அலுவலகம் செல்லும் இல்லத்தரசிகள்
அலாரம் அடித்தது. பதறிக் கொண்டு எழுந்தாள். பால் பூத்துக்குச் சென்று பாலை வாங்கி வந்து, ஏழரை மணிக்கு ஸ்கூலுக்கு அனுப்ப வேண்டிய மகளை எழுப்பி விட்டு முரண்டு செய்கின்ற அவளைக் குளிக்க வைத்து அதற்கிடையே காபி போட்டு, ‘காபின்னு ஏதோ கொடுப்பாங்களே’ என்று நக்கலாக கேட்கும் கணவனுக்கு காப்பி கொடுத்து விட்டு, சமையல் செய்து, மகளுக்கு மதிய சாப்பாட்டுக்கு எடுத்து வைத்து, காலையில் சாப்பிட டிபன் கொடுத்து, இவளை வேன் வரை கொண்டு விட்டு வரக் கூடாதா என்று கணவனிடம் சொல்ல அவன் ஏதோ சொல்ல அவனிடம் கொஞ்சம் சண்டை போட்டு ஒரு வழியாக மகளை ஸ்கூலுக்கு அனுப்பி விட்டு, தான் குளித்து, தனக்கும் கணவனுக்கும் மதிய உணவு எடுத்து வைத்து, நேற்று இஸ்திரி போட்டு வந்த தன்னுடைய உடைகளை எங்கு வைத்தாய் என்று கத்தும் கணவனுக்கு தேடிக் கொடுத்து தான் சாப்பிட்டு வெளியில் வந்தால், பக்கத்து வீட்டு அம்மா, ஒரு கவரை எடுத்து வந்து, சாயங்காலம் இந்தக் கவரை கொரியர் அனுப்பணுமே உங்க ஆபிஸூக்குத் தான் கொரியர்காரன் வருவானே என்று நீட்டி முழங்குகின்றவர்களிடம் சமாளித்து பஸ் நிறுத்தத்திற்கு வருவதற்குள் மூச்சு வாங்கி விட்டது.
பஸ்ஸில் ஏறினால், பக்கத்தில் நிற்கின்ற ஒருவன் சில்மிஷம் செய்கிறான்; அவனையும் சமாளித்து, அலுவலகத்திற்குச் சென்றால், பக்கத்து சீட்டில் உள்ளவர் வரவில்லையாம்.
அவர் வேலையையும் செய்து, மறக்காமல் பக்கத்து வீட்டு அம்மாவின் கவரை மாலை கொரியர்காரனிடம் கொடுத்து விட்டு, மாலை வீட்டுக்குத் திரும்ப, பஸ்ஸில் சில்மிஷத்தை சமாளித்து வீட்டுக்கு வந்தால் மகள் மீண்டும் முரண்டு, அவளுக்குப் பசி, காபி போட்டுக் கொடுத்து, பிஸ்கட் எடுத்துக் கொடுத்து விட்டு, அவளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தால், அவள் டி.வி. பார்க்கச் செல்கிறாள்.
அவளோடு போராடிக் கொண்டு இருக்கும் பொழுது, கணவன் தன் இரண்டு நண்பர்களோடு வந்து விட்டான். அவர்களுக்கு காபி, டிபன் கொடுத்து அந்தப் பாத்திரங்களை துலக்கி வைத்து விட்டு, வேண்டா வெறுப்பாக படிக்கும் மகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்து விட்டு இரவு சாப்பாட்டிற்கு பிறகு படுக்கச் சென்றால் கணவன் பாடம் எடுக்க ஆரம்பித்து விட்டான். இப்பொழுது இவள் வேண்டா வெறுப்பாக பாடம் கற்றாள்.
இது ஏதோ ஒரு பெண்ணின் கதையல்ல. வேலைக்குச் செல்கின்ற அனைத்துப் பெண்களின் கதை தான்.
அதற்காக கணவனையும் குழந்தையையும் அவர்கள் வேலையை அவர்களே செய்து கொள்ளட்டும் என்று விட்டு விட்டாலும் மனசு கஷ்டப்படுகிறது. நாமே அனைத்து வேலைகளையும் செய்யவும் முடியவில்லை.
கோபம் தான் வருகிறது. இதை வெளியில் காட்டினால் இவர்களுக்காக நாம் படுகின்ற இந்த அனைத்துக் கஷ்டங்களும் வீணாகி விடும். வேலைக்காரி வைத்துக் கொண்டோ அல்லது கணவன் குழந்தைகளுக்குத் தன்னிலை விளக்கித் தன்னுடன் ஒத்துழைக்குமாறு செய்வதன் மூலமாகவோ, நமது அலுவலகப் பணி, இல்லறம் என்ற இரட்டை குதிரைச் சவாரியை மிக லாவகமாகச் செய்ய முடியும்.
எல்லா வேலையும் நாம் தான் செய்ய வேண்டும் என்று இழுத்துப் போட்டுக் கொண்டு செய்து, பிறகு எரிச்சல் அடைந்து, குடும்பத்தில் மற்றவர்கள் சந்தோஷத்தையும் கெடுத்துக் கொள்வதை விட வேலைகளை மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டால், அமைதியும் மகிழ்ச்சியும் தொடரும்.
இல்லறம் நல்லறமாவது இல்லத்தரசிகளின் கையில் மட்டுமல்ல வாழ்க்கைத் துணைவனின் சகிருதய மனோபாவத்திலும் உள்ளது. சகிருதய மனோபாவத்தை கணவனிடத்தில் கொண்டு வருவது கடினம். ஆண்களுக்கு அவரவர் வேலையே பெரிது. பெண்கள் சற்று ஆயாசமாக அவர்கள் அலுவலகத்தில் நடைபெறுவதை தெரிவித்தால் கூட, அது சுவாரசியமாக இருந்தால் கூட கணவன்மார்களுக்கு எரிச்சல் ஏற்பட்டு "போதும்மா உன் ஆபீஸ் புராணம்" என்று முடித்து வைப்பதைத்தான் நாம் பார்க்கிறோம்.
ஆனால் கணவனுக்கு ஒரு கஷ்டம் அலுவலகத்தில் ஏற்பட்டது என்றால் அவனது புலம்பல் அத்தனையும் மனைவி கேட்க வேண்டிய கட்டாயம்! இந்த முரண்பாடுகளைப் போக்குவது எப்படி. சும்மா விட்டுக் கொடுத்து போவது என்பதெல்லாம் பொய். ஏனெனில் விட்டுக் கொடுக்கும் பொறுப்பு எப்போதும் பெண்கள் தலையிலேயே விழுகிறது. ஆண்கள் தங்கள் வேலை தங்கள் சம்பளம் தங்கள் நண்பர்கள், தங்கள் பொழுது போக்கு என்று சுயநலமிகளாக இருப்பதைத் தவிர்த்தால் அலுவலகம் செல்லும் இல்லத்தரசிகளை ஹிஸ்டீரியா' மன நோயிலிருந்து காப்பற்றலாம்!