Tuesday, July 31, 2012

உணவினால் உண்டாகும் தலைவலி!


உணவினால் உண்டாகும் தலைவலி!




தலைவலியா..? சூடாக ஒரு கப் காபியோ, டீயோ குடித்தால் போதும். வலி பறந்து போகும் பலருக்கும். ஆனால், குறிப்பிட்ட சில உணவுகள் தலைவலியை வரவழைக்கும் தெரியுமா? எந்தெந்த உணவுகள் தலைவலியைக் கொடுக்கும், எவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும், வலி நீங்க எந்தெந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்? விளக்கமாகப் பேசுகிறார் வலி நிர்வாக சிறப்பு மருத்துவர் குமார்.

‘‘நம்மில் 10 சதவிகித மக்களுக்கு தலைவலி இருக்கிறது. அதில் 5 சதவிகிதத் தலைவலிக்கு, சரியான நேரத்துக்கு சாப்பிடாததும், தூக்கமின்மையுமே காரணங்கள். இந்த இரண்டையும் தவிர்த்தாலே தலைவலி தானாகச் சரியாகும். தலைவலியைத் தூண்டும் உணவுகளில் முக்கியமானது சீஸ். அதிலுள்ள ‘தைரமின்’ எனப்படுகிற வேதிப்பொருளே வலியைத் தூண்டும்.

தவிர கேக், சைனீஸ் உணவுகள், சாக்லெட் போன்றவற்றிலும் தலைவலியைத் தூண்டும் காரணிகள் இருப்பதால் அவற்றையும் தவிர்க்க வேண்டும்.

தினசரி நாம் உபயோகிக்கிற பதப்படுத்தப்பட்ட உணவுகளிலும், தலைவலியைத் தூண்டும் நைட்ரைட் என்கிற வேதிப் பொருள் கலக்கப்படுகிறது. ஊறுகாய், ஆரஞ்சு, அன்னாசி, கடலைப்பருப்பு, முந்திரிப்பருப்பு, செயற்கை இனிப்புகள், குளிர்பானங்கள், சிப்ஸ் போன்றவற்றை அடிக்கடி எடுத்துக்கொள்பவர்களுக்கும் தலைவலி வரலாம்.

இவை தவிர மது குடிப்பவர்களுக்கும், கருத்தடை மாத்திரைகள் எடுத்துக்கொள்கிற பெண்களுக்கும்கூட அடிக்கடி தலைவலி வரலாம்.

அடிக்கடி தலைவலியால் அவதிப்படுகிறவர்கள் பின்வரும் பொருட்களை சேர்த்துக்கொள்ள வேண்டும். தினசரி 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். சாப்பாட்டுக்கு முன்பும், சாப்பிட்ட பிறகும் தேவையான தண்ணீரைக் குடிக்க வேண்டும். உயர்தரக் கொழுப்பான ஒமேகா ஃபேட்டி 3 அமிலம் கொண்ட மீன், இஞ்சி, பூண்டு, கீரை, ஃபிளாக்ஸ் சீட்ஸ் போன்றவற்றை அதிகம் சேர்க்க வேண்டும்.

வைட்டமின் பி12 நிறைந்த காளான், பிராக்கோலி, மக்னீசியம் அதிகமுள்ள முள்ளங்கி, கீரை போன்றவற்றையும் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். மருத்துவரின் பரிந்துரையின் பேரில் கால்சியம் மற்றும் மக்னீசியம் மாத்திரைகளையும் எடுத்துக் கொள்ளலாம். வெறும் உணவின் மூலம் மட்டுமே தலைவலியை முழுக்க சரிப்படுத்தி விட முடியாது. தீராத தலைவலிக்கு சில சிறப்பு சிகிச்சைகள் உள்ளன. நவீன மருந்துகளுடன், போடாக்ஸ், ஸ்டெல்லேட் காங்லியன், கஸேரியன் காங்லியன் போன்ற சிகிச்சைகளையும், சில பயிற்சிகளையும் மேற்கொண்டால் தலைவலியிலிருந்து முழுமையான விடுதலை பெறலாம்.’’



No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!