Monday, January 6, 2014

“இத்துபோன நடிகரை கத்தவைத்த தி.மு.க.” தே.மு.தி.க.வில் பிரேமலதா அடித்து ஆடுகிறார்!

“இத்துபோன நடிகரை கத்தவைத்த தி.மு.க.” தே.மு.தி.க.வில் பிரேமலதா அடித்து ஆடுகிறார்!




வரும் லோக்சபா தேர்தலில் தே.மு.தி.க. கூட்டணி வைத்துக் கொள்ளப்போவது, (கடவுளையும் மக்களையும் தவிர) யாருடன் என்ற கேள்வி பரபரப்பாக அடிபட்டுக் கொண்டுள்ள நிலையில், தி.மு.க.-வை போட்டு தாக்கியுள்ளார், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா.

தே.மு.தி.க. பொதுக்குழு கூட்டத்தில் பேசிய பிரேமலதா, “கடந்த தி.மு.க. ஆட்சியில் எங்கள் திருமண மண்டபத்தை இடித்தனர்; வருமான வரி சோதனை நடத்த தூண்டினர். இதையெல்லாம் விட, ‘இத்துபோன நடிகர்’ ஒருவரை விஜயகாந்திற்கு எதிராக எவ்வளவு கொச்சையாக பேச வைக்க முடியுமோ, அவ்வளவு கொச்சையாக பேச வைத்தனர். அதை, தங்களின் டிவியில் நேரடியாக ஒளிபரப்பும் செய்து, அசிங்கப்படுத்தினர்.

தி.மு.க.வினரால் ஏற்பட்ட ரணங்கள் இன்னமும் ஆறவில்லை. அதேபோல ஜெயலலிதாவும் இப்போது வழக்கு மேல் வழக்கு போட்டு வருகிறார்” என்று பேசினார்.

பிரேமலதாவின் குரல்தான் தே.மு.தி.க.வில் எடுபடும் என்றால், தமிழகத்தின் இரு பெரிய கட்சிகளுடனும் இவர்களது கூட்டணி கிடையாது.

சரி. தே.மு.தி.க.வில் ‘எடுபடக்கூடிய’ மற்றொரு குரல், மச்சான் சுதீஷின் குரல் அல்லவா? என்ன சொல்கிறது அந்தக் குரல்?

தே.மு.தி.க. பொதுக்குழு கூட்டத்தில் மச்சானும் பேசினார். அவர் பேசுகையில், “எட்டு ஆண்டுகளுக்கு முன், மத்திய அமைச்சர் மகன் ஒருவரை நான் சந்தித்தேன். அப்போது அவர், “உங்கள் கட்சியின் பெயர் என்ன?” என கேட்டு என்னை கிண்டல் செய்தார். அதே நபரை சமீபத்தில் ஒரு திருமண நிகழ்ச்சியில் பார்த்தேன். இருக்கையில் இருந்து எழுந்து ஓடி வந்த அவர், எப்படி இருக்கிறீர்கள்; விஜயகாந்தை கேட்டதாகச் சொல்லுங்கள் என்றார். இதையெல்லாம் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

லோக்சபா தேர்தலின், ‘கிங் மேக்கர்’ என விஜயகாந்தை பலரும் கூறுகின்றனர். ஆனால் 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அவர்தான், ‘கிங்’ ஆக இருப்பார்” என்றார்.

‘கிங் மேக்கர்’ என்று விஜயகாந்தை மற்றையவர்கள் சொல்வதாக கூறும் சுதீஷ், “அவர் கிங்” என்று பட்டம் சூட்டுகிறார் என்றால்… நமக்கு ஒரு கேள்வி: ‘கிங் மேக்கர்’ ஆக இருந்த கேப்டனை ‘கிங்’ ஆக மச்சான் மேக் பண்ணினால், ‘நெசமான கிங் மேக்கர்’ மச்சான் சுதீஷ் என்று அர்த்தமாகிறதே…

‘கிங்’, ‘கிங் மேக்கர்’ இருவரும், கடலில் இறங்கிய ‘வைகிங்ஸ்’ (Vikings) ஆகாதவரை சந்தோஷம்தான்!




No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!