இந்தியாவில் இன்டர்நெட் சேவை மந்தம்! எகிப்து அருகே ஆழ்கடல் கேபிளில் நாசவேலை!!
இந்தியாவில் இன்டர்நெட்டின் வேகம் இன்னும் 20 – 25 நாட்களுக்கு மந்தமாகவே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நடுக் கடலில் போடப்பட்டுள்ள இன்டர்நெட் கேபிள்களில், எகிப்துக்கு அருகே நாச வேலை நடந்துள்ளதால், இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இரு தினங்களுக்குமுன், கடல் அடியே கேபிள்களை வெட்டும் முயற்சியில் ஈடுபட்டிருந்த 3 பேரை கைது செய்துள்ளதாக எகிப்திய ராணுவம் அறிவித்துள்ளது. இந்த மூன்று ஸ்கூபா டைவர்களும் (மேலே போட்டோவில் உள்ளவர்கள்) எகிப்தின் அலெக்சான்ட்ரியா துறைமுகத்துக்கு வடக்கே உள்ள கடல் பகுதியில் கேபிள்களை வெட்டும் முயற்சியில் இருந்தபோது, எகிப்திய கடற்படை ரோந்துப் படகு இவர்களை கைது செய்தது.
கடந்த 2 நாட்களாக இன்டர்நெட்டின் வேகம் உலகின் பல பகுதிகளிலும் மகா மந்தமாக உள்ளது. ஸ்பாம் ஊடுருவலே இதற்குக் காரணம் என்று முதலில் கூறப்பட்டது. தற்போது இரண்டு முக்கிய நடுக் கடல் கேபிள்கள் திட்டமிட்டு துண்டிக்கப்பட்டுள்ளதால், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் இன்னும் 20 – 25 நாட்களுக்கு இன்டர்நெட் வேகம் மகா மந்தமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை அரசின் BSNL மற்றும் MTNL, தனியாரான Bharti Airtel, Tata Communications ஆகியவற்றின் இணைப்புகள்தான் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன.
14 நாடுகள் வழியாக நடுக் கடல் வழியாக வரும் கேபிள்களில் விஷமிகள் திட்டமிட்டு நாச வேலையில் ஈடுபட்டதால் டேட்டா அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுவே மந்த நிலைக்குக் காரணம். பிரான்ஸ் முதல் எகிப்து வரையிலும், அதேபோல ஆசியாவுக்கும், ஐரோப்பாவுக்கும் இடையிலான இணைப்புகளும் துண்டிக்கப்பட்டு சேதத்தைச் சந்தித்துள்ளன.
இன்டர்நெட் வழங்குவோர் சங்கத்தை சேர்ந்த ராஜேஷ் ச்ஹாரியா, “தற்போது பண்டிகை காலம் என்பதால், இன்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறைவு. இதனால், வேகத்திலும் பாதிப்பு குறைவு. ஆனால், திங்கட்கிழமை முதல் மேற்கண்ட இன்டர்நேட் சேவை வழங்குவோரின் இணைப்புகளைப் பயன்படுத்துவோர் கடும் பாதிப்பை சந்திக்க நேரிடும்” என்றார்.