Thursday, April 11, 2013

டெஸ்ட் டியூப் கருத்தரிப்பு உருவாக்கிய டாக்டர் ராபர்ட் எட்வர்ட்ஸ் மரணம்

டெஸ்ட் டியூப் கருத்தரிப்பு முறையை உருவாக்கிய டாக்டர் ராபர்ட் எட்வர்ட்ஸ் மரணம்











உலகம் முழுவதும் உள்ள இயற்கையான முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் உள்ள பெண்களின் கண் கண்ட கடவுளாக போற்றப்படும் சர் ராபர்ட் எட்வர்ட்ஸ் தனது 87வது வயதில் மரணமடைந்தார். இவர்தான் சோதனைக் குழாய் மூலம் கருத்தரிக்கும் முறையை உருவாக்கியவர் ஆவார்.

எட்வர்ட்ஸ் அன்று ஆரம்பித்து வைத்த இந்த சோதனைக் குழாய் கருத்தரிப்பு முறை உலகம் முழுவதும் இன்று வெகு பிரபலமாக உள்ளது. உலகில் இன்று கிட்டத்தட்ட 50 லட்சம் சோதனைக் குழாய் முறையில் பிறந்த குழந்தைகள் நடமாடிக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சோதனைக் குழாய் குழந்தை முறையைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் டாக்டர் ராபர்ட். உலகின் முதல் சோதனைக் குழாய் முறை குழந்தை 1978ம் ஆண்டு ஜூலை 25ம் தேதி இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் பிறந்தது. அது ஒரு பெண் குழந்தையாகும். அக்குழந்தையின் பெயர் லூயிஸ் பிரவுன். 2010ம் ஆண்டு ராபர்ட்டுக்கு நோபல் பரிசு கிடைத்தது. 2011ல் இங்கிலாந்தின் நைட் பட்டம் கிடைத்தது.

உலகம் முழுவதும் இயற்கையான குழந்தைப் பேறை அடைய முடியாத பெண்களுக்கு தெய்வம் போல இன்று துணை நிற்பது இந்த சோதனைக் குழாய் கருத்தரிப்பு முறைதான்.

இங்கிலாந்தில் மட்டும் ஆண்டுக்கு சராசரியாக 1 லட்சத்து 80 ஆயிரம் சோதனைக் குழாய் குழந்தைகள் பிறப்பதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

தன்னுடைய கண்டுபிடிப்பால் பிறந்த முதல் குழந்தையான லூயிஸ் பிரவுன் மீது மிகுந்த பாசத்துடன் இருந்தார் ராபர்ட். தனது குழந்தை போலவே அதை பாசத்துடன் கவனித்து வந்தார். லூயிஸ் பிரவுனுக்கும், வெஸ்லி முலிந்தருக்கும் திருமணம் நடந்தபோது கூடவே இருந்தார். லூயிஸ் பிரவுனுக்கு 2006ம் ஆண்டு இயற்கையான முறையில் மகன் பிறந்தான். அந்த பிரசவத்தின்போதும் ராபர்ட் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது 34 வயதாகும் லூயிஸ் பிரவுன், ராபர்ட்டின் மரணம் தன்னை சிதறடித்திருப்பதாக கண்ணீருடன் குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், எனது தாத்தா போலவே என் மீது பாசமாக இருந்தார் ராபர்ட். அவரது மறைவை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றார்.

நீண்ட காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு ராபர்ட் மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். அவருக்கு ரூத் என்ற மனைவியும், 5 மகள்கள், 12 பேரக்குழந்தைகள் உள்ளனர்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!