ஒரே பிரசவத்தில் அமெரிக்க பெண்ணுக்கு 2 இரட்டை குழந்தைகள்
அமெரிக்க பெண் ஒருவர், ஒரே பிரசவத்தில் 2 இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். 7 கோடி பேரில் ஒருவருக்குதான் இதுபோல குழந்தை பிறப்பு ஏற்படும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் பகுதியைச் சேர்ந்த திரெசா மாண்டெல்வோ (36) என்ற பெண்ணுக்கு ஒரே மாதிரியான உருவம் கொண்ட 2 இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. அவற்றுக்கு ஏ,பி,சி,டி வரிசைப்படி ஏஸ், பிளய்னி, காஷ், டைலன் என்று பெயரிட்டுள்ளனர்.
முதலில் ஏஸ், பிளய்னி என்ற இரட்டை குழந்தைகளை டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் எடுத்தனர். அதற்கு பிறகும் அந்த பெண்ணின் வயிற்றிலிருந்து மேலும் இதய துடிப்பு கேட்பதை டாக்டர்கள் அறிந்தனர். அப்போது, மேலும் ஒரு ஜோடி குழந்தைகள் இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தனர். அந்த குழந்தைகளும் அறுவை சிகிச்சை மூலம் பாதுகாப்பாக எடுக்கப்பட்டன.
தொப்புள் கொடி மூலம் தாயிடமிருந்து குழந்தைக்கு உணவு செல்லும். பொதுவாக ஒரு குழந்தைக்கு ஒரு தொப்புள் கொடி இருக்கும். ஆனால், திரேசாவின் முதல் தொப்புள் கொடியில் ஒரு ஜோடி குழந்தைகளுக்கும், மற்றொரு தொப்புள் கொடியில் மேலும் ஒரு ஜோடிக்கும் உணவு சென்றுள்ளன. இதுகுறித்து ஹார்வர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் ஆலன் பென்சியாஸ் கூறுகையில், ''மொத்த குழந்தை பிறப்பில் 2 சதவீதத்தினர் இரட்டையர்களாக பிறப்பர்.
அதில் 30 சதவீதத்தினர் ஒரே மாதிரியான உருவ அமைப்பு கொண்டிருப்பர். அதிலும் ஒரே மாதிரி உருவ அமைப்பு கொண்ட 2 இரட்டை குழந்தைகள் பிறப்பது 7 கோடியில் ஒருவருக்குதான் நிகழும்'' என்றார். குழந்தைகள் 31 வார காலம் தாயின் வயிற்றில் இருந்தாலும் அவற்றுக்கு உடல் நல அபாயங்கள் உள்ளன. இந்த குழந்தைகளின் நோய் எதிர்ப்பு திறன் முழுமையாக இல்லை.
எனவே இவை மேலும் சிறிது காலம் மருத்துவ கண்காணிப்பில் இருக்கும் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
குழந்தைகளின் தந்தை மானுவேல் கூறுகையில், ''எங்கள் 2 வயது ஆண் குழந்தைக்கு ஒரு தங்கை அல்லது தம்பியை கொடுக்க நினைத்தோம். ஆனால் கடவுள் 4 குழந்தைகளை கொடுப்பார் என்று எதிர்பார்க்கவில்லை'' என்றார்.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!