Friday, January 17, 2014

அழிந்து விடும் அபாய நிலையில் அரிய வகை சிங்கங்கள்

அழிந்து விடும் அபாய நிலையில் அரிய வகை சிங்கங்கள்



மேற்கு ஆப்ரிக்க சிங்கங்கள் விரைவில் அழிந்துவிடும் அபாய நிலையில் இருப்பதாக சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
பந்த்தேரா என்ற தன்னார்வ அமைப்பு மேற்கு ஆப்ரிக்க பகுதியில் இருக்கும் 17 நாடுகளில் ஆய்வு நடத்தியது.

இதுதொடர்பான அறிக்கை சமீபத்தில் வெளியானது.

இதில், செனகலில் தொடங்கி நைஜீரியா வரையிலான 17 நாடுகளில் சுமார் ஆறு ஆண்டுகள் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் படி மேற்கு ஆப்ரிக்காவுக்கே உரிய தனிப்பட்ட வகையான சிங்கங்கள் தற்போது 400 மட்டுமே எஞ்சியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கங்களின் வாழ்விடங்கள் பெருமளவில் விவசாய நிலங்களாக மாற்றப்பட்டதே இதற்கு முக்கியக் காரணம் என்றும், பருத்தி பயிர் செய்வதற்காகவும், உணவுத் தேவைக்கான இதர பயிர்களுக்காவும் பெருமளவில் காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வாளர்களில் ஒருவரான பிலிப் ஹென்ஸ்ஹெல் தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில், அழிந்து கொண்டிருக்கும் இந்த அரிய வகை சிங்கங்களை பாதுகாக்க தேவைப்படும் நிதி வசதி இங்குள்ள அரசுகளிடம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.


Thursday, January 16, 2014

மனிதனும் விலங்கு தான்... 6ம் அறிவு என்பது இல்லை: விஞ்ஞானிகள் நிரூபணம்

மனிதனும் விலங்கு தான்... 6ம் அறிவு என்பது இல்லை: விஞ்ஞானிகள் நிரூபணம் 



பகுத்தறியும் திறன் எனப்படும் ஆறாவது அறிவு என்ற ஒன்று மனிதனிடம் மட்டும் தனிப்பட்ட முறையில் இல்லை என ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். 

பொதுவாக, மனிதனையும் மற்ற உயிரினங்களையும் வித்தியாசப்படுத்துவது ஆறாம் அறிவு என்ற ஒன்று தான். உடல், நாக்கு, மூக்கு, கண் மற்றும் காது இவற்றால் உணர்வது ஐந்தாம் அறிவு. இவை ஐந்தையும் தாண்டி, சிந்தனை என்பதன் துணை கொண்டு உணரத்தலைப்படுவது ஆறாம் அறிவு. 

இந்நிலையில், ஐம்புலன்களுக்கு அப்பாற்பட்ட உணர்வு எனப்படும் ஆறாவது அறிவு என்ற ஒன்று இல்லையென்று விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர்.


நிரூபணம்.... 

ஆறாம் அறிவு இல்லை என்ற இந்த உண்மையை சிறிய சோதனைகள் மூலம் ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் நிரூபித்துக் காட்டியுள்ளனர். இந்த ஆய்வறிக்கைகள் 'பிளோஸ் ஒன்' என்ற இதழிலும் வெளியிடப்பட்டுள்ளது


விளக்கம்.... 

இந்த ஆய்வின் முடிவில், ஒரு மாற்றம் ஏற்படும்போது மக்களால் அதைப் பார்க்க இயலவில்லை என்றபோதும் உணரமுடியும் என விளக்கப் பட்டுள்ளது.


உதாரணமாக.... 

உதாரணத்திற்கு ஒருவருடைய தோற்றத்தில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை நாம் உணரும்போதும் அந்த மாற்றம் அவர்களுடைய தலைமுடி திருத்தப்பட்டிருப்பதால் ஏற்பட்டது என்பதை நாம் உணரமுடியாமல் இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெளிவு படுத்தியுள்ளனர்.

முதல் ஆராய்ச்சி... 

இது குறித்து ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள உளவியல் ஆராய்ச்சிப் பள்ளியின் முன்னணி ஆராய்ச்சியாளர் டாக்டர் பியர்ஸ் ஹோவே கூறுகையில், ‘மாற்றங்களை நேரடியாகப் பார்க்க முடியாவிட்டாலும் மனிதனால் உணரமுடியும் என்பதை உறுதிப்படுத்தும் முதல் ஆராய்ச்சி இது என்று குறிப்பிடுகின்றார்.

இது தான் 6வது அறிவு.... 

பொதுவாகக் குறிப்பிடப்படும் ஐம்புலன்களை சார்ந்து இல்லாமல் மனதின் மூலம் மாற்றங்களை உணரமுடியும். இதுவே இதுநாள்வரை ஆறாவது அறிவு என்று குறிப்பிடப்பட்டு வந்தது எனத் தெரிவித்துள்ளார்.


யாஹூ சிஓஓ-வை வீட்டுக்கு அனுப்பிய சிஇஓ மரிஸா மேயர்

யாஹூ சிஓஓ-வை வீட்டுக்கு அனுப்பிய சிஇஓ மரிஸா மேயர் 




யாஹூ நிறுவன சிஇஓ மரிஸா மேயர் நிறுவனத்தின் சிஓஓவான ஹென்ரிக் டி காஸ்ட்ரோவை வேலையை விட்டு நீக்கியுள்ளார். 

கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்த மரிஸா மேயர் கடந்த 2012ம் ஆண்டு யாஹூ நிறுவனத்தின் சிஇஓவாக பொறுப்பேற்றார். அதன் பிறகு அவர் கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்த ஹென்ரிக் டி காஸ்ட்ரோ என்பவரை யாஹூ நிறுவனத்திற்கு வந்து வேலை செய்யுமாறு அழைத்தார். 

அவரது அழைப்பை ஏற்று 2012ம் ஆண்டு அக்டோபர் மாதம் யாஹூ நிறுவனத்தில் சேர்ந்த காஸ்ட்ரோவுக்கு சிஓஓ பதவியை அளித்தார் மேயர். இந்நிலையில் காஸ்ட்ரோவுக்கும், மேயருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதிலும் கடந்த சில மாதங்களாக இந்த பிரச்சனை பெரிதாகியுள்ளது.இதையடுத்து காஸ்ட்ரோவை மேயர் திடீர் என்று பணியில் இருந்து நீக்கிவிட்டார்.

பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்திற்கு ஹென்ரிக் டி காஸ்ட்ரோ பணியில் இருந்து நீக்கப்பட்டதாக இரண்டு வரியில் எழுதப்பட்ட அறிக்கையை யாஹூ நேற்று மாலை சமர்பித்தது. 

காஸ்ட்ரோவுக்கு இன்று தான் யாஹூவில் கடைசி நாள். அவருக்கு 20 மில்லியன் டாலர் பங்கு போனஸாக வழங்கப்படும் என்று யாஹூ தெரிவித்துள்ளது.