Wednesday, February 20, 2013

ரீடர்ஸ் டைஜஸ்ட் 'திவால்': ரூ.1,900 கோடி காண்ட்ராக்டை இழக்கும் எச்.சி.எல்!

ரீடர்ஸ் டைஜஸ்ட் 'திவால்': ரூ.1,900 கோடி காண்ட்ராக்டை இழக்கும் எச்.சி.எல்!



ரீடர்ஸ் டைஜஸ்ட் பத்திரிக்கை நிறுவனம் திவால் ஆகிவிட்டதாக அறிவித்துள்ளதால் அந்த நிறுவனத்துடனான ரூ. 1,900 கோடி (350 மில்லியன் டாலர்) காண்ட்ராக்டை இந்தியாவின் எச்.சி.எஸ் நிறுவனம் இழக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் 4வது மிகப் பெரிய சாப்ட்வேர் நிறுவனமான எச்சிஎல் கடந்த 2009ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரீடர்ஸ் டைஜஸ்ட் நிறுவனத்துடன் ரூ. 1,900 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது. அந்த நிறுவனத்தின் அனைத்துப் பிரிவுகளையும் கம்ப்யூட்டர் மயமாக்கும் 7 ஆண்டு காண்ட்ராக்ட் அது.

இந்த இதழை அமெரிக்காவின் ஆர்டிஏ ஹோல்டிங் கம்பெனி என்ற நிறுவனம் நடத்தி வருகிறது. ஆனால், இதழின் விற்பனை சரிந்ததாலும் விளம்பரங்கள் குறைந்துவிட்டதாலும் பெரும் நஷ்டத்தை ரீடர்ஸ் டைஜஸ்ட் சந்தித்து வருகிறது.

இதையடுத்து திவால் ஆகிவிட்டதாக இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. அமெரிக்க திவால் நீதிமன்றத்தில் இந்த அறிவிப்பை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளதால், அதற்கு சில நிதியுதவிகள் கிடைப்பதோடு, இந்த கடன்கள் மீதான வட்டி நெருக்கடியும் குறையும். மேலும் இந்த நிறுவனம் பிறருக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகைகளும் ரத்தாகும்.

இப்போது சுமார் ரூ. 5,400 கோடியளவுக்கு கடன் நெருக்கடியில் இந்த நிறுவனம் உள்ளது. திவால் ஆகிவிட்டதாக அறிவித்துள்ளதால், இந்த நிறுவனம் எச்சிஎல் இதுவரை செய்து தந்த பணிகளுக்கான கட்டணமான ரூ. 23 கோடியைக் கூட தருமா என்பது சந்தேகமாகியுள்ளது.

அதே போல விப்ரோ நிறுவனத்துக்கும் சுமார் ரூ. 5 கோடியை இந்த நிறுவனம் வழங்க வேண்டியுள்ளது. அதுவும் வருமா என்பது தெரியவில்லை.

அமெரிக்க நீதிமன்றத்தில் சாப்டர் 11வது பிரிவின் கீழ் திவால் ஆகிவிட்டதாக ரீடர்ஸ் டைஜஸ்ட் அறிவித்துள்ளது. இதன்மூலம் அதன் 464.4 மில்லியன் டாலர் அளவுக்கான கடன்கள் பங்குகளாக மாற்றப்பட்டுவிடும். இதன்மூலம் அதன் கடன் அளவு 70 மில்லியன் டாலர் அளவாகக் குறையும். இதன்மூலம் 4 மாதங்களில் கடன்களில் இருந்து வெளியே வந்து நிறுவனமும் தப்பிவிட வாய்ப்புண்டு.

ஆனால், நிலைமை மோசமாகி சாப்டர் 7வது பிரிவின் கீழ் திவால் நோட்டீஸை இந்த நிறுவனம் தந்துவிட்டால், யாருக்கும் எந்தப் பணத்தையும் இந்த நிறுவனம் செட்டில் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. அப்படிப்பட்ட நிலையில் எச்சிஎல், விப்ரோவுக்கு தர வேண்டிய பணத்தையும் தர வேண்டியதில்லை. மேலும் அப்படிப்பட்ட நிலைமை வந்தால் எச்சிஎல் செய்து கொண்ட ரூ. 1,900 கோடி ஒப்பந்தமும் ரத்தாகிவிடும். இது எச்சிஎல் நிறுவனத்துக்கு நீண்டகால அடிப்படையில் பெரும் இழப்பாக அமையும்.

கடந்த 4 ஆண்டுகளில் ரீடர்ஸ் டைஜஸ்ட் நிறுவனம் திவால் ஆகிவிட்டதாக அறிவிப்பது இது இரண்டாவது முறையாகும். கடந்த 2009ம் ஆண்டும் இதே போன்ற திவால் நிலைமை இந்த நிறுவனம் சந்தித்தது. ஆனால், 2010ம் ஆண்டில் நிதி நெருக்கடியில் இருந்து மீண்டு வந்தது. இந் நிலையில் மீண்டும் திவால் ஆகியுள்ளது.

இந்த முறையும் மீண்டு எழுந்துவிட்டால் எச்சிஎல்லுக்கு சிக்கல் குறையும்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!