கடைசி ஆமையும் இறக்க அரிய ஆமை இனம் அழிந்தது
எக்வடோர் நாட்டின் தீவான கேலப்பகோஸ் தீவில் அமைந்திருக்கும் கேலப்பகோஸ் தேசியப் பூங்காவில் நூறு வயதான ஒரு அரிய ஆமை இறந்து விட்டதாக அந்த தேசியப் பூங்காவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
'தன்னந்தனி ஜார்ஜ்' ( லோன்சம் ஜார்ஜ்) என்று அழைக்கப்பட்ட இந்த அரிய ஆமை, அதன் இனத்தில் கடைசி ஆமையாகக் கருதப்படுகிறது.
இதன் வயது 100 இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கணிக்கின்றனர்.
இதன் மரணத்திற்குக் காரணம் என்ன என்பதைக் கண்டறிய பிரேதப் பரிசோதனை நடத்தப்படும் என இந்தப் பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதைக் கடந்த 40 ஆண்டுகளாகப் பராமரித்து வந்த பூங்கா ஊழியர் பட்டியில் அது இறந்து கிடந்ததைக் கண்டார்.
இதன் உட்பிரிவு வகை ஆமைகள் சுமார் 200 ஆண்டுகள் உயிருடன் வாழும் என்பதை வைத்துப் பார்க்கையில், லோன்சம் ஜார்ஜ் ஒரு இளம் வயது ஆமை என்றே கூறலாம்.
அரிய இனம்
லோன்சம் ஜார்ஜ் முதலில் 1972ல் கேலப்பகோஸ் தீவான பிண்டாவில் ஒரு ஹங்கேரிய நாட்டு விஞ்ஞானியால் கண்டுபிடிக்கப்பட்டது.
அப்போதெல்லாம், இந்த வகை ஆமைகள் அழிந்து விட்டதாகவே பலரும் கருதியிருந்தனர்.
லோன்சம் ஜார்ஜ் இந்த தேசியப் பூங்காவின் ஆமை விருத்தித் திட்டத்தின் ஒரு அங்கமாக சேர்க்கப்பட்டது.
சுமார் 15 வருடங்கள் ஒரு பெண் ஆமையோடு சேர்ந்து வாழ்ந்த பின்னர், ஒரு வழியாக லோன்சம் ஜார்ஜ் அந்தப் பெண்ணோடு சேர்ந்தது.
ஆனால் அந்தப் பெண் ஆமை பொரித்த முட்டைகளிலிருந்து குஞ்சுகள் வெளிவரவில்லை.
லோன்சம் ஜார்ஜின் மரணத்தை அடுத்து, அந்த பிண்டோ உட்பிரிவு ஆமைகள் இல்லாதொழிந்து விட்டதாக கேலப்பகோஸ் தேசியப் பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது போன்ற பெரிய ஆமை ரகங்கள் கேலப்பகோஸ் தீவுகளில் 19ம் நூற்றாண்டின் பிற்காலம் வரை மிகவும் அதிகமாகக் காணப்பட்டன.
ஆனால் கடலோடிகளும், மீனவர்களும் இந்த ரக ஆமைகளை அவைகளின் இறைச்சிக்காக வேட்டையாடிதன் விளைவாக அவை மிகவும் அரிதாகிவிட்டன.
அவை வாழும் இடங்களில் , எக்வடோர் பெருநிலப்பரப்பிலிருந்து, ஆடுகளை அறிமுகப்படுத்திய பின்னர், அவைகளின் வசிப்பிடங்கள் மேலும் பாதிப்படைந்தன.
கேலப்பகோஸ் தீவுக்கூட்டங்களில் இருக்கும் பல்வேறு தீவுகளில் காணப்பட்ட வெவ்வேறு ஆமையினங்களின் தோற்றங்களை வைத்துத்தான், பிரிட்டிஷ் இயற்கை விஞ்ஞானியான சார்லஸ் டார்வின், பிரபலமான தனது பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை உருவாக்கினார்.
கேலப்பகோஸ் தீவுகளில் மற்ற ஆமையின உட்பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 20,000 ஆமைகள் இன்னும் வாழ்கின்றன
Click to See the Video
Thanks : BBC




No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!