Monday, November 12, 2012

தரை தட்டிய 12 நாட்களுக்கு பிறகு கடலுக்குள் இழுக்கப்பட்டது பிரதிபா சரக்கு கப்பல்

தரை தட்டிய 12 நாட்களுக்கு பிறகு கடலுக்குள் இழுக்கப்பட்டது பிரதிபா சரக்கு கப்பல்






பட்டினப்பாக்கம் அருகே தரைதட்டிய கப்பல் 12 நாட்களுக்கு பிறகு நேற்று மாலை வெற்றிகரமாக கடலுக்குள் இழுத்துச்செல்லப்பட்டது.
கடந்த மாதம் 31ம் தேதி வீசிய நிலம் புயலில் சிக்கிய பிரதிபா காவேரி சரக்கு கப்பல் எலியட்ஸ் கடற்கரை அருகே ஊரூர்குப்பம் பகுதியில் கரை ஒதுங்கியது. பின்னர் அலையின் சீற்றத்தால் நகர்ந்து பட்டினப்பாக்கம் அருகே தரை தட்டி நின்றது. அதை மீட்கும் பணி கடந்த 5ம் தேதி தொடங்கியது.

 கப்பலை கடலுக்குள் இழுக்க மாளவியா, ரத்னா என்ற இழுவைக் கப்பல்கள் சென்னை வந்தன. மீட்பு பணியில் ஈடுபட ஒரு கப்பலுக்கு மட்டுமே வாடகை தரமுடியும் என கப்பல் நிர்வாகம் கூறியதால் மாளவியா என்ற இழுவைக் கப்பல் மட்டும், தரை தட்டிய கப்பலை இழுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தது.

முதலில் நைலான் கயிறு கட்டி கப்பலை இழுத்தனர். கயிறு அறுந்து விழுந்ததால் மீட்பு பணி தோல்வி அடைந்தது. மேலும் கப்பல் 10 அடி ஆழத்துக்கு மண்ணில் புதைந்திருந்தது. இதனால் கப்பலை நகர்ந்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து கப்பலின் எடையை குறைக்க முடிவு செய்தனர். அதில் இருந்த 5500 டன் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதையடுத்து, இரும்பு கயிறு மூலம் இழுக்கும் முயற்சி தொடர்ந்தது.

இதனால் தரை தட்டிய கப்பல் 120 டிகிரி கடல்நோக்கி நகர்ந்தது. நேற்று மதியம் முதல் பிரதிபா காவேரி தரை தட்டியப்பகுதியில் கடல் அலையின் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. மாலை 5 மணியளவில் அலையின் வேகம் மேலும் அதிகரிக்க தொடங்கியது. அலையின் காரணமாக நீர் மட்டம் உயர்ந்தால் எளிதில் கப்பலை கடலுக்குள் இழுத்து சென்று விடலாம் என்று மீட்பு குழுவினர் கருதினர். அப்போது, முதன்மை இன்ஜினியர் ஆலன்ப்ளூ மாலை 6.20 மணியிலிருந்து 6.45 மணிக்குள் ராட்சத அலை வரும் என தெரிவித்தனர். அந்த நேரத்திற்காக மீட்பு குழுவினர் காத்திருந்தனர்.

சரியாக மாலை 6.20 மணிக்கு வந்த ராட்சத அலை மீட்பு பணிக்கு சாதகமாக இருந்ததால், கப்பல் எளிதாக இழுக்கப்பட்டு கடலுக்குள் நகர்ந்தது. இதை பார்த்ததும் அங்கு திரண்டு இருந்த லட்சக்கணக்கான மக்கள் கையை அசைத்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். சரக்கு கப்பல் மறையும் வரை காத்திருந்துவிட்டு பின்னர் புறப்பட்டு சென்றனர்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!