நியூயார்க் வால் ஸ்ட்ரீட் COMMUTER FERRY விபத்து!
நியூயார்க்கில் அலுவலகம் செல்பவர்கள் அதிகம் பயணிக்கும் இரண்டடுக்கு ஃபெரி (commuter ferry) நேற்று காலை விபத்துக்குள்ளாகி உள்ளது. 50க்கும் மேற்பட்ட பயணிகள் இந்த விபத்தில் காயமடைந்தனர். மொத்தம் 326 பேர் பயணம் செய்த இந்த ஃபெரி விபத்துக்குள்ளானது, அங்கு அலுவலகங்களில் பணிபுரியும் பலரை திகிலடைய வைத்துள்ளது.
காரணம், மான்ஹட்டன் பகுதியில் அலுவலகங்களில் பணிபுரியும் அநேகர், தினமும் உபயோகிப்பது ஃபெரி பயணத்தைதான்.
ஃபெரி கரையை நெருங்கிவிட்ட நேரத்தில் திடீரென காங்க்ரீட்டுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது. கரைக்கு நெருக்கமாக வந்துவிட்டதில், கீழே இறங்க தயாராக பெரும்பாலான பயணிகள் எழுந்து, ஃபெரியின் முன்பகுதிக்கு வந்து நின்றிருந்த நிலையிலேயே, ஃபெரி மோதியது. இதனால், அநேகர் 8 முதல் 10 அடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டனர்.
நியூஜெர்சி ஹைலேன்ட்ஸில் இருந்து காலை 8 மணிக்கு புறப்படும் ஃபெரி இது. 9 மணிக்கு அலுவலகம் செல்ல வேண்டிய பலர் இதில் பயணம் செய்வது வழக்கம். 8 மணிக்கு புறப்படும் ஃபெரி, சரியாக 8.43க்கு மான்ஹட்டன் பகுதியில் உள்ள இறங்குதுறை 11ஐ சென்றடைவது வழக்கம். விபத்து நடந்தபோது, ஃபெரி, இறங்குதுறை 11-ல் இருந்து 40-50 மீட்டர் தொலைவில், சுமாரான வேகத்தில் இயங்கிக் கொண்டிருந்தது.
அந்த நேரத்தில் திடீரென காங்க்ரீட் ஒன்றில் மோதியது ஃபெரி. மோதியபோது அதன் வேகம் 10 – 12 knots ஆக இருக்கலாம் என்று பயணம் செய்தவர்கள் சொல்கிறார்கள். வால் ஸ்ட்ரீட் என்ற பெயருடைய இந்த ஃபெரி, Seastreak என்ற நிறுவனத்தால் இயக்கப்படுகிறது. இந்த நிறுவனம், நியூயார்க்கில் பல ஃபெரிகளை இயக்கும் நிறுவனம்.
விபத்து எப்படி நடந்தது என்பது அதிகாரபூர்வமாக இன்னமும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், அதில் பயணம் செய்தவர்களின் கூற்றுப்படி, இறங்குதுறையின் ஒரு ஸ்லிப்பை தவறவிட்டு, அடுத்த ஸ்லிப்பில் போய் மோதியது என்று கூறப்படுகிறது. காயமடைந்த பயணிகளில் 20 பயணிகள் தலை மற்றும் கழுத்தில் அடிபட்ட நிலையில், ஸ்ட்ரெட்சர்களில் மருத்துவமனைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.
காயமடைந்ததாக பதிவாகியுள்ளவர்களின் எண்ணிக்கை 57. இதில் இருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். 9 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். இந்த 11 பேரும் மான்ஹட்டன் வைத்தியசாலைகளுக்கு எடுத்துச் செல்லப்பட, உயிராபத்தற்ற காயம் ஏற்பட்டவர்கள், ப்ருக்ளின் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். (East riverன் அந்தப்பக்கம் உள்ளது)
விபத்து நடந்தபோது ஃபெரியில் இருந்த ஒருவர், “பலரும் எழுந்து நின்ற நிலையில் திடீரென ஃபெரி மோதியதால், கிட்டத்தட்ட அனைவரும் முன்னோக்கி தூக்கியெறியப்பட்டனர். இதில் மிக மோசமான நிகழ்வு என்னவென்றால், ஒருவர்மேல் ஒருவர் போய் விழுந்தனர். இதனால், அடியில் சிக்கிக் கொண்டவர்கள் பலத்த காயமடைந்தனர்” என்றார்.
விபத்தில் காயமடைந்த ஒருவர் கூறும்போது, “விபத்து நடந்தவுடன் ஃபெரியின் தளம் முழுவதிலும் விழுந்த நிலையில் பலர் காணப்பட்டனர். கண்ணாடிச் சிதறல்கள், காகிதங்கள். ரத்தம் என்று அனைத்தும் தளத்தில் பரவியிருந்ததை பார்த்தபோது, யுத்த களம் ஒன்றில் யுத்தம் முடிந்தபின் காணப்படும் காட்சி போலிருந்தது என்றார்.
விபத்து நடந்த உடனேயே, ஃபெரி ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு, மோசமாக காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கத் தொடங்கினர். ஓரிரு நிமிடங்களில் இறங்குதுறையில் ஃபெரி பொசிஷன் பண்ணப்பட்டு விட்டது. அதையடுத்து போலீஸ் மற்றும் மருத்துவ சிகிச்சை பிரிவினர் வரத் தொடங்கினர். சிறிது நேரத்தில் நியூயார்க் மேயர் மைக்கேல் ப்ளும்பர்க் வந்து சேர்ந்தார்.
விபத்துக்குள்ளான ஃபெரி வால்ஸ்ட்ரீட் 141 அடி நீளமான, இரண்டு அடுக்குகளை கொண்டது. அதிகபட்சம் 400 பயணிகள் பயணிக்கலாம். அதிகபட்ச வேகம் 38 knots (44 mph). Gladding-Hearn கப்பல் கட்டுமிடத்தில் கட்டப்பட்டது. இதுவரை விபத்துக்கு உள்ளானதில்லை. தற்போது, இதன் முன் பகுதி நொருங்கி, பெரிய துவாரம் ஏற்பட்டுள்ளது. விபத்து எப்படி நடந்தது என்பது குறித்த விசாரணைகள் தொடங்கிவிட்டன.