Wednesday, July 3, 2013

ஸ்னோடென் சந்தேகம்..பொலிவிய அதிபர் விமானம் ஐரோப்பாவில் கட்டாய தரை இறக்கம்!

ஸ்னோடென் சந்தேகம்..பொலிவிய அதிபர் விமானம் ஐரோப்பாவில் கட்டாய தரை இறக்கம்!


“தப்பி செல்கிறாரா ஸ்னோடன்?” பொலிவியா நாட்டு ஜனாதிபதியின் விமானம் திசை திருப்பல்!!


அமெரிக்க உளவுத்துறை ரகசியங்களை அம்பலமாக்கிய எட்வார்ட் ஸ்னோடன் விவகாரம், சர்வதேச ராஜதந்திர அளவில் நேற்றிரவு உச்சத்தை தொட்டது. நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு பொலிவியா நாட்டு ஜனாதிபதி பயணம் செய்த தனி விமானம், ஐரோப்பாவில் திசை திருப்பப்பட்டது.

அந்த விமானத்தில் ஸ்னோடன் தப்பிச் செல்லலாம் என்று ஏற்பட்ட சந்தேகமே அதற்கு காரணம்.

துப்பறியும் கதை போல சுவாரசியமான திருப்பங்கள் எல்லாம் ஸ்னோடன் விவகாரத்தில் ஏற்படத் தொடங்கியுள்ளன. ஒரு நாட்டின் ஜனாதிபதியின் தனி விமானமே திசை திருப்பப்படும் அளவுக்கு விவகாரம் போயிருக்கிறது என்றால், இது மிகப் பரிய விஷயம்.

பொலிவியா நாட்டு ஜனாதிபதி ஈவோ மொரால்ஸூடன், அவரது தனி விமானத்தில் ஸ்னோடன் ரஷ்யாவில் இருந்து தப்பிச் செல்கிறார் என்ற உளவுத் தகவல் கிடைத்ததை அடுத்து, அந்த விமானம் ஐரோப்பிய வான் பகுதியில் பறந்து கொண்டிருந்த போது, பிரான்ஸ், மற்றும் போத்துக்கல் ஆகிய இரு நாடுகளும் அந்த விமானம் தமது வான் பகுதியில் பறப்பதற்கு தடை விதித்தன.

இதையடுத்து ஜனாதிபதியின் விமானம் நேற்றிரவு திசைதிருப்பப்பட்டு, தற்போது ஆஸ்திரியா நாட்டில் இறக்கப்பட்டுள்ளது.

இப்போது ஸ்னோடன் விவகாரம், நாடுகளுக்கு இடையிலான ராஜதந்திர முறுகல் நிலையை ஏற்படுத்தி விட்டது. அமெரிக்காவின் வேண்டுகோளை அடுத்தே பிரான்ஸ், மற்றும் போத்துக்கல் தமது நாட்டு ஜனாதிபதியின் விமானம் பறப்பதற்கு தடை விதித்துள்ளன என பொலிவியா நாட்டு வெளியுறவு அமைச்சர் வெளிப்படையாகவே குற்றம் சுமத்தியுள்ளார்.

சரி. விறுவிறுப்பான இந்த விவகாரத்தின் என்னதான் நடந்தது?

இந்தியா, சீனா உட்பட 19 நாடுகளிடம் ஸ்னோடன் அரசியல் அடைக்கலம் கோரியிருந்த போதிலும், அவரது முதல் சாய்சாக இருந்த நாடுகள் தென் அமெரிக்க நாடுகளான ஈக்வடோர், பொலிவியா மற்றும் வெனிசூலாதான். இதில் ஈக்வடோர், விக்கிலீக்ஸ் அதிபர் அசாஞ்ச்சுக்கு அரசியல் அடைக்கலம் கொடுத்து, பிரிட்டனில் உள்ள தமது நாட்டு தூதரகத்தில் வைத்து பாதுகாத்து வருகிறது.

