வறண்டு கிடந்த பூமி குளிர்ந்தது தென்மாவட்டங்களில் பலத்த மழை
தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களாக மழை ஏமாற்றி வந்தது. பெருமளவு மழை பெய்யும் காலமான வடகிழக்கு பருவமழை காலம் மட்டுமல்லாது, புயல் காலங்களில் கூட பெரிய அளவில் மழை பெய்யவில்லை. இதனால் விவசாய நிலங்கள் வறண்டு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. சென்னையை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களையும் தமிழக அரசு வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்தது.இந்நிலையில் தென்மாவட்டங்களிலும், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் மழை பெய்ய தொடங்கி உள்ளது. இதனால் தமிழகத்தில் வறண்டு கிடந்த பூமி குளிர்ந்துள்ளது. விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தென்காசி:தற்போது ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வரலாற்றில் இல்லாத அளவிற்கு பிப்ரவரி மாதத்தில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பகல் முழுவதும் தென்காசி, குற்றாலம் பகுதியில் மேகமூட்டம் காணப்பட்ட நிலையில் மழை பெய்யாமல் கண்ணாமூச்சி காண்பித்தது.நேற்று அதிகாலை 2 மணியளவில் திடீரென இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. சுமார் 2 மணி நேரம் நீடித்த மழையால் வறண்டு கிடந்த குற்றாலம் அருவிகளில் காலை முதல் தண்ணீர் விழத்துவங்கியது. மெயினருவியில் தண்ணீர் பரந்து பாதுகாப்பு வளைவை தொட்டுக்கொண்டு விழுந்தது. ஐந்தருவியில் ஐந்து பிரிவுகளிலும் தண்ணீர் நன்றாக விழுந்தது. பல மாதங்களாக தண்ணீரின்றி வெறும் பாறை மட்டுமே தெரிந்த பழையகுற்றாலம், புலியருவியில் கூட தண்ணீர் நன்றாக விழுகிறது.நெல்லை மாவட்டத்தில் பரவலாக நேற்று முன்தினம் நள்ளிரவு துவங்கி நேற்று முழுவதும் பலத்த மழை பெய்தது.
மணிமுத¢தாறு அணைப் பகுதியில் அதிகபட்சமாக 21 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. பாபநாசம் அணைப்பகுதியில் 96 மிமீ மழை பதிவாகியுள்ளது. சேர்வலாறு அணைப்பகுதியில் 10 மிமீ மழை பதிவாகியுள்ளது.நெல்லையில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. காலை 11 மணிக்கு பலத்த மழை பெய்தது. நெல்லை சந்திப்பு, டவுன், பாளையங்கோட்டை, தச்சநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் சுமார் ஒரு மணி நேரம் நல்ல மழை பெய்தது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசுகிறது. பிசான பருவ சாகுபடி செய்துள்ள விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.நாகர்கோவில்: குமரி மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக அணை பகுதிகளிலும் பலத்த மழை இருந்ததால் நீர்வரத்து அதிகரித்தது. விவசாயத்தின் உயிர் நாடியாக விளங்கும் பேச்சிப்பாறை அணையின் நீர் மட் டம் 3.40 அடியில் இருந்து 4.30 அடியாக உயர்ந்தது.நாகர்கோவில், கன்னியாகுமரி பகுதிகளில் நேற்று முன் தினம் இரவு முதல் விடிய விடிய சாரல் இருந்தது. நாகர்கோவில் நகரில் நேற்று காலையில் இருந்து மழைக்கான அறிகுறியாகவே இருந்தது. பகல் 1.10க்கு மழை பெய்ய தொடங்கியது. சுமார் 1 மணி நேரம் மழை நீடித்தது.மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சையி லும் நேற்று கனமழை பெய்தது. அதிகாலையில் இருந்து மழை தூறியபடி இருந்தது.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!