Thursday, November 15, 2012

FINALLY, தமிழக அரசு புரிந்தது சாதனை! தீபாவளி சோமபான விற்பனை ரூ.480 கோடி!

FINALLY, தமிழக அரசு புரிந்தது சாதனை! தீபாவளி சோமபான விற்பனை ரூ.480 கோடி!




தமிழக அரசு மந்தகதியில் செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டை, அடித்து நொறுக்கியுள்ளது தற்போதைய அ.தி.மு.க. அரசு.

இந்த தீபாவளியின்போது, முன் எப்போதும் இல்லாத சாதனையை புரிந்துள்ளது. மக்களுக்கு தாராள மது சப்ளை இருக்கும்படி பார்த்துக் கொண்டதில், தீபாவளியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அமோகமாக நடந்துள்ளது.

மின்வெட்டு இருந்தபோதிலும், சரக்கு தட்டுப்பாடு இருந்ததாக யாரும் புகார் சொல்லாமல் பார்த்துக்கொண்டது நமது சாதனை அரசு.

தீபாவளி மற்றும் அதற்கு முந்தைய நாளில் மட்டும் ரூ.270 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த தீபாவளியன்று ரூ.20 கோடி அதிகமாக விற்பனையாகி உள்ளது.

தமிழகம் முழுவதும் 6,823 டாஸ்மாக் கடைகள் உள்ளன. ஒவ்வொரு கடைக்கும் 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை சரக்குகள் கூடுதலாக அனுப்பப்பட்டன. இந்த கடைகள் மூலம் கடந்த சில நாட்களாக தினமும் சராசரியாக ரூ.80 கோடி முதல் ரூ.100 கோடி வரை மதுபான விற்பனை நடந்துள்ளது.

இதன் காரணமாக தீபாவளிக்கு 4 நாட்களுக்கு முன்பே விற்பனை ரூ.100 கோடியை தாண்டியது. நவம்பர் 10ம் தேதி ரூ.110 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டது. நவம்பர் 11ம் தேதி ரூ.100 கோடிக்கு விற்பனையானது.

உச்சகட்டமாக தீபாவளிக்கு முதல் நாளான 12ம் தேதி ரூ.150 கோடிக்கு விற்பனை நடந்துள்ளது. தீபாவளியன்று ரூ.120 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. தீபாவளி முதல் நாள் மற்றும் தீபாவளியன்று என 2 நாளில் மட்டும் ரூ.270 கோடி வசூலானது. கடந்த தீபாவளியன்று ரூ.100 கோடிதான் வசூலானது.

தீபாவளியையொட்டி ரூ.480 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவித்தன. இலக்கை அடைந்ததற்கு மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டதும் ஒரு காரணம். டாஸ்மாக் கடைகளில் மது விலை 3 முறை ஏற்றப்பட்டது. பீர் விலை ரூ.10 முதல் ரூ.15 வரை அதிகமானது. அதேபோல பிராந்தி, விஸ்கி போன்றவை ரூ.5 முதல் ரூ.40 வரை விலை உயர்த்தப்பட்டது.

விலை உயர்வு குறித்து யாரும் போராட்டம் நடத்தவில்லை, விஜயகாந்த் உட்பட!




No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!