அம்மா மெஸ்: இட்லி வாங்க சர்ரென்று வந்து நின்றது புத்தம் புதிய இன்னோவா கார்!
முதல்வர் ஜெயலலிதாவால் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்ட மலிவு விலை உணவகங்கள், ஏழை மக்களுக்காக என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று இந்த மலிவு விலை உணவகங்களில் உண்பதற்காக வந்தவர்கள் பெரும்பாலானோர், கார்களில் வந்திருந்தனர்.
சென்னை மாநகரில் வாழும் ஏழை எளிய மக்கள், அன்றாட கூலி வேலை செய்பவர்கள், ஓட்டுநர்கள், பாரம் தூக்குபவர்கள் என குறைந்த ஊதியத்தில் பணிபுரிபவர்கள் பயன்பெறும் வகையில் உணவுகளை மலிவு விலையில் வழங்குவதற்காக இந்த உணவகங்கள் தொடங்க தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.
நேற்று சென்னை, சாந்தோம் நெடுஞ்சாலையில் மலிவு விலை உணவகத்தை, முதலமைச்சர் ஜெயலலிதா குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தார்.
முதலமைச்சர் ஜெயலலிதா குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தவுடன், மலிவு விலை உணவகத்தின் வாடிக்கையாளர்கள் என 3 பேர் அழைத்து வரப்பட்டனர்.
வாடிக்கையாளர்களாக வந்த அன்னபூரணி, சரோஜா, தாமரைக்கண்ணன் ஆகிய மூன்று பேருக்கும் முதல்வர் ஜெயலலிதாவே உணவினை வழங்கி விற்பனையை தொடக்கி வைத்தார். மற்றைய வாடிக்கையாளர்களுக்கு இட்லி வழங்குமாறு முதல்வர் கட்டளையிட்டார்.
அதையடுத்து, 1 ரூபா இட்லியை பெற்றுக்கொள்ள ஏராளமான ஏழைகள் வரிசையாக வந்தனர்.
நேற்று சென்னை, சாந்தோம் நெடுஞ்சாலையில் மலிவு விலை உணவகத்தில் இட்லி வாங்க வந்த ஏழைகளின் பெயர்கள் வருமாறு:
நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், வைத்தியலிங்கம், பா.வளர்மதி, ப.மோகன், கோகுல இந்திரா, பி.வி.ரமணா, முன்னாள் பேரவைத் தலைவர் டி.ஜெயக்குமார், துணை மேயர் பெஞ்சமின், அ.தி.முக. தென் சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் வி.பி.கலைராஜன், தென் சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் வி.என்.ரவி, வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் டி.ஜி.வெங்கடேஷ்பாபு, சட்டமன்ற உறுப்பினர்கள், ஜி.செந்தமிழன், ராஜலட்சுமி, அ.தி.மு.க. எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன், சி.ஆர்.சரஸ்வதி, தென் சென்னை வடக்கு மாவட்ட மகளிரணி செயலாளர் சரஸ்வதி ரங்கசாமி, தளவாய்சுந்தரம், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, அ.தி.மு.க தொழிற்சங்கப் பேரவை தென் சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் ஏ.ஏ.அர்ஜூன் தொழிற்சங்கப் பேரவை நிர்வாகிகள், கவுன்சிலர் டி.சிவராஜ், சுகாதார பணிக்குழு தலைவர் பழனி, பெசசண்ட்நகர் நடராஜ்.
இந்த ஏழைகள் இட்லி வாங்கியதை அடுத்து, அடுத்த செட் ஏழைகளாக, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் வந்து இட்லி வாங்கினர்.
அத்துடன் அம்மா மெஸ்ஸில் இட்லி காலி!
அதன் பின் வந்த ‘ரியல்’ ஏழைகளை, மதியம் தயிர்சாதம் உண்ண வருமாறு கூறி அனுப்பி விட்டனர்.
சாந்தோம் மலிவு விலை உணவகத்துக்கு வெளியே புத்தம்புது இன்னோவா கார் ஒன்று பார்க் பண்ணப்பட்டு இருந்தது. ‘அவருக்கு’ இட்லி கிடைத்ததா, அல்லது தயிர்சாதம்தானா என்று தெரியவில்லை.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!