ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்ள வேண்டிய 9 அழகு இரகசியங்கள்!!!
பெரும்பாலான மக்கள் தமது சருமம், தலைமுடி மற்றும் நகங்களைப் பராமரிப்பது குறித்து அறிந்திருப்பார்கள். ஆனால், அழகுக் கலையுலகத்தைப் பொறுத்தவரையில், அறிந்திருப்பது என்பது, பொதுவான அறிவுரையாகவோ அல்லது, தவறானதொரு அறிவுரையைப் பின்பற்றுதலாகவோ தான் இருக்கும். அதாவது, நமக்கு என்ன செய்வது என்று தெரிந்திருக்கும். ஆனால் எப்படி செய்வது என்று தான் தெரிந்திருக்காது அல்லது எப்படி முறையாக செய்வது என்று தெரிந்திருக்காது.
நீங்கள் இப்போது என்ன செய்வது என்றும், அதனை எப்படி முறையாகச் செய்வது என்றும் தெரிந்து கொள்ளப் போகிறீர்கள். மேலும், அழகு பற்றிய ரகசியங்களையும், அழகுக்கலை பற்றிய உண்மைகளையும் தெரிந்து கொள்ளப் போகிறீர்கள். சருமத்தில் எரிச்சல் ஏற்படுத்தும் பொருள்களிலிருந்து, கைக்கால் நகங்களைப் பராமரிப்பது வரை மற்றும் தலைமுடி பராமரிப்பு குறித்து ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்ள வேண்டிய அழகு ரகசியங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
சரும க்ளின்சர்கள் பாதிப்பை ஏற்படுத்தலாம்
சருமத்தை சுத்தப்படுத்தப் பயன்படுத்தும் க்ளின்சர்கள் ஆரோக்கியமான சருமத்தில் கூட எரிச்சலை ஏற்படுத்தலாம். சருமம் மென்மையானதா அல்லது பிரச்சினை ஏற்படுத்தக்கூடியதா என்றெல்லாம் கவலைப்படாதீர்கள். பயன்படுத்தும் க்ளின்சர்கள், சருமத்திற்கு எவ்வித எரிச்சலையோ, இறுக்கத்தையோ தராமல், அழுக்கையும், மிகையான எண்ணெய் பசையையும் கரைத்து, சுத்தம் செய்யுமா என்று மட்டும் பாருங்கள்.
எக்ஸ்ஃபோலியஷனை தவிர்க்க கூடாது
சருமத்தின் மேற்புறத்தில் உள்ள படலத்தை உரித்து சுத்தம் செய்யும் எக்ஸ்ஃபோலியஷன் (Exfoliation) என்னும் முறையினால், சருமப் பராமரிப்புக் க்ரீம்கள் சருமத்தினுள் ஊடுருவி, தனது வேலையை நன்கு செய்ய ஏதுவாக இருக்கும். மேலும் சருமம் பளிச்சென்று பொலிவுடன் திகழும். சருமம் பளபளப்புடன் திகழ எக்ஸ்ஃபோலியஷன் மிக அவசியம். முகத்தில் பருக்களோ, சிவந்த தடிப்புகளோ உள்ளவர்கள், தோல் மருத்துவரின் அனுமதியுடன் சாலிசிலிக் அமிலம் கொண்டு எக்ஸ்ஃபோலியஷன் செய்யவும்.
