Monday, April 1, 2013

இலங்கையில் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து ‘இரட்டை குடியுரிமை’! நிபந்தனைகளுடன்!!

இலங்கையில் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து ‘இரட்டை குடியுரிமை’! நிபந்தனைகளுடன்!!








வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்து அங்கே பிரஜாவுரிமை பெற்று வாழும் இலங்கையர்கள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் இரட்டைக் குடியுரிமை பெற்றுக் கொள்ள முடியும் என இலங்கை குடிவரவு குடியகல்வு இலாகா அறிவித்துள்ளது. இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்காக, புதிய சட்டத்திருத்தங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என குடிவரவு இலாகாவின் உயரதிகாரி சூலானந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

இரட்டைக் குடியுரிமை வழங்கப்படும் போது, நாட்டின் ‘தேசிய பாதுகாப்புக்கு’ பாதிப்பு ஏற்படாத வகையில் சட்டத்திருத்தங்கள் திட்டமிடப்பட்டுள்ளன எனவும் அவர் கூறியுள்ளார்.

இரட்டை குடியுரிமை என்ற போர்வையில் இலங்கையின் வட பகுதியில் வீட்டு மனைகளுக்கு உரிமை பெற்றுக்கொள்ள வர முயற்சிக்கும் வடபகுதிகளைச் சேர்ந்த இலங்கையர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதாக பாதுகாப்பு அமைச்சு கருதுகிறது.

அந்த நோக்கத்தில் இரட்டைக் குடியுரிமை விண்ணப்பிக்கும் நபர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் இலங்கை பாதுகாப்பு அமைச்சால் தெரிவிக்கப்பட்டுள்ளது.




புதிய நடைமுறையில், இரட்டை குடியுரிமை விண்ணப்பிக்கும்போது, குறிப்பிட்ட நபர்கள் என்ன காரணம் காட்டி வெளிநாடு சென்றார்கள் என்ற விபரங்களுக்காக தனியாக ஒரு படிவம் வழங்கப்படும். ‘இலங்கைக்கு எதிரான’ காரணங்கள் கூறி வெளிநாட்டு பிரஜாவுரிமை பெற்று இருந்தால், முதல் கட்டத்திலேயே விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என்று குடிவரவு இலாகா அதிகாரி தெரிவித்தார்.

அதாவது, யுத்தம் காரணமாக அரசியல் தஞ்சம் அல்லது அகதி அந்தஸ்து கோரி வெளிநாட்டுக்கு சென்றிருந்தால், விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என்று கூறுகிறார்கள். விண்ணப்பிக்கும் நபர் தற்போது வசிக்கும் நாட்டு குடிவரவு இலாகாவில் இருந்து இந்த விபரங்கள் நேரடியாக பெறப்படும்.

அதையடுத்து, விண்ணப்பம் செய்பவர்கள், நேர்முக தேர்வுக்காக அழைக்கப்படுவார்கள். பாதுகாப்பு அமைச்சினால், குறிப்பிட்ட விண்ணப்பதாரர் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லாதவர் என தீர்மானிக்கப்பட்டால், இரட்டை பிரஜாவுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை அமலுக்கு வந்த பின்னர், இலங்கையில் சொத்துக்கள் மற்றும் நிலங்கள் வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக இலங்கை பிரஜாவுரிமை வைத்திருக்க வேண்டும் என்ற சட்டம் அமலுக்கு வரும். இலங்கை பிரஜாவுரிமை அற்ற பிரிவில், வெளிநாட்டு தூதரகங்கள் மட்டுமே இலங்கையில் நிலங்களை சொந்தமாக வாங்கவோ, வைத்திருக்கவோ முடியும் எனவும் தெரியவருகிறது.



Read more: http://viruvirupu.com/duel-citizenship-overseas-passport-lanka-50937/#ixzz2PBqpwoKf

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!