இந்த நிலையில், பொலிவியா நாட்டு ஜனாதிபதி, எண்ணை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் மாநாடு ஒன்றில் கலந்துகொள்ள ரஷ்யா வந்தார். ஸ்னோடன் ரஷ்யாவின் மாஸ்கோ விமான நிலைய ட்ரான்சிட் ஏரியாவில் தங்கியிருப்பதாக சொல்லப்படும் நிலையில், இவர் ரஷ்யா வரும் முன்னரே சர்வதேச மீடியாவில் வதந்தி ஒன்று பரபரப்பாக அடிபட்டுக் கொண்டிருந்தது.

வதந்தி என்னவென்றால், ரஷ்யா வரும் பொலிவியா நாட்டு ஜனாதிபதி மாநாடு முடிந்து தனது நாடு திரும்பும்போது, தனது தனி விமானத்தில் எட்வார்ட் ஸ்னோடனையும் அழைத்து (‘கடத்தி’ என்றன சில அமெரிக்க மீடியாக்கள்) சென்று விடுவார் என்பதே!

இதனால், பொலிவியா நாட்டு ஜனாதிபதியின் வருகையை, மீடியாக்கள் மட்டுமின்றி, சி.ஐ.ஏ. உட்பட உளவு அமைப்புகள் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தன.

மாஸ்கோ வந்து இறங்கிய பொலிவியா நாட்டு ஜனாதிபதி, ரஷ்ய ஜனாதிபதி புடினை சந்திப்பதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசியபோது, ஸ்னோடன் பற்றி சிலாகித்து பேசினார். “ஸ்னோடன் என்ன குற்றம் செய்தார்? யாரையாவது கொன்றாரா? எங்காவது வெடிகுண்டு வைத்தாரா? இல்லையே… அமெரிக்க உளவுத்துறை அனைவரையும் உளவு பார்க்கிறது என்று உலகத்துக்கு தெரிய வேண்டிய உண்மையை வெளியிட்டிருக்கிறார்” என்றார்.

இது போதாதா?

பொலிவியா ஜனாதிபதி வந்து இறங்கிய விமானம், மாஸ்கோ விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்புடன் நிறுத்தப்பட்டிருந்தது. நேற்றிரவு அந்த விமானம் புறப்படும் முன், மூடப்பட்ட ஹாங்கர் ஒன்றுக்குள் இழுத்துச் செல்லப்பட்டது. அதன்பின் மீண்டும் வெளியே கொண்டுவந்து நிறுத்தப்பட்டது. (விமானத்தை பழுது பார்ப்பதற்கும் ஹாங்கருக்குள் கொண்டு செல்லலாம்)

இந்த நடைமுறை அமெரிக்க உளவுத்துறைக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.

அதன்பின் விமானத்தை யாரும் நெருங்க அனுமதிக்கப்படவில்லை. மூடப்பட்ட ஹாங்கரில் ஸ்னோடன் விமானத்தில் ஏறியிருக்கலாம் என்ற சந்தேகம் அமெரிக்க உளவுத்துறைக்கு ஏற்பட்டிருக்கலாம்.

நேற்றிரவு, பொலிவியா ஜனாதிபதி வந்து விமானத்தில் ஏறிக் கொண்டார். விமானம் பொலிவியா நாட்டை நோக்கி புறப்பட்டது.

இந்த விமானம் செல்லும் வான் பாதையில், அதற்கு கீழேயுள்ள நாடுகளில் ஏற்கனவே அனுமதி பெறப்பட்டிருந்தது. விமானம் புறப்படும்வரை காத்திருந்துவிட்டு, விமானம் வானில் பறந்து கொண்டிருந்த நிலையில், தமது வான் பகுதியூடாக பறக்க வழங்கப்பட்ட அனுமதியை போத்துக்கல் ரத்து செய்தது. அதையடுத்து பிரான்ஸூம், அனுமதி ரத்து என்ற தகவலை விமானிக்கு அனுப்பியது.

ஜனாதிபதியின் விமானம் தொடர்ந்து செல்ல முடியாமல் வானத்தில் வட்டமடிக்க தொடங்கியது.