ரெடினாய்டுகளைப் பயன்படுத்தவும்
ரெடினாய்டுகள் அல்லது ரெடினால்கள், வைட்டமின் ஏ சார்ந்த வேதிப்பொருள்கள் ஆகியவை பருக்களைக் குணப்படுத்தப் பயன்படுத்தப்படுபவை. ஃபேஷியல் செய்வதற்கு மிகவும் உகந்தவை. இவை, சருமத்தின் மேல்பகுதி, உட்பகுதியை தடிமனாக்கி, இறந்து போன சரும செல்களை நீக்கி, கெராட்டினோசைட்டுகளின் அளவைப் பெருக்கி, மூட்டுக்கள், தசைகள், மற்றும் சருமம் ஆகியவற்றுக்கிடையே உயவுப்பொருளாக பயன்படும், உடலில் இயற்கையாகவே காணப்படும் ஒரு கார்போஹைட்ரேட்டான, கொலாஜென் மற்றும் ஹயலுரானிக் அமிலம் ஆகியவற்றின் உற்பத்தியைப் பெருக்க உதவுகின்றன. ஆனால் ரெடினாய்டுகள் நமது சருமத்தினை மிகவும் மென்மையாக்கி, சூரியவெளிச்சம் பட்டாலே மிகவும் கூச்சப்படச் செய்யும். ஆகவே இதனை இரவில் மட்டும் பயன்படுத்தி அதிக பலனைப் பெறுங்கள்.
சர்க்கரையைப் பயன்படுத்தவும்
ஆரோக்கியமான சருமத்தினைப் பெறவும் பேணவும், முறையாக ஃபேஷியல் செய்து வருவது அவசியம். வீட்டிலேயே ஃபேஷியல் செய்து, தரமான சருமப் பராமரிப்பு நிலையத்தில் பெறத்தக்க காஸ்ட்லியான ஃபேஷியலைப் பெறலாம். இதற்கு எண்ணற்ற வீட்டுப் பராமரிப்பு முறைகள் உள்ளன. முதலில் இயற்கையின் சருமப் பராமரிப்பு கொடையான சர்க்கரையை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை சருமத்தின் மீது சர்க்கரையினால் வட்டமிட்டு தேய்த்து, (ஸ்க்ரப் செய்து) அதன்பின் இளஞ்சூடான வெந்நீரில் சருமத்தைக் கழுவி, மென்மையான துணியைக் கொண்டு ஒற்றியெடுக்கவும். இதனால் சருமம் பளபளக்கும் அதிசயத்தைக் காணலாம். அதே போல், ஒரு பானையில் தண்ணீரைக் கொதிக்கவிட்டு வெளிவரும் நீராவியில், சருமம் சில நிமிடங்கள் படும் வண்ணம் காட்டவும். (நீராவிக்குளியல்)
உடலை ஸ்கரப் செய்யவும்
முகத்தை அடிக்கடி ஸ்கரப் செய்யும் நாம், நமது உடலை ஸ்க்ரப் செய்வது இல்லை. வறண்டு போன பாதங்கள், கால்களிலும், முழங்கைகளிலும் உள்ள வெடித்து உலர்ந்த சருமம், ஆகியவற்றுக்கு ஸ்க்ரப் தேவை. சிறிது தேங்காய் எண்ணெய், கல் உப்பு அல்லது சர்க்கரை மற்றும் துளசி இலைகள் ஆகியவற்றை சேர்த்து நன்கு பசை போல அரைத்து எடுத்துக் கொள்ளவும். இப்பசையை சருமத்தின் மீது நன்கு தேய்க்கவும். ஸ்க்ரப் செய்யவும். பின்னர் நீராவிக்குளியல் மேற்கொள்ளவும். அடிக்கடி இதனை செய்வது உறுதியான பலனைத் தரும்.
