Thursday, June 20, 2013

அரிக்கும் உச்சந்தலைக்கு சில பயனுள்ள வீட்டுச் சிகிச்சைகள்!!!

அரிக்கும் உச்சந்தலைக்கு சில பயனுள்ள வீட்டுச் சிகிச்சைகள்!!!


பொடுகுத் தொல்லையா? சீப்புகளில் வெள்ளை செதில்களா? கருப்பு ஆடைகளில் வெள்ளை நிற தூசிகள் படிகிறதா? உங்களுடைய உச்சந்தலையில் நமைச்சலா? மேற்கூறிய எல்லா கேள்விகளுக்கும் உங்களுடைய பதில் ஆம் எனில், உச்சந்தலை சரும நோயினால் கண்டிப்பாக பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என அர்த்தம்.

உச்சந்தலை சரும நோய் என்பது உச்சந்தலையில் மேல் சருமத்தை வறண்டு போகச் செய்து விடும். வறண்ட மேல் சருமம் தனியே பிரிந்து மீன் செதில்கள் போன்ற தோற்றத்தை தரும். சில நேரங்களில் இது வெடிப்பை உருவாக்கிவிடும். சில சமயங்களில் அந்த செதில்கள் வழியே இரத்தம் வரலாம். அவ்வாறு இரத்தம் வந்தால் மருத்துவரை உடனடியாக ஆலோசிப்பது மிகவும் நல்லது.

இந்த பிரச்சனையை எளிதில் வீட்டிலிருந்தபடியே குணப்படுத்தலாம். இதற்கு நாம் காலங்கலமாக பயன்படுத்தும் வழிமுறைகள் கைக்கொடுக்கின்றன. அதிகம் பணம் பிடுங்கும் நவீன மருத்துத்தை காட்டிலும் பழங்கால வழிமுறைகள் உச்சந்தலை சரும பிரச்சனைக்கு நல்ல தீர்வளிக்கின்றன. இப்போது அத்தகைய சிறந்த வழிமுறைகளைப் பற்றித் தான் பார்க்கப் போகிறோம்.

உலர வைக்கும் முறை 

ஹேர் ட்ரையர் (Hair dryer) பயன்படுத்துவதை முதலில் நிறுத்த வேண்டும். மேலும் சூடான நீரில் நனைத்த துணியை தலையில் கட்டும் சிகிச்சையை எடுத்துக் கொண்டிருந்தால் அதையும் முற்றிலும் நிறுத்தி விட வேண்டும். ஏனெனில் அது உச்சந்தலையை கடுமையாக உலர்த்தி, பொடுகுகளை அதிகரிக்க செய்து விடும். மேலும், பொடுகு மற்றும் அரிப்பு தொல்லையை அதிகரிக்கும். ஆகவே கேசத்தை காய வைக்க வேண்டுமெனில், ஒரு மென்மையான துண்டு கொண்டு மெதுவாக தேய்க்கலாம். அது உச்சந்தலையை பாதுகாக்கும்.

பொடுகுத் தொல்லை 

சரும வறட்சியால், ஸ்கால்ப்பில் வெள்ளை செதில்கள் ஏற்படுவதோடு, தலையில் அரிப்பையும் ஏற்படுத்திவிடும். எனவே, பொடுகை நீக்குவது மட்டுமே பிரதான பணியாக இருக்க வேண்டும். அதற்கு மூலிகை பொடுகு எதிர்ப்பு ஷாம்புவை பயன்படுத்த வேண்டும். இது மிகவும் லேசானது. மேலும் இதில் எந்தவித இரசாயன பொருட்களும் கிடையாது. இதை மிக மெதுவாக உச்சந்தலையில் தடவி குளித்து வந்தால் பொடுகு தொல்லை குறையும்.

ஈரப்பதம் 

பொடுகுத் தொல்லை பிரச்சனையானது வறட்சியால் ஏற்படுகிறது. எனவே உச்சந்தலை சரும பிரச்சனைகளை தீர்ப்பதற்கு, அதை வறண்டு போகாமல் பாதுகாப்பது மட்டுமே ஒரே சிறந்த வழியாகும். நல்லெண்ணையை தலையில் தேய்த்து எண்ணெய் குளியல் எடுப்பது தொன்று தொட்டு வரும் ஒரு பழக்கமாகும். இது தலையின் வறட்சியை போக்கி பொடுகுத் தொல்லையை குறைத்து பல அற்புதங்களை செய்கிறது. அதற்கு இரவு படுக்கைக்கு செல்லும் பொழுது, உச்சந்தலையில் எண்ணையை தடவ வேண்டும். அதிலும் வைட்டமின் ஈ நிறைந்துள்ள எண்ணெயை பயன்படுத்தி உச்சந்தலைக்கு மசாஜ் செய்யலாம். ஏனெனில் வைட்டமின் ஈ முடிகளுக்கு மிகவும் நல்லது.

ஆப்பிள் சீடர் வினிகர் 

ஆப்பிள் சீடர் வினிகரானது உச்சந்தலையின் வறட்சியை குறைப்பதில் பெரிதும் உதவுகிறது. ஒரு 1/4 கப் வினிகர் மற்றும் 1/4 கப் தண்ணீரை சேர்த்து ஒரு கலவையை தயார் செய்து, அந்த கலவையை உச்சந்தலையில் மெதுவாக தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின் தலையை நன்றாக அலசி விட வேண்டும்.

தேயிலை மர எண்ணெய் (Tea tree oil) 

இது சிறந்த பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு தன்மைகளை கொண்ட எண்ணெய் ஆகும். இந்த எண்ணெயை உச்சந்தலையில் தடவி வர, பொடுகு மற்றும் உச்சந்தலை நோய்கள் குணமாகும். இரண்டு தேக்கரண்டி எண்ணெய்க்கு ஒரு தேக்கரண்டி தண்ணீர் விட்டு, எண்ணெயை நீர்த்து போகச் செய்து, பின் உச்சந்தலையில் தடவி மசாஜ் செய்து வந்தால், உச்சந்தலை பிரச்சனைகள் நீங்கும்.

எலுமிச்சை சாறு 

ஒரு கப் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து, உச்சந்தலையில் நேரடியாக தேய்க்க வேண்டும். சுமார் முப்பது நிமிடங்கள் ஊற வைத்து, தலையை அலசவும். இது நல்ல பலன் தந்தாலும், ஸ்கால்ப்பில் வெடிப்பு இருந்தால் இதை பின்பற்ற கூடாது என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.


No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!