Thursday, April 11, 2013

மளிகைக் கடைக்காரரின் மகளாக பிறந்து 'இரும்புப் பெண்மணி'யாக உயர்ந்த தாட்சர்!


மளிகைக் கடைக்காரரின் மகளாக பிறந்து 'இரும்புப் பெண்மணி'யாக உயர்ந்த தாட்சர்!


சிலரை அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது.. அப்படிப்பட்டவர்களில் மார்கரெட் தாட்சருக்கு முக்கிய இடம் உண்டு. மாகி என்றும், இரும்புப் பெண்மணி என்றும் செல்லமாக அழைக்கப்பட்டவர் தாட்சர். மறைந்த தாட்சர்தான் இங்கிலாந்தின் முதல் பெண் பிரதமர் ஆவார். மிகுந்த தைரியமும், மதி நுட்பமும், துணிச்சலாக செயல்படும் தன்மையும் கொண்டவர் தாட்சர்.

சாதாரண மளிகைகடைக்காரின் மகளாக பிறந்த தாட்சர் பின்னாளில் இங்கிலாந்தின் பிரதமராக, உலகமே பார்த்து வியக்கும் தலைவராக மாறியது வரலாறு. தாட்சரின் வாழ்க்கையிலிருந்து சில துளிகள்...1925ல் பிறந்து... 

1925ம் ஆண்டு கிராந்தம் என்ற இடத்தில் மார்கரெட் ராபர்ட் என்ற பெயருடன் பிறந்தார் தாட்சர்.


ஆக்ஸ்போர்டில் கல்வி 

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் வேதியியல் பட்டப்படிப்பை முடித்தார் தாட்சர்.


1951ல் திருமணம் 

1951ம் ஆண்டு டெனிஸ் தாட்சரை மணந்தார்.


இரட்டைக் குழந்தைகள் 

தாட்சர் தம்பதிக்கு கரோல் மற்றும் மார்க் என இரட்டைக் குழந்தைகள் உள்ளனர்.


1959ல் எம்.பி. ஆனார் 

1959ம் ஆண்டு முதல் முறையாக எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார் தாட்சர்.


டோரிகளின் தலைவியானார் 

1975ம் ஆண்டு கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவியானார் மார்கரெட் தாட்சர்.


79 முதல் 90 வரை பிரதமர் 

1979ம் ஆண்டு முதல் முறையாக பிரதமரானார் தாட்சர். அதன் பின்னர்1990 வரை அவர் அசைக்க முடியாத பிரதமராக பதவியில் தொடர்ந்தார்.


வரலாறு படைத்தவர் 

1975ல் நடந்த கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பதவிக்கு வில்லி ஒயிட்லா போட்டியிட்டார். அவரை எதிர்த்து துணிச்சலுடன் களம் இறங்கிய மார்கரெட் தாட்சர் தேர்தலி்ல் வெற்றி பெற்றபோது அனைவரும் அசந்து போயினர். காரணம், கட்சித் தலைவராக பெண் ஒருவர் வெற்றி பெற்றது அதுவே முதல் முறை என்பதால்.


நாட்டின் முகத்தை மாற்றியவர் 

பிரதமர் பதவியில் மார்கரெட் தாட்சர் இருந்த காலகட்டத்தில் இங்கிலாந்தின் முகத்தையே அவர் மாற்றியமைத்தார். உலகின் தலை சிறந்த தலைவர்களில் ஒருவராக உயர்ந்திருந்தார்.


அனைவரையும் ஒருங்கிணைத்தவர் 

நாடு எப்படி இருக்க வேண்டும், நிர்வாகம் எப்படி இருக்க வேண்டும் என்பதை கண்டிப்புடன் செயல்படுத்திக் காட்டியவர் தாட்சர். அரசியல்வாதிகள், நிர்வாகம், தொழிற்சங்கங்கள் என மூன்று முக்கியப் பிரிவினரையும் ஒருங்கிணைத்து, அரவணைத்து அரசை நடத்தியவர் தாட்சர்.


பொருளாதாரத்தை நிமிர்த்தியவர் 

சரிந்து போய்க் கிடந்த இங்கிலாந்தி பொருளாதாரத்தை தூக்கிய நிறுத்திய பெருமையும் தாட்சருக்கு உண்டு. மிகப் பெரிய சாதனைகளை தாட்சர் இதில் படைத்துள்ளார்.


அப்பாவைப் போல பொறுப்பானவர் 

மார்கரெட்டின் தந்தை ராபர்ட் மிகவும் சிக்கணமாக வாழ்க்கை நடத்தியவர். ஒரு காசு செலவழிப்பது என்றாலும் பலமுறை கணக்குப் பார்த்து செய்தவர். மளிகைக் கடை வியாபாரம்தான் ராபர்ட்டின் குடும்பத்தைக் காப்பாற்றியது என்பதால் எப்போதும் வியாபாரம், வியாபாரம் என்றிருப்பார். தந்தையைப் பார்த்து தான் நிறையக் கற்றுக் கொண்டதாக தாட்சர் பலமுறை கூறியுள்ளார்.


அழகிய கவிஞர் 

சிறுவயதில் நிறையக் கவிதைகள் எழுதியுள்ளார் மார்கரெட் தாட்சர். இவருக்குப் பிடித்த கவி மேதை ருட்யார்ட் கிப்ளிங்.


ஆய்வாளராக சில காலம் 

வேதியியலில் பட்டப் படிப்பை முடித்த பின்னர் ஆய்வில் இறங்கினார். சில காலம் எஸ்ஸக்ஸில் உள்ள பிளாஸ்டிக் ஆலை ஒன்றில் ஆய்வாளராகவும் வேலை பார்த்துள்ளார்.