இந்த நிலையில் பொலிவியா அதிகாரிகள், வேறு ஐரோப்பிய நாடுகளிடம் அனுமதி பெறும் முயற்சியில் ஈடுபட்டார்கள். இரவு நேரத்தில் அந்த முயற்சி பெரிதாக வெற்றி பெறாத நிலையில், விமானத்தின் எரிபொருள் இருப்பு குறையத் தொடங்கியது. ஜனாதிபதியின் விமானம் எரிபொருள் முடிந்து விழுந்து விடலாம் என்ற அவசர கோரிக்கையை பொலிவியா அதிகாரிகள் விடுத்ததை அடுத்து, ஸ்பெயின் நாடு ஒரு நிபந்தனையுடன் அனுமதி கொடுத்தது.

நிபந்தனை என்னவென்றால், விமானத்தை ஸ்பெயின் நாட்டு விமான நிலையத்தில் தரையிறக்கி எரிபொருள் நிரப்பலாம். ஆனால் விமானம் பொலிவியா நாட்டுக்கு தொடர்ந்து செல்ல அனுமதி கிடையாது. வேறு எங்கு வேண்டுமானாலும் போகலாம்.

அதன் அர்த்தம், ஜனாதிபதியின் விமானமாக இருந்தாலும் சரி, அதில் எட்வார்ட் ஸ்னோடன் பொலிவியா செல்ல முடியாதபடி எப்படியாவது தடுப்பது.

ஸ்னோடன் விவகாரத்தில், ஒரு நாட்டு ஜனாதிபதியின் விமானத்துக்கே ஏற்பட்ட கதியை பார்த்தீர்களா?

வேறு வழியில்லாமல் ஜனாதிபதியின் விமானம் ஸ்பெயினில் தரையிறங்கியது. எரிபொருள் நிரப்பியது. அங்கிருந்து எங்கே போகலாம்? பொலிவியா நாட்டு ராஜதந்திரிகள் தமக்கு சார்பான நாட்டு அரசு தலைவர்களை நள்ளிரவு நேரத்தில் தொடர்பு கொள்ளத் தொடங்கினார்கள்.

விமானம் தமது நாட்டுக்கு வந்து தரையிறங்க அனுமதி கொடுத்தது ஆஸ்திரியா.

இதையடுத்து ஸ்பெயினில் இருந்து புறப்பட்ட விமானம், ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் தரையிறங்கியுள்ளது. சர்வதேச அகதி மற்றும் அரசியல் அடைக்கல சட்டங்கள் பல ஆஸ்திரியாவில்தான் உருவாகின (வியன்னா கன்வென்ஷன்) என்பதால், ஆஸ்திரியாவை தேர்ந்தெடுத்திருக்கலாம் பொலிவியா ஜனாதிபதி.

நேற்றிரவு ஆஸ்திரியாவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இறங்கிய பொலிவியா ஜனாதிபதி, வியன்னா நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தற்போது தங்கியுள்ளார். ஸ்னோடன் இறங்கியதாக தெரியவில்லை. “ஜனாதிபதியின் தனி விமானத்தில் ஸ்னோடன் இல்லவே இல்லை” என தெரிவித்துள்ளார், பொலிவியா நாட்டு வெளியுறவு அமைச்சர்.

“பிரான்ஸ் மற்றும் போத்துக்கல், எமது நாட்டு ஜனாதிபதியின் உயிருக்கே உலை வைக்கப் பார்த்தன. இதெல்லாம் அமெரிக்க உத்தரவுப்படிதான் நடந்திருக்கின்றன ” எனவும் கூறியுள்ளார் அவர்.

பொலிவியா ஜனாதிபதி எப்போது கிளம்புவார் என்றும் தெரியவில்லை. அந்த விமானத்துக்குள் ஸ்னோடன் ‘நிஜமாகவே’ இல்லையா என்பதும் தெரியவில்லை. ஆனால், கடந்த மாதம் 30 வயதை எட்டிப்பிடித்துள்ள ஸ்னோடனிடம், பல முக்கிய ரகசியங்கள் உள்ளன என்பது மட்டும் நன்றாகவே தெரிகிறது!




No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!