப்பாட்டில் வந்தது. 1959ம் ஆண்டு முதல் இதை ரிசர்வ் பேங்க் ஆப் ஆஸ்திரேலியா தான் கட்டுப்படுத்துகிறது.

ஸ்விஸ் பிராங்க்: 

உலகளவில் கரன்சிகள் வர்த்தகத்தில் 6வது இடத்தில் இருப்பது ஸ்விட்சர்லாந்து நாட்டின் பிராங்க். 1910ம் ஆண்டு முதல் ஸ்விஸ் நேசனல் பேங்க்கின் கட்டுப்பாட்டில் வினியோகமாகி வருகிறது இந்த கரன்சி.

கனடிய டாலர்: 

அடுத்து இருப்பது கனடா நாட்டு டாலர். 19ம் நூற்றாண்டின் துவக்கம் வரை கனடாவில் பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் உள்நாட்டு கரன்சிகள் புழக்கத்தில் இருந்தன. 1930களில் அமெரிக்கா, கனடாவில் ஏற்பட்ட மாபெரும் பொருளாதார மந்த நிலையைத் தொடர்ந்து 1935ம் ஆண்டில் பேங்க் ஆப் கனடா என்ற மத்திய வங்கி உருவாக்கப்பட்டு கனடா டாலர் அறிமுகமானது.

ஹாங்காங் டாலர்: 

பிரிட்டனினால் ஹாங்காங் ஆக்கிரமிக்கப்பட்டபோது அங்கு பவுண்ட், ஸ்பெயின், மெக்ஸிகோ, இந்திய ரூபாய், சீனவின் யுவான் என அனைத்து வகையான கரன்சிகளும் புழக்கத்தில் இருந்தன. 1863ல் தான் ஹாங்காங் டாலர் கரன்சி அறிமுகமானது. இதையடுத்து 1898ல் இந்தத் தீவை பிரிட்டனுக்கு லீசுக்கு விட்டது சீனா. அப்போது ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சியால் ஹாங்காங் கரன்சி பெரும் பலமடைந்தது. இப்போது உலகில் அதிகளவில் வர்த்தகம் செய்யப்படும் கரன்சிகளில் 8வது இடத்தில் இது உள்ளது.

ஸ்வீடிஷ் க்ரோனா: 

இந்த வரிசையில் 9வது இடத்தில் இருப்பது ஸ்வீடன் நாட்டின் க்ரோனா. 1873ம் ஆண்டு முதல் இந்த கரன்சி புழக்கத்தில் உள்ளது.

நியூசிலாந்து டாலர்: 

இதில் 10வது இடத்தில் இருப்பது நியூசிலாந்து டாலர். 1934ம் ஆண்டில் இந்த கரன்சி அறிமுகம் செய்யப்பட்டது.

Join with us on Facebook  >>>

              அறிவியல்

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!