Tuesday, February 25, 2014

மெக்சிகோ கடத்தல் தலைவரை ‘தூக்கியது’, பின்லேடனுக்கு அடுத்த சி.ஐ.ஏ. ஆபரேஷன்?

மெக்சிகோ கடத்தல் தலைவரை ‘தூக்கியது’, பின்லேடனுக்கு அடுத்த சி.ஐ.ஏ. ஆபரேஷன்?



பின்லேடனை கொல்லும் அதிரடி ஆபரேஷனுக்கு அடுத்தபடியாக, அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ. திட்டமிட்டு செயல்படுத்திய ஆபரேஷன், மெக்சிகோ போதைப் பொருள் கடத்தல் குழு தலைவர் எல் சாப்போ கஸ்மனை, சுற்றி வளைத்து கைது செய்ததுதான் என்பதுதான், மெக்சிகோ மீடியாக்களில் இன்றைய தலைப்புச் செய்தி!

மெக்சிகோ போதைப் பொருள் கடத்தல் குழு தலைவர் எல் சாப்போ கஸ்மனை சுற்றி வளைத்து கைது செய்தது மெக்சிகோ ராணுவம்தான் என்ற போதிலும், அதன் பின்னணியில் இருந்தது அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ. என்கின்றன, மெக்சிகோ மீடியாக்கள்.

கடத்தல் குழு தலைவர் எல் சாப்போ, மெக்சிகோவின் ரிசாட் நகரமான மஸட்லான் அருகேயுள்ள, மறைவிடம் ஒன்றில் வைத்தே கைது செய்யப்பட்டார். இவரை கைது செய்ய ஒரு ஏரியாவையே சுற்றி வளைத்த மெக்சிகோ ராணுவம், ஒரு துப்பாக்கி தோட்டாவைகூட விரயம் செய்யாமல், ஆளை லபக் என்று தூக்கிச் சென்றது.

“13 ஆண்டுகளாக இந்த கடத்தல் குழு தலைவரை நெருங்கவே முடியாமல் இருந்த மெக்சிகோ ராணுவம், இவ்வளவு துல்லியமாக செயல்பட்டது எப்படி?” என கேள்வி எழுப்பியுள்ள மெக்சிகோ மீடியாக்கள், அமெரிக்க நேவி சீல் அதிரடிப் படையினரும் (பின்லேடன் வேட்டைக்கு சென்ற படை) மெக்சிகோ ராணுவத்தினரின் சீருடையில், அவர்களுடன் கலந்து சென்றே கடத்தல் தலைவரை அமுக்கினார்கள்” என்கின்றன, மெக்சிகோ மீடியாக்கள்.

இந்த கூற்றை அமெரிக்க அதிகாரிகள் மறுத்துள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை இன்று செய்தி வெளியிட்டுள்ளது. “இது முழுக்க முழுக்க மெக்சிகோ ராணுவத்தினரின் ஆபரேஷன்தான். கடத்தல் குழு தலைவரை நாம் (அமெரிக்கா)  தேடப்படுவோர் பட்டியலில் வைத்திருந்தபோதிலும், இந்த ஆபரேஷனில் எமக்கு எந்த தொடர்பும் கிடையாது” என பெயர் குறிப்பிடாத அமெரிக்க அதிகாரி கூறினார் என்கிறது, வாஷிங்டன் போஸ்ட்.

ஆமா.. தமக்கு எந்த ஆபரேஷனில்தான் தொடர்பு இருக்கிறது என்று ஆரம்பத்திலேயே ஒப்புக்கொண்டு இருக்கிறது சி.ஐ.ஏ.?




No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!