நகத்தை அடிக்கடி ஈரப்படுத்திக் கொள்ளவும்
கால் நகங்களையும், கை நகங்களையும் அடிக்கடி ஈரப்படுத்திக் கொள்ள வேண்டும். ஷொவர் ஜெல்லை வெதுவெதுப்பான தண்ணீரில் கரைத்து, அதில் கைகளை ஐந்து நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். இதனால் கை நகங்கள் புதிது போலாகும். (மெனிக்யூர் என்றால் கை விரல் மற்றும் நகங்களை அழகு செய்வது என்று பொருள்) மேலும் பெட்ரோலியம் ஜெல்லை பாதங்களில் தடவி அதன்மேல் பிளாஸ்டிக் காகிதம் கொண்டு மூடி வைக்கவும். 15 நிமிடங்கள் கழித்துப் பார்த்தால், பாதங்கள் குழந்தையின் பிஞ்சுப் பாதங்கள் போல் ஆகியிருக்கும். (பெடிக்யூர் என்றால் கால் விரல் மற்றும் நகங்களை அழகு செய்வது என்று பொருள்)
தலைமுடியின் ஈரப்பதத்தைப் பேணுங்கள்
சிக்குப் படிந்த அல்லது வறண்ட கூந்தலை ஈரப்பதத்துடன் பேணுவதற்கு, கண்டிஷனர் பயன்படுத்துவது மிகவும் முக்கியமானது. என்னதான் நிலைநிறுத்தும் கண்டிஷனரைப் பயன்படுத்தினாலும், ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தினாலும், அதனை சரியான முறையில் பயன்படுத்துகிறீர்களா என்று உறுதி செய்து கொள்ளவும். கண்டிஷனரையோ, ஆலிவ் எண்ணெயையோ தலைமுடியின் நுனியிலிருந்து தடவத் தொடங்க வேண்டும். அதுவும் தலைமுடியின் நடுப்பகுதி வரை தடவ வேண்டும். மயிர்க் கால்களில் தடவக் கூடாது. ஏனெனில் ஸ்கால்ப் ஆனது மயிர்க்கால்களுக்குப் போதுமான எண்ணெயை இயற்கையாகவே உற்பத்தி செய்து கொள்கிறது. ஆகவே இந்த நிலையில் கண்டிஷனர் அல்லது ஆலிவ் எண்ணெய் தடவினால், அது ஸ்கால்பின் பணியைச் செய்யவிடாமல் தடுக்கலாம்.
உண்மையிலேயே பொடுகினைத் தடுக்க முயற்சிக்கவும்
பொடுகினைத் தடுக்கும், பொடுகிலிருந்து முற்றிலும் விடுதலை அளிக்கும் என்று விளம்பரப்படுத்தப்படும் ஷாம்புக்கள் அனைத்தும் உண்மையிலேயே பொடுகிலிருந்து விடுதலை அளிப்பவை அல்ல. பெரும்பாலான மக்கள் பொடுகு என்பது வறண்ட ஸ்கால்ப்பினால் வருவது என்று நினைக்கிறார்கள். தலைமுடியை நீரில் சரியாக அலசாமல் இருப்பதினாலோ, தவறான ஷாம்புக்களைப் பயன்படுத்தியதன் காரணமாக தலையில் படிவுகள் படிந்ததினாலோ, ஸ்கால்ப் வறண்டு போகலாம். இம்மாதிரியான நிலைமைக்கு பொடுகை போக்கும் ஷாம்புக்கள் பலன் தராது. பொடுகுத் தொல்லை நீங்கவில்லை என்றால், தலைமுடியை இன்னும் அதிக நேரம் நீரில் நன்றாக அலசவும். மேலும், பயன்படுத்தும் ஷாம்புவை நிறுத்திவிட்டு, தரம் உயர்ந்த ஷாம்புவைப் பயன்படுத்திப் பார்க்கவும்
குட்டைக் கூந்தல் வயதை அதிகப்படுத்திக் காட்டும்
குட்டைக் கூந்தல் வைத்துக் கொள்வது ஃபேஷனாக இருந்தாலும், குட்டைக் கூந்தல் வயதை அதிகப்படுத்திக் காட்டும். ஆகவே இளமையுடன் தோற்றமளிக்க விரும்பினால் குட்டையான கூந்தல் தான் முதல் எதிரி ஆகும். குட்டைக் கூந்தல் இளமையான தோற்றத்தைத் தராது. எனவே கூந்தலை நீளமாகப் பேணுங்கள். காதுக்கு அருகில் சற்று அதிகமாக முடி இருந்தால், அது கழுத்தின் மென்மைத் தன்மையைக் கூட்டி, இளமை எழிலையும் கூட்டிக் காட்டும். .