களிமண் பொம்மைகளுடன் கப்பலில் கடத்தப்பட்ட ஆயுத ரகசியம் அவுட் ஆன கதை
இது, 1996-97ம் ஆண்டு காலப்பகுதியில், மொசாம்பிக் நாட்டு துறைமுகம் நகாலாவில் நடந்த சுவாரசியமான ஆயுத டீல்!
ரினாமோ என்ற பெயரை உங்களில் சிலர் கேள்விப்பட்டிருக்கலாம். கேள்விப்படாவிட்டால் – அது ஒரு மொசாம்பிக் விடுதலை அமைப்பு. ரினாமோ என்ற போத்துகீஸ் சொல்லின் விரிவாக்கம், Resistência Nacional Moçambicana (மொசாம்பிக் தேசிய பாதுகாப்பு). இவர்கள் தம்மை ஒரு அரசியல் கட்சி என்கிறார்கள். ஆனால், துப்பாக்கி ஏந்தி போராடிய அமைப்புதான்.
இவர்களுக்கு ஆயுத விஷயத்தில் ஒரு நடைமுறை உண்டு – அது ஆயுதங்கள் புதிது புதிதாக வாங்கும்போது தங்களிடமிருக்கும் பழைய ஆயுதங்களை வெளியே விற்றுவிடுவார்கள்.
வழமையாக இவர்கள் தமது ஆயுதங்களை விற்பது ப்ருண்டி மற்றும் ஸயர் நாடுகளிலிருந்து இயங்கும் விடுதலை அமைப்புக்களுக்கு. இதெல்லாம், ஒருவித பண்டமாற்று முறையில் நடைபெறும் வியாபாரம். அந்த நாட்டு விடுதலை இயக்கங்கள், இந்த ஆயுதங்களுக்கு பதிலாக, பாம்பு தோல்கள், சந்தனக் கட்டைகள், வைரங்கள் என வெளியே நல்ல விலைக்கு விற்பனை செய்யக்கூடிய சரக்குகளை கொடுப்பார்கள்.
இந்த செகன்ட் ஹேன்ட் ஆயுதங்கள் விற்கப்பட்டு எந்த ரூட்டில் அவற்றை வாங்கியவர்களிடம் போய்ச் சேருகின்றன என்ற விபரங்களை அறிவதில், சர்வதேச உளவு அமைப்புக்களுக்கு – சி.ஐ.ஏ. உட்பட – ஆர்வம் அதிகம். காரணம், இவர்கள் விற்கும் ஆயுதங்கள், ஆபிரிக்கா பகுதியில் ஆயுத சமநிலையை குலைத்துவிடும் என்பதால், எவ்வளவு ஆயுதங்கள், எங்கே, எப்படி போகின்றன என்பதை தெரிந்து கொள்வது அவசியம்.
இதனால், சி.ஐ.ஏ.வும் மற்றைய மேலைநாட்டு உளவுத்துறைகளும், அந்தப் பகுதியில் எந்த நேரமும் கண்வைத்திருப்பார்கள். ஆனால், ஆயுதக் கடத்தலை தடுப்பதில்லை. இந்த கடத்தல்களை வைத்து, விடுதலை இயக்கத்தின் ஆயுத பலத்தை உளவுத்துறைகள் கணித்து கொள்வார்கள்.
இது, ஆயுதம் விற்கும் விடுதலை இயக்கத்துக்கும் நன்றாகவே தெரியும். இதனால், இவர்கள், அவர்களுக்கு விஷயம் தெரியாமல் ஆயுதங்களை கடத்த பார்ப்பார்கள்.
ரினாமோ இயக்கத்தினர், தாம் விற்கும் ஆயுதங்களை பெரும்பாலும் வெள்ளிக்கிழமை இரவு நேரத்தில் நகாலா துறைமுகத்தக்கு அருகிலுள்ள சரக்கு குடோன் (கார்கோ வேர்ஹவுஸ்) ஒன்றுக்கு கொண்டுவருவார்கள். அங்கு ஆயுதங்கள் மரப்பெட்டிகளில் (Crates) அடைக்கப்படும். மரப் பெட்டிகளில் தனி ஆயுதங்கள் அடைக்கப்படுவதில்லை. களிமண் பொம்மைகளுக்கு கீழே, மறைத்து வைத்து பேக்கிங் செய்யப்படும்.
