ஒரு சதம் (பைசா) விலையில் ராட்சத கப்பல், மறக்க முடியாத வரலாற்று பின்னணியுடன்!
ஒரு சதம் (பைசா) பணத்தை வைத்து இந்தியாவில் எதுவும் வாங்க முடியாது. அமெரிக்கா, கனடாவில் ஒரு சதத்தை penny என்பார்கள். கடைக்கு போனால், அங்கேயும் எதுவும் வாங்க முடியாது. ஆனால், அமெரிக்க கடற்படை தலைமைச் செயலகத்துக்கு 1 அமெரிக்க சதத்துடன் போனால், ஒரு கப்பலை வாங்கலாம்.
காகிதக் கப்பல் அல்ல, நிஜ கப்பல். அதுவும் சாதா கப்பல் அல்ல. அமெரிக்க வரலாற்றில் இடம் பெற்றுள்ள விமானம் தாங்கி கப்பல். அமெரிக்க கடற்படைக்காக கட்டப்பட்ட முதலாவது supercarrier இதுதான். பெயர் யு.எஸ்.எஸ். பாரஸ்ட்டல்.
இந்த கப்பல் தற்போது ஓய்வு பெற்றுள்ள நிலையில், இதை வெளிநாட்டு கடற்படைகளுக்கு விற்றுவிட முயற்சிகள் நடந்தன. எந்த நாடும் வாங்க முன்வரவில்லை. சரி. இனாமாக கொடுக்கலாம் என்று முயற்சி செய்து பார்த்தார்கள். யுத்த நினைவுச் சின்னங்களை வைத்திருக்கும் பொருட்களை மியூசியங்களை கேட்டுப் பார்த்தார்கள்.
ஊகும். பெற்றுக்கொள்ள யாரும் முன்வரவில்லை.
அதற்கு காரணங்கள் இரண்டு. ஒரு காரணம், மிகப் பிரமாண்டமான இந்தக் கப்பலை கடலில் நிறுத்தி பராமரிப்பதற்கு ஏகப்பட்ட செலவாகும். இரண்டாவது, தற்போது இந்தக் கப்பல் உள்ள இடத்தில் இருந்து (பிலடெல்ஃபியா கடற்படை தளம்), இழுத்துச் செல்லவே மில்லியன் கணக்கான டாலர்கள் தேவை.
இப்படி அனைவராலும் கைவிடப்பட்ட இந்த ‘புகழ்பெற்ற’ சூப்பர்காரியர் கப்பலை, அமெரிக்கா டெக்சாஸ் மாநிலத்தை சேர்ந்த ஆல்-ஸ்டார் மெட்டல்ஸ் என்ற நிறுவனம் விலை கொடுத்து வாங்கியிருக்கிறது. அந்த விலைதான், 1 சதம்! (October 22, 2013)
கப்பலுக்கு விலை 1 சதம் என்று எப்படி நிர்ணயிக்கப்பட்டது?
இந்த நிறுவனம் பழைய கப்பல்களை வாங்கி அதில் இருந்து இரும்பு, மற்றும் உலோகங்களை பிரித்து விற்கும் நிறுவனம். யு.எஸ்.எஸ். பாரஸ்ட்டல் கப்பல் மிகப் பெரியது என்பதால், அதை இழுத்துச் செல்ல ஏற்படும் செலவு, உடைப்பதற்கான செலவு, மீதி பாகங்களை டிஸ்போஸ் செய்வதற்கான செலவு எல்லாவற்றையும் கணக்குப் பார்த்து, கப்பலில் இருந்து பிரித்து எடுக்கக்கூடிய உலோகத்தின் மதிப்பு எவ்வளவு என்பதையும் கணிப்பிட்டபின், தமக்கு சொற்ப லாபமே கிடைக்கும் என்று சொல்லியது.
“வேண்டுமானால் இலவசமாக கொடுங்கள், எடுத்துச் செல்கிறோம்” என்றது நிறுவனம்.
ஆனால், தனியார் நிறுவனத்துக்கு எதையும் இலவசமாக கொடுக்க அமெரிக்க பாதுகாப்பு சட்டத்தில் இடமில்லை. இதனால் 1 சதம் என்று விலை நிர்ணயித்தார