தர்மபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு
தர்மபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இளவரசனின் சடலம் தர்மபுரி அரசுக் கலைக்கல்லூரி பின்புறம் உள்ள தண்டவாளம் அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளது. தர்மபுரி திவ்யாவின் காதல் கணவரான இளவரசன் தற்கொலை செய்து கொண்டாரா என்று காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். தண்டவாளத்தின் அருகிலிருந்து இளவரசனின் மோட்டார் சைக்கிள் மற்றும் கைப்பை மீட்கப்பட்டுள்ளன. இளவரசனின் சட்டைப் பையிலிருந்து 2 கடிதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.
தர்மபுரி கலவரம் விவரம்
தர்மபுரி மாவட்டம் செல்லன் கொட்டாயை சேர்ந்தவர் திவ்யா. இவரும் நாயக்கன் கொட்டாய் நத்தம் காலனியை சேர்ந்த இளவரசனும் காதலித்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். கடந்த ஆண்டு ஆகஸ்டு 8ம் தேதி இளவரசன், திவ்யா இருவரும் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். பெண்ணின் தரப்பில் கடத்தல் என்று புகார் செய்யப்பட்டது. போலீசார் இருவரையும் சேர்ந்து வாழும்படி கூறி அனுப்பினர். இதையடுத்து, திவ்யாவின் தந்தை நாகராஜ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதை தொடர்ந்து, தர்மபுரியில் சாதி கலவரம் மூண்டு வடமாவட்டம் முழுவதும் பற்றி எரிந்தது. 10 மாதங்கள் கடந்த நிலையில், இளவரசன் வீட்டில் இருந்து திவ்யா, மருத்துவமனையில் இருக்கும் உறவினரை பார்த்துவிட்டு வருவதாகக் கூறி சென்றவர் திரும்பவில்லை. மனைவியை காணவில்லை என்று போலீசில் இளவரசன் புகார் கொடுத்தார். இதற்கிடையில் திவ்யாவின் தாய் தேன்மொழி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த ஆட்கொணர்வு மனுவின்படி கடந்த மார்ச் மாதம் இளவரசனும், திவ்யாவும் நீதிபதிகள் முன் ஆஜராயினர். அப்போது கணவனுடன் செல்வதாக கூறி திவ்யா சென்றார். பின்னர் மீண்டும் இந்த வழக்கு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது காதலனுடன் செல்ல விருப்பம் இல்லை. தாயுடன் செல்கிறேன் என்று திவ்யா நீதிபதிகளிடம் கூறினார். இதனால் காதல் ஜோடிகள் பிரிந்தனர். திவ்யா தாயுடன் செல்ல உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இதை தொடர்ந்து அந்த மனு நேற்று மீண்டும் நீதிபதிகள் ஜெயசந்திரன், எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது திவ்யா தாயுடன் நேரில் ஆஜரானார். திவ்யா சார்பாக வக்கீல் கே.பாலு ஆஜராகி, திவ்யாவை ஒப்படைக்க கோரி அவரது தாய் தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்றுக்கொள்கிறோம். மகள் தாயுடன் செல்ல நீதிமன்றம் அனுமதி கொடுத்ததால் நாங்கள் மனுவை வாபஸ் பெற்றுக்கொள்கிறோம். இதற்கு அனுமதி தர வேண்டும் என்றார்.
இளவரசனின் வக்கீல் சங்கரசுப்பு ஆஜராகி, இந்த மனுவை வாபஸ் பெற அனுமதிக்க கூடாது. திவ்யா வன்னியர் சங்க வக்கீல்கள் வசம் உள்ளார். எனவே வக்கீல்கள் கூறுவதை திவ்யா அப்படியே நீதிமன்றத்தில் கூறுகிறார். அவருக்கு அறிவுசார் கவுன்சலிங் நடத்த உத்தரவிட வேண்டும் என்றார். இதை கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கில் நாளை தீர்ப்பு கூறுவதாக அறிவித்தனர்.
பின்னர் நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த திவ்யா கதறி அழுதார். பின்னர் கண்ணீருடன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: என் தந்தை இறந்துவிட்டார், தாய் தனியாக இருக்கிறார். அதனால் நான் அவருடன் செல்லவே விரும்புகிறேன். இளவரசனுடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை. என்னால்தான் எனது தந்தை தற்கொலை செய்து கொண்டார். இதனால் எனக்கு மனஉளைச்சலாக உள்ளது. எனது தந்தையின் நினைவாகவே உள்ளது. இதற்கு காரணமான நான் எனது தாயுடன் இருந்து எனது காலத்தை கழிக்க விரும்புகிறேன். என்னால் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யவே விரும்புகிறேன். எக்காரணத்தை கொண்டும் இளவரசனுடன் செல்ல விரும்பவில்லை. இவ்வாறு அவர் பேட்டி அளித்தார்.
என்னால்தான் தந்தை தற்கொலை செய்து கொண்டார். இதனால் எனக்கு மனஉளைச்சலாக உள்ளது. எனது தந்தையின் நினைவாகவே உள்ளது. இதற்கு காரணமான நான் எனது தாயுடன் இருந்து காலத்தை கழிக்க விரும்புகிறேன்.
இளவரசன் மரணம்
இந்நிலையில், தர்மபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இளவரசனின் சடலம் தர்மபுரி அரசுக் கலைக்கல்லூரி பின்புறம் உள்ள தண்டவாளம் அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளது. இளவரசன் தற்கொலை செய்து கொண்டாரா என்று காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். தண்டவாளத்தின் அருகிலிருந்து இளவரசனின் மோட்டார் சைக்கிள் மற்றும் கைப்பை மீட்கப்பட்டுள்ளன. இளவரசனின் சட்டைப் பையிலிருந்து 2 கடிதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.
தர்மபுரியில் 144 தடை உத்தரவு
தர்மபுரி முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார் அம்மாவட்ட ஆட்சியர் வில்லி. இளவரசன் உயிரிழந்ததை அடுத்து மாவட்டத்தில் அசம்பாவிதம் நிகழாமல் இருக்க நடவடிக்கை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.