மொசாம்பிக் நாட்டிலிருந்து ஏற்றுமதியாகும் களிமண் பொம்மைகளுக்கு வெளிநாடுகளில் நல்ல கிராக்கி. இதனால், அங்கிருந்து பெட்டி பெட்டியாக களிமண் பொம்மைகள் கப்பல் ஏறுவது வழக்கம். விடுதலை இயக்கத்தின் ஆயுதங்களும், மரப் பெட்டிகளில் களிமண் பொம்மைகளுடன் கலந்து நகாலா துறைமுகத்திற்குள் பிரவேசிக்கும். இது இரவோடு இரவாக நடக்கும்.
நகாலா துறைமுகத்தில் இருந்து அதிகாலை நேரத்தில் புறப்படும் கப்பல் ஒன்றில் லோடு செய்யப்பட்டு, மத்வாரா துறைமுகம் நோக்கிச் செல்லும். மத்வாரா துறைமும் இருப்பது தான்சானியா நாட்டில்.
மத்வாரா துறைமுகத்தை அடைவதற்கு முன்னர் லஸ்கே தங்கன்யிகா என்ற ஆழம் குறைந்த பகுதியில் கப்பல் சுமார் ஒரு மணி நேரம் நிறுத்தி வைக்கப்படும்.
அந்த நேரத்தில் கப்பலை அணுகும் சில அதிவேகப் படகுகளில் இந்த ஆயுதங்கள் அடங்கிய மரப்பெட்டிகள் ஏற்றப்பட்டுவிட, கப்பல் தான் ஏற்றிவந்த நிஜ களிமண் பொம்மை ஷிப்மென்ட் பெட்டிகளுடன் மத்வாரா சென்றுவிடும்.
ஆயுதங்களை ஏற்றிக்கொண்ட வேகப்படகுகள் லஸ்கே தங்கன்யிகா கடல் பகுதியில் இருந்து, பிஸ்ஸி (Fizi) என்ற இடத்திலுள்ள கடற்கரையை சென்றடையும். அங்கே ஸாயர் நாட்டு விடுதலை இயக்கத்தினர் இந்த ஆயுதங்களுக்காக கடற்கரையில் காத்திருப்பார்கள். இதுதான், ஆயுதம் கடத்தப்படும் ரூட்.
இந்தக் கப்பல் போக்குவரத்து, நடுவழியில் ஆயுதமாற்றம் எல்லாவற்றையும் செய்து கொடுப்பது தான்சானியா நாட்டிலுள்ள ஒரு செக்யூரிட்டி நிறுவனம்.
அந்த நாட்களில் இவர்களிடம், லீசுக்கு எடுக்கப்பட்ட 2 நடுத்தர சைஸ் கப்பல்களும் சுமார் 8 அதிவேகப் படகுகளும் இருந்தன. அவற்றை வைத்துதான் இந்த கடத்தல் வருடக் கணக்கில் நடந்து வந்தது.
ஒரு சில வருடங்களாகவே இந்த ஆயுதப் பரிமாற்றம் நடைபெற்று வந்தாலும் 1997-ம் ஆண்டுவரை வெளியே தெரியாமல் விஷயம் காதும் காதும் வைத்ததுபோல நடந்து முடிந்திருக்கிறது – 1997-ல் விஷயம் வெளியே கசிந்துவிட்டது.
இந்த சம்பவம் நடந்தது, 1997-ம் ஆண்டின் மார்ச் மாதத்தில்.
கடத்தல் வழமைபோல நடைபெற்றிருந்தால் மாட்டியிருக்காது – அதாவது மொசாம்பிக் நாட்டின் நகாலா துறைமுகத்தில் களிமண் பொம்மைகளுடன் பொம்மைகளாக ஆயுதங்கள் ஏற்றப்பட்டு, தான்சானியாவின் போர்ட் மத்வாரா ஊடாக செல்லும் கடத்தல் திட்டம்.
இம்முறை திட்டத்தின் ஆரம்பக் கட்டத்திலேயே கொஞ்சம் சிக்கல் ஏற்பட்டு விட்டது.
மார்ச் மாதம் 1997-ம் ஆண்டில் நடைபெற்றது என்னவென்றால், வழமைபோல ஒரு வெள்ளிக்கிழமை இரவு ஆயுதப் பெட்டிகள் நகாலா துறைமுகத்திற்கு அருகாமையிலுள்ள கார்கோ வேர்ஹவுஸில் கொண்டுவந்து இறக்கப்பட்டுவிட்டன. துறைமுகத்துக்கு உள்ளே அதிகாலையில் தான்சானியா நோக்கிப் பயணம் செய்யவேண்டிய கப்பலும் வந்து சேர்ந்துவிட்டது.
ஏற்பாடுகள் எல்லாம் கனகச்சிதமாக இருப்பதாக தெரியவே நள்ளிரவுக்கு சற்று முன்பாக ஆயுதங்கள் இருந்த மரப்பெட்டிகள், முழுமையாக களிமண் பொம்மைகள் இருந்த பொட்டிகளோடு பெட்டிகளாக கலந்து, துறைமுகத்துக்குள் நுழைந்து, கப்பலில் ஏற்றப்பட்டும் விட்டது.
எல்லாமே கிளியர். அதிகாலை 4.30க்கு கப்பல் புறப்படுவதாக இருந்தது. அதற்குமுன் செய்யப்பட வேண்டிய கஸ்டம்ஸ் கிளியரன்ஸ் வேலைகளை கப்பல் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் செய்யத் தொடங்கியும் விட்டார்கள்.
கிளியரன்ஸ் கிடைக்கும் நேரத்தில், நகாலா துறைமுகத்திற்கு பணியில் புதிதாக போஸ்ட் ஆகியிருந்த புதிய அதிகாரி ஒருவர் வழமையான நடைமுறைக்கு மாறாக, ஒரு காரியத்தை செய்தார். அதிலிருந்துதான் தொடங்கியது சிக்கல்.
வழமையாக வெள்ளிக்கிழமைகளில் இந்த கடத்தல் நடக்கும்போது டூட்டியில் இருக்கும் துறைமுக அதிகாரிகளை தான்சானியா செக்யூரிட்டி நிறுவனம், கப்பல் கிளம்பிச் சென்றபின் ‘நன்றாகவே கவனித்து’ விடுவார்கள். அதனால், இந்த ‘களிமண் பொம்மை ஏற்றுமதி’ பற்றி யாருமே வாயைத் திறப்பதில்லை.
ஆனால், இந்த குறிப்பிட்ட தினத்தில் கடமையிலிருந்த துறைமுக அதிகாரி புதிய ஆள். செக்யூரிட்டி நிறுவனம் கப்பல் கிளம்பிய பின்னர்தான் தமது பாக்கெட்டை கவனிப்பார்கள் என்று அறியாமலோ, அல்லது வேலைக்குப் புதிதாக வந்த நேரத்தில் நேர்மையாக செயற்பட முயன்றதாலோ, விதிமுறைகளின்படி செயல்பட முடிவு செய்தார்.
கப்பலுக்கான துறைமுக கிளியரன்ஸ் ஆர்டர் அவரது கையொப்பத்துக்காக போனபோது அவர், துறைமுகத்திலிருந்த தனது அலுவலகத்திலிருந்து துறைமுக டெக்குக்கு ரவுன்ட்ஸ் போய், கப்பலை ஒரு நோட்டம் விட்டிருக்கிறார்.
அவரது பணி, கப்பலுக்கு உள்ளே ஏறி செக்கிங் செய்வதல்ல. துறைமுக டெக்கில் நின்று, கிளியரன்ஸ் ஆர்டரில் குறிப்பிட்டுள்ள கப்பல், நிஜமாகவே துறைமுகத்தில் நிற்கிறதா என்று பார்த்து விட்டு கிளியரன்ஸ் கொடுக்க வேண்டியதுதான் அவருடைய வேலை. அவரும் அப்படித்தான் பார்த்தார்.
அப்போதுதான் கப்பலிலிருந்த விசித்திரமான அம்சம் ஒன்று அவரது கண்ணுக்குத் தட்டுப்பட்டிருக்கிறது.
அது கப்பல் எந்த நாட்டைச் சேர்ந்தது என்பதற்கு அடையாளமாகப் பறக்கவிடப்படும் நாட்டுக் கொடியும் இல்லை. கப்பலின் வெளிப்புறத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டிய ரிஜிட்ரேஷன் நம்பரும் இல்லை. சுருக்கமாக, கப்பலின் பெயரைத் தவிர வேறு எந்தவொரு அடையாளமும் இல்லாத கப்பல், துறைமுக கிளியரன்ஸூகாக (Port Departure Clearance) காத்திருக்கிறது.
தனது துறைமுக அலுவலகத்துக்கு வந்த அந்த அதிகாரி, இந்த விபரங்களை துறைமுக Departure Control log பதிவேட்டில் எழுதி, கப்பலை மறுநாள் காலை முழுமையாக சோதனையிடும்படி பரிந்துரை செய்துவிட்டு, கப்பல் அதிகாலையில் கிளப்புவதற்கான கிளியரன்ஸ் ஆர்டரை கொடுக்க மறுத்துவிட்டார்.
கிளியரன்ஸ் மறுக்கப்பட்ட விஷயமும் அதற்கான காரணமும் துறைமுக அலுவலகத்திலிருந்து கப்பலுக்குத் தெரியவந்தது.
அந்தக் கப்பலின் கேப்டன் அதுவரை சுருட்டி வைத்திருந்த நாட்டுக் கொடியை எடுத்து, இரவோடு இரவாக கப்பலில் அந்த கொடியை ஏற்றிப் பறக்கவிட்டார். கப்பலில் அவர் பறக்கவிட்ட நாட்டுக்கொடி எது தெரியுமா?
டட்டடாங்…. பாரத தேசத்தின் மூவர்ணக் கொடி!
கப்பலில் இரவோடு இரவாக கப்பலில் இந்திய கொடி ஏற்றப்பட்ட விவகாரம், துறைமுக அதிகாரிக்கு இருந்த சந்தேகத்தை மேலும் கிளப்பிவிட்டது.
அவர் கப்பலை சோதனையிடுவதற்கான ஏற்பாடுகளை முடுக்கிவிட்டார். மறுநாள் காலை சோதனையிடப்படாமல் இந்தக் கப்பல் துறைமுகத்தை விட்டு வெளியேற அனுமதிக்க கூடாது என்ற வாரண்ட்டில் கையெழுத்து போட்டு, கப்பல் நகர முடியாதபடி செய்தே விட்டார்.
மறுநாள் சோதனையிடப்பட்டால், கப்பலில் ஏற்றப்பட்டிருந்த ஆயுத பெட்டிகள் சிக்கிக் கொள்ளும் என்ற நிலையில், சம்பந்தப்பட்ட தான்சான்யா நாட்டு செக்யூரிட்டி நிறுவனம் தடாலடியாக ஒரு வேலை செய்தது.
கப்பல் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த துறைமுக போர்ட் டெக்கில், திடீரென இரண்டு பெரிய லாரிகள் வந்து சேர்ந்தன. கப்பலில் இருந்தவர்கள் அவசர அவசரமாக மரப்பெட்டிகள் சிலவற்றை கீழே இறக்க, பெட்டிகள் இரண்டு லாரிகளிலும் ஏற்றப்பட்டு துறைமுகத்துக்கு வெளியே அனுப்பப்பட்டன. கப்பலை சோதனையிட உத்தரவிட்ட அதிகாரி இரவு 1 மணிக்கு தமது ஷிஃப்ட் முடிந்து வீடு சென்ற பின்னரே, இந்த காரியம் நடந்தது.
அந்த நள்ளிரவு கடந்த இரவு நேரத்தில், ஓரிரு அதிகாரிகளே கடமையில் இருந்தனர். அவர்கள் இதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை. (பணம் வாங்கியிருப்பார்கள். இதெல்லாம் அங்கு சகஜம்)
விடிவதற்கு முன்னர் இந்த இரு லாரிகளும் 5 லோடுகளை அடித்துவிட, காலையில் நகாலா துறைமுக அதிகாரிகள் சோதனையிட வந்தபோது கப்பலில் வெறும் களிமண் பொம்மை ஷிப்மென்ட்டுகள்தான் இருந்தன. ஆயுதங்கள் அனைத்தும் துறைமுகத்துக்கு வெளியே போய்விட்டன.
கதை இத்துடன் முடிந்திருந்தால், ஆயுதக் கடத்தல் விவகாரம் வெளியே தெரிய வந்திருக்காது. ஆனால், கதை இத்துடன் முடியவில்லை.
இந்த கடத்தல் விவகாரம் எப்படி வெளியே வந்தது என்றால், இவர்கள் லாரிகள் மூலம் நகாலா துறைமுகத்துக்கு வெளியே கொண்டு போய் சேர்த்துவிட்ட ஆயுதப் பெட்டிகளை இந்த சந்தடியெல்லாம் அடக்கும் வரை சில தினங்களுக்காவது மறைவிடத்தில் வைத்திருந்திருக்கலாம். ஆனால் அப்படிச் செய்யவில்லை.
மறுநாளே, அவசரப்பட்டு வேறு ஒரு வழியில் ஆயுதங்களை அனுப்பி வைக்க ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினார்கள்.
அதற்குக் காரணம், வெளிநாட்டு உளவு அமைப்புகளின் கண்களும், காதுகளும் நகாலா பகுதியில் இருப்பதை நன்றாக தெரிந்து வைத்திருந்த ரினாமோ விடுதலை இயக்கம், இந்த ஆயுதங்கள் தொடர்ந்தும் நகாலா ஏரியாவில் இருப்பதை விரும்பவில்லை என்று ஊகிக்கப்படுகிறது.
இதனால், எவ்வளவு சீக்கிரம் ஆயுதங்களை அனுப்ப முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் அனுப்ப, சர்வதேச கடத்தல் நெட்வெர்க்குகளின் உதவிகளை நாடினார்கள். அதுதான் மிகப் பெரிய தவறு.
கப்பலில் இருந்து ஆயுதங்கள் இறக்கப்பட்ட மறுநாளே முயற்சிகளை தொடங்கினாலும், உடனடியாக ஆயுதங்களை அனுப்பக்கூடிய ஏற்பாட்டை அவர்களால் செய்யமுடியவில்லை – ஏற்பாடுகளை செய்து முடிக்க ஒரு வாரம் பிடித்தது.
அதற்குள் நகாலா ஏரியாவில் ஆயுதங்கள் இருப்பதை சி.ஐ.ஏ. மணந்து பிடித்துவிட்டது. அவசரப்பட்டு சர்வதேச கடத்தல் நெட்வெர்க்குகளிடம் போனால், சி.ஐ.ஏ.வுக்கு மூக்கில் வியர்த்துவிடும்.
ஒரு வார காலத்தின் பின்னர் இவர்கள் ஆயுதங்களை வெளியேற்ற செய்துகொண்ட ஏற்பாடு, நகாலா துறைமுகத்தின் ஊடாக மற்றுமோர் கப்பல் மூலமாக கடத்துவது அல்ல. துறைமுகத்தில் ஏற்கனவே ஒரு தடவை சறுக்கி விட்டதால், வழமையான கடல் பாதையைத் தேர்தெடுக்காமல், வேறு ஒரு வழியை தேர்தெடுத்தார்கள்.
அந்த வழி – விமானம் மூலம் ஆயுதங்களை மொசாம்பிக்கை விட்டு வெளியே கொண்டு செல்வது.
இதில் தமாஷ் என்னவென்றால், விமானம் மூலம் ஆயுதங்களைக் கடத்துவதில் இவர்களுக்கு பெரிதாக அனுபவம் இல்லை. இதற்குமுன் விமானம் மூலம் ஆயுதம் கடத்தியதும் இல்லை.
இவர்கள் செய்த ஏற்பாட்டின்படி, ஆயுதப் பெட்டிகள் நகாலா துறைமுகத்துக்கு அருகிலிருந்த சரக்கு குடோனில் இருந்து சரியாக ஒரு வாரத்தின்பின், நம்பூலா என்ற இடத்திற்கு தரை மார்க்கமாக ட்ரக் மூலம் அனுப்பப்பட்டது. அங்குள்ள சிறிய சிவிலியன் விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கே ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்தபடி இரு செஸ்னா 210 ரக விமானங்கள் தயாராக இருந்தன. இதில் ஒரு விமானத்திற்கு வெளியே பெயர் ஏதும் எழுதப்பட்டு இருக்கவில்லை. அது எந்த நிறுவனத்தின் விமானம் என்று தெரியாது. இரண்டாவது விமானத்தில் எழுதப்பட்டிருந்த பெயர் Sky Air Cargo.
இரு விமானங்களிலும் ஆயுதப் பெட்டிகள் ஏற்றப்பட்டன. விமானங்களும் புறப்பட்டு சென்றுவிட்டன. நம்பூலா விமான நிலையம் அருகே, சி.ஐ.ஏ. ஏஜென்ட்டுகள் இருந்து இதையெல்லாம் பார்த்தார்கள். ஆனால், விமானங்கள் புறப்படுவதை யாரும் தடுக்கவில்லை.
இந்த இடத்தில், உங்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்படலாம். இவ்வளவையும் தெரிந்துகொண்ட சி.ஐ.ஏ., எதற்காக கடத்தலை தடுத்து நிறுத்தவில்லை? மொசாம்பிக் அரசு உதவியுடன் மடக்கி பிடித்திருக்கலாமே?
செய்ய மாட்டார்கள். அதுதான் ஆபிரிக்க சி.ஐ.ஏ. ஆபரேஷன்.
சிறிய ஆபிரிக்க நாட்டு விடுதலை அமைப்புகளுக்கு ஆயுதங்கள் போய் சேர வேண்டும் என்பது, சி.ஐ.ஏ. ஆபரேஷனின் ஒரு பகுதி. தற்போது, அமெரிக்க சிறையில் இருக்கும் பிரபல ஆயுதக் கடத்தல்காரர் விக்டோர், இந்த ஏரியாவில் ஆயுதம் கடத்திய காலத்தில், அவரது ஒவ்வொரு நடமாட்டத்தையும் சி.ஐ.ஏ. அறிந்து வைத்திருந்தது. (அவை மிகவும் சுவாரசியமான விஷயங்கள். மற்றொரு கட்டுரையில் தருகிறோம்)
ஆபிரிக்க நாடுகளில் ‘கொதிநிலை’ இருக்கும்படி பார்த்துக் கொள்வது, சி.ஐ.ஏ. ஆபரேஷனின் ஒரு பகுதி. அதனால், அங்குள்ள விடுதலை இயக்கங்கள் ஆயுதம் வாங்கும்போதோ, கடத்தும்போதோ, உடனடியாக தடுப்பதில்லை. யாருக்கு எவ்வளவு ஆயுதங்கள் போகின்றன, ஆயுதக் கடத்தல் ரூட் எது என்ற விபரங்களை மட்டும் முழுமையாக தெரிந்து கொள்வார்கள்.
சுருக்கமாக சொன்னால், ஆபிரிக்காவில் சி.ஐ.ஏ. கண்ணை மூடிக்கொண்டு பால் குடிப்பார்கள். ஆனால், பாலைப் பற்றி பசுவுக்கு தெரிந்திராத அனைத்தும் சி.ஐ.ஏ.வுக்கு தெரிந்திருக்கும்.
ஏதாவது ஒரு விடுதலை இயக்கம், அளவுக்கு அதிகமாக ஆயுதங்களை வாங்கி குவிக்கிறது என்று தெரியவந்தால், கடத்தல் செயினை வெட்டி விடுவார்கள். ஆயுத சமநிலை மாறாமல் பார்த்துக் கொள்வதே சி.ஐ.ஏ.வின் வேலை. ஒரு விடுதலை இயக்கங்கத்துக்கு ஆயுதம் சப்ளை செய்ய ஆள் கிடைக்காதபோது, சி.ஐ.ஏ.வே வேறு சானல் ஊடாக ஆயுத விநியோகம் செய்ததுகூட நடந்தது.
இதெல்லாம் ‘வேறு விதமான’ விளையாட்டுகள்
இந்த மொசாம்பிக் விடுதலை இயக்கம் இரு செஸ்னா விமானங்களில் ஆயுதம் கடத்தியதை தடுக்காமல் விட்ட சி.ஐ.ஏ., அந்த ஆயுதங்கள் எப்படி ‘போய் சேர வேண்டியவர்கள்’ கைகளுக்கு போய் சேர்ந்தன என்பதை மட்டும் முழுமையாக தெரிந்து கொண்டார்கள். பிற்காலத்தில் சி.ஐ.ஏ., அந்த ரூட்டிலும் ஒரு கண் வைத்திருக்கலாம் அல்லவா?
சரி. நம்பூலா விமான நிலையத்தில் இருந்து இந்த ஆயுதங்கள் போய் சேர்ந்த ரூட் எது?
உளவு வட்டார தகவல்களில் இருந்து தெரியவந்ததன்படி, இந்த இரு செஸ்னா விமானங்களும் மொசாம்பிக் நம்பூலா ஏர்போர்ட்டில் இருந்து, ஸாம்பியா நாட்டிலுள்ள ன்டோலா (Ndola) என்ற விமான நிலையத்திற்கு போனதாகத் தெரிகிறது. அதன் பின்னர் அங்கிருந்து ட்ரான்ஸ் ஷிப்மென்ட் ஆக ஆபிரிக்காவிலுள்ள பெயர் குறிப்பிடப்படாத நாடு ஒன்றுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அங்கிருந்து படகுகள் மூலம், ப்ருண்டி மற்றும் ஸயர் (தற்போதைய பெயர் கொங்கோ குடியரசு) நாடுகளிலிருந்து இயங்கும் விடுதலை அமைப்புக்களுக்கு லேக் தன்காயின்கா (Lake Tanganyika) வழியாக போய் சேர்ந்தன.
இந்த ஆயுதங்களை ஏற்றிச் செல்ல நகாலா துறைமுகத்தில் தயாராக நின்ற கப்பல் தான்சேனியா நாட்டவர் ஒருவருக்கு சொந்தமானது. அதில் இந்திய நாட்டுக் கொடி பறக்க விடப்பட்ட காரணம், அது நிஜமாகவே இந்தியாவில் ரிஜிஸ்ட்ரேஷன் செய்யப்பட்ட கப்பல் என்பதால் அல்ல. ஆனால், அந்தக் கப்பல் அடிக்கடி மும்பை துறைமுகம் சென்று வந்துகொண்டிருந்தது.
ஒருவேளை, கப்பல் உரிமையாளரான தான்சேனியா நாட்டவருக்கு, இந்திய கனெக்ஷன் ஏதாவது இருக்கலாம். அது தெளிவாக தெரியவில்லை.
இந்த ஆயுதக் கடத்தல் முடிந்த பிறகு கிடைத்த ஒரேயொரு தகவல் – ஆயுதங்களை ஏற்றிக்கொண்டு சென்ற இரண்டு செஸ்னா 210 விமானங்களில் ஒன்று மாத்திரம் 2 நாட்கள் கழித்து மீண்டும் நம்பூலா விமான நிலையத்திற்கு வந்தது. இம்முறை வந்தபோது அதிலிருந்த பொருட்கள் ஆயுதங்கள் அல்ல – பாம்புத்தோல்கள், சந்தனக் கட்டைகள் மற்றும் சில சிறிய பெட்டிகள்.
அந்தச் சிறிய பெட்டிகளில் இருந்தவை வைரங்கள் என்று நம்பப்படுகிறது.
அனுப்பி வைக்கப்பட்ட ஆயுதங்களுக்கு பண்டமாற்றாக, மொசாம்பிக் வரை வந்து சேர்ந்தவை இவை என்றும் ஊகிக்கப்படுகிறது.
ஆயுதங்கள் ஏற்றிச் சென்ற விமானத்தில் சரக்கை ஏற்றிய நம்பூலா விமானநிலைய ஊழியர்களை சி.ஐ.ஏ. பின்னர் விசாரித்தபோது, அந்த செஸ்னா விமானத்தினுள் ஏற்றப்பட்ட மரப்பெட்டிகளுக்குள் இருந்த சரக்கு என்ன என்று தமக்கு தெரியாது என்று கூறிவிட்டார்கள். ஆனால், சரக்கு இருந்த மரப்பெட்டிகள் (Crates) மற்றும் அவற்றை சுற்றியிருந்த பொலிதீன் கவர்களில் (shrink wrap) அவை தயாரிக்கப்பட்ட இடம் பல்கேரியா என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்ததாக கூறியிருக்கிறார்கள்.
இந்த செகன்ட் ஹேன்ட் ஆயுதங்கள் நிஜமாக புறப்பட்ட இடம் (பாயின்ட் ஆஃப் ஒரிஜின்) பல்கேரியா நாடாக இருக்க முடியாது. ஆனால், மொசாம்பிக் விடுதலை அமைப்புக்கு ஆயுத விவகாரங்களில், பல்கேரியாவில் ‘ஏதோ கனெக்ஷன்’ இருப்பதை சி.ஐ.ஏ. தெரிந்து கொண்டது. The End.
படித்தது பிடித்திருந்ததா? தமிழில் அதிகம் வெளிவராத இதுபோன்ற கட்டுரைகள் அதிகம் இடம்பெற வேண்டும் என்று விரும்புகிறீர்களா? வாசகர்களின் ஆதரவு இருந்தால் தொடர்ந்து தரமுடியும்.