தேர்தலில் தோல்வி.. காதலில் வெற்றி 

1950ல் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். இந்த சோகம் அவரைத் தாக்கிய நிலையில் டெனிஸ் தாட்சரை சந்தித்தார். காதலில் விழுந்தார். அடுத்த ஆண்டே இருவரும் மணம் புரிந்து கொண்டனர்.


1959ல் மாபெரும் வெற்றி 

சில தேர்தல்களில் நின்று தோல்வியடைந்த நிலையில், 1959ல் நடந்த தேர்தலில் மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வென்றார் மார்கரெட்.


மார்கரெட் தாட்சர்.. மில்க் ஸ்னாட்சர் 

இவர் பின்னர் கல்வி அமைச்சர் பதவிக்கும் உயர்ந்தார். அப்போது இவர் செய்த காரியம், இவருக்கு சுவாரஸியமான பட்டப் பெயரை பெற்றுத் தந்தது. பள்ளிகளுக்கு வழங்கிய இலவச பால் திட்டத்தை ரத்து செய்தார் தாட்சர். இதனால் இவரை எதிர்க்கட்சியினர் மார்கரெட் தாட்சர்.. மில்க் ஸ்னாட்சர் என்று கேலி செய்ய ஆரம்பித்தனர்.


இங்கிலாந்தின் காமராஜர் 

ஆனால் கல்வித்துறைக்கு இவர் நிறைய செய்துள்ளார் என்பதுதான் முக்கியமானது. கிட்டத்தட்ட இங்கிலாந்தின் காமராஜர் என்று கூறும் அளவுக்கு கல்விக்கு நிறைய செய்துள்ளார். பல சீர்திருத்தங்களை கொண்டு வந்தார். 16 வயது வரை கட்டாயக் கல்வித் திட்டம் அதில் ஒன்று. நர்சரி பள்ளித் திட்டத்தை விரிவுபடுத்தினார்.


எதிர்க்கட்சித் தலைவியாக கலக்கியவர் 

எதிர்க்கட்சித் தலைவியாக கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக பணியாற்றியுள்ளார் தாட்சர். தனது கட்சியை அடிமட்ட அளவில் ஸ்திரப்படுத்தினார். அனைவரும் பார்த்து மிரளும் அளவுக்கு கட்சியை வலுப்படுத்தி கட்டுக்கோப்பாக வைத்திருந்தார். தன்னையும் இந்த காலகட்டத்தில் வளர்த்துக் கொண்டார்.


பிரதமராக பிரமாதப்படுத்தியவர் 

பிரதமர் பதவியில் முதல் முறையாக அமர்ந்தபோது பல சீர்திருத்தங்கள மேற்கொள்ள வேண்டிய நிலையில் இருந்தார் தாட்சர். அதில் முக்கியமானது வருமான வரி விகிதத்தை குறைத்தது. இதுபோக மேலும் பல வரி சீர்திருத்தங்களை அவர் மேற்கொண்டார்.


தீவிரவாத தாக்குதலில் உயிர் தப்பினார் 

அயர்லாந்து தீவிரவாதிகள் வைத்த குறியில் ஒருமுறை தாட்சர் சிக்க நேரிட்டது. 1984ம் ஆண்டு அக்டோபர் மாதம் பிரைட்டன் நகரி்ல நடந்த கட்சி மாநாட்டின்போது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதில் தாட்சர் உயிர் தப்பினார். ஆனால் 6 பேர் உயிரிழந்தனர்.


தைரியமாக எதிர்கொண்டார் 

இந்தத் தாக்குதலை கடுமையாக கண்டித்த தாட்சர், தீவிரவாதிகளை கண்டு பயப்பட மாட்டேன், பூண்டோடு ஒழிப்பேன் என்று வீராவேசமாக பேசியபோது இங்கிலாந்து மக்கள் அசந்து போயினர்.


அயர்லாந்து தீவிரவாதத்தை கட்டுக்குள் கொண்டு வந்தார் 

சொன்னதற்கேற்ப தீவிரமாக செயல்பட்ட தாட்சர், 1985ம் ஆண்டே அயர்லாந்து தீவிரவாத அமைப்புக்கும், இங்கிலாந்து அரசுக்கும் இடையே ஒப்பந்தத்தை ஏற்படுத்தும் அளவுக்கு நிலைமையை மாற்றினார்.


புயலுக்குப் பின் 

அமைதி பிரதமராக பல காலம் இங்கிலாந்தை திறம்பட இயக்கிய தாட்சர் தனது ஓய்வுக்குப் பின்னர் பொது வாழ்க்கையில் தலை காட்டாமல் ஒதுங்கியிருந்தார். சுயசரிதம் எழுதினார். பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா சென்றார். குறிப்பாக அவரது மனம் கவர்ந்த அமெரிக்காவை வலம் வந்தார்.


பெரும் வெற்றிடம் 

சாதாரண ஒரு தலைவராக மார்கரெட் தாட்சர் இருந்ததில்லை. இரும்புப் பெண்மணியாக, புத்திசாலியாக, புதுமை விரும்பியாக திகழ்ந்தவர். சாதாரணர்கள் முதல் ராஜ குடும்பம் வரை, எலிசபெத் ராணிவரை அத்தனை பேரின் அன்பையும் பெற்றிருந்தவர் தாட்சர். அவரது மறைவு நிச்சயம் இங்கிலாந்தில் பெரும் வெற்றிடத்தையே ஏற்படுத்தியுள்ளது. தாட்சருக்குப் பிறகு பெயர் சொல்லும் பிரதமரை இங்கிலாந்து கண்டதில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது!