Monday, January 21, 2013

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: காளைகள், காளைகளை அடக்கிய சில ஆக்ஷன் போட்டோக்கள்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: காளைகள், காளைகளை அடக்கிய சில ஆக்ஷன் போட்டோக்கள்!




ஜல்லிக்கட்டு தமிழகத்தின் வெவ்வேறு இடங்களில் நடந்தாலும், உலகப் புகழ்பெற்றது, மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், அலங்காநல்லூரில் (சென்னையில் இருந்து சுமார் 530 கி.மீ.) நடைபெறும் ஜல்லிக்கட்டுதான். இந்த ஜல்லிக்கட்டை பார்க்க தமிழகத்தின் மற்றைய பகுதிகளில் இருந்து வருபவர்களுடன், வெளிநாடுகளில் இருந்தும் பார்வையாளர்கள் ஒவ்வொரு வருடமும் வந்து குவிந்து விடுவார்கள்.


இந்த ஆண்டு அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டில், சீறிப் பாய்ந்த முரட்டுக் காளைகளை அடக்கப் பாய்ந்தவர்களில், 36 பேர் காயமுற்றனர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கு, தங்கக் காசு, லேப்டாப், பிரிஜ், வாஷிங் மெஷின், எல்.சி.டி. டிவி போன்ற பரிசுகள் கிடைத்தன.


இந்த ஜல்லிக்கட்டில் ஒவ்வொரு வருடமும் அடங்காத காளைகள் வீரர்களைப் படுமோசமாக காயப்படுத்திவிடும். இதை எல்லாம் பொருட்படுத்தாமல் வீர சாகசத்துடன் காளையை மூக்கணாங் கயிறு பிடித்து அடக்கி வெற்றி வாகைசூடுவதே இதன் சிறப்பு.



அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு பெரும்பாலான காளைகள் கோவை, கம்பம், காங்கேயம், ராமநாதபுரம், தஞ்சை, புதுக்கோட்டை, சேலம் ஆகிய இடங்களிலிருந்து லாரிகள் மூலமாக கொண்டு வரப்படும்.



இங்கு கொண்டுவரப்படும் காளைகள் விவசாயத்திற்கோ மற்ற வேலைகளுக்கோ பயன்படுத்தாமல் ஜல்லிக்கட்டுக்காகவே வளர்க்கப்பட்டவை. இந்த ஆண்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட, 473 காளைகளை அடக்க, 361 வீரர்கள், வாடிவாசலில் தயாராக நின்றனர்.



இந்த ஜல்லிக்கட்டு, தமிழகத்தில் மிகப் பழமையான வீர விளையாட்டு. மன்னர்கள் ஆண்ட காலத்தில் கிராமங்களில் ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் வீரர்களையே பெண்கள் மணந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. (ஆனால் இப்போது மாப்பிள்ளை ஜல்லிக்கட்டுக்கு போறார்னு தெரிஞ்சா, இந்த இடம் நம்ம புள்ளைக்கு ஒத்துவராது என்று ஒதுங்கிவிடுவார்கள்)



சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதல்படி, இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு விழாவை, மாவட்ட வருவாய் அலுவலர் ரவீந்திரன் காலை, 7:55 மணிக்கு தொடக்கி வைத்தார். வாடிவாசல் வழியாக, கோயில் காளை முதலில் விடப்பட்டது. அதை, வீரர்கள் பிடிக்கவில்லை. ஒரு நிமிடத்திற்கு ஒரு காளை என, காளைகள் அடுத்தடுத்து விடப்பட்டன.



சில காளைகள், ஆடுகளத்தில் அடக்க முடியாத அளவுக்கு நின்று விளையாடின. அடக்க முடியாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்கக்காசு, வாஷிங் மெஷின் பரிசுகளாக வழங்கப்பட்டன.



சீறிப் பாய்ந்த காளைகளை அடக்குவதற்கு விதிமுறைகள் உள்ளன. முக்கிய விதிமுறைகளாக, ஒரு காளையின் மீது பலர் சேர்ந்து மொத்தமாக விழுந்து பிடிக்க கூடாது. அத்துடன், காளையின் வாலைப் பிடித்து இழுக்கவும் கூடாது. இந்த ஆண்டு விதிமீறிய 22 வீரர்கள் களத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.



இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு நட்சத்திர அந்தஸ்துடன் வந்தவை, மதுரை பி.ராஜசேகரனின் காளைகள். இந்தக் காளைகள் வாடிவாசல் வழியாக ஒவ்வொன்றாக வந்தபோது, “பிடித்துப் பார்… காளை பிடிபட்டால் தங்கக் காசு உனக்கு” என, விழாக் குழுவினர் உசுப்பேற்றினர்.



மதுரை பி.ராஜசேகரனின் காளைகள், வீரர்களிடம் பிடிபடாமல், லாவகமாக தப்பின. சில வீரர்கள் மட்டும், நான்கைந்து காளைகளை பிடித்து பரிசுகளை வென்றனர்.



இந்த ஆண்டு காளைகளை பிடிக்க முயன்ற, 36 வீரர்கள் காயமுற்றனர். அத்துடன், வேடிக்கை பார்த்தபோது காயமுற்ற இரண்டு பேர், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.



எந்த ஆண்டிலும் இல்லாத வகையில் 2 மணியுடன் ஜல்லிக்கட்டு நிறுத்தப்பட்டது. இதனால் அவனியாபுரம், பாலமேட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்க முடியாமல் போன நிலையில், அலங்காநல்லூரில் அனைத்து காளையும் 2 மணிக்குள் அவிழ்த்து விடப்பட்டன.



அலங்காநல்லூரில் காயம்பட்ட வீரர்களுக்கு ஏற்றுவதற்காக, தலா, 4 யூனிட் ரத்தம், மருத்துவமனை ரத்தவங்கியில் இருந்து வழங்கப்பட்டது. ஆனால் ரத்தம் ஏற்றும் அளவுக்கு, எந்த வீரர்களும் காயம்படவில்லை.



போலீசார் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்ததால், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, ரத்தம் சிந்தாதமல் நடந்து முடிந்தது. “ரத்தம் சிந்தாத, ரத்தம் ஏற்றாத ஜல்லிக்கட்டை, காவல்துறையினர் வெற்றிகரமாக நடத்தி முடித்தனர்” என, ஸ்பாட்டில் முதலுதவி சிகிச்சை வழங்க வந்திருந்த டாக்டர்கள் கூறினர்.



கலெக்டர் அன்சுல் மிஸ்ரா ஆலோசனையில் நடந்த ஜல்லிக்கட்டில் எஸ்.பி. பாலகிருஷ்ணன் நேரடி மேற்பார்வையில் 1300 போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர். அமைதியாக நடந்து முடிந்ததால் அதிகாரிகள் மகிழ்ச்சியடைந்தனர். போலீசார் அனைவரையும் எஸ்.பி. பாராட்டியதுடன், அனைவருக்கும் ரிவார்டு வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளார்.



விலங்குகள் நலவாரிய பார்வையாளர்கள் ஜல்லிக்கட்டு நிகழ்வுகளை முழுமையாக கண்காணித்ததுடன் வீடியோ, போட்டோ ஆதாரங்களுடன் மேலிடத்திற்கு அறிக்கையாக அளித்துள்ளனர். ஜல்லிக்கட்டில் காளைகள் சித்ரவதை செய்யப்படுவதாக விலங்குகள் நல வாரியம் தொடர்ந்த வழக்கால், உச்ச நீதிமன்றம் 77 கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இந்த கட்டுப்பாடுகளை மீறாமல் ஜல்லிக்கட்டு நடத்த ஹைகோர்ட் அனுமதி அளித்தது.



அடக்க முடியாமல் நின்று விளையாடிய அதிக காளைகளின் உரிமையாளர் மதுரை பி.ராஜசேகரன் என்றால், அதிக காளகளை அடக்கிய வீரர் யார்? அட, அவரும் நம்ம மதுரைக்காரர்தானுங்க. மதுரை முடக்கத்தான் பகுதியை சேர்ந்த 30 வயதான இன்ஜினியர் ரஞ்சித், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மூன்று காளைகளை அடக்கி பரிசுகளை குவித்தார். “எனது பெற்றோர் ஆசிரியர்களாக உள்ளனர். விவசாய குடும்பத்தை சேர்ந்த எனக்கு காளைகளை அடக்கவும் தெரியும், அன்பு காட்டவும் தெரியும்” என்றார் அதிக காளைகளை அடக்கிய ரஞ்சித்.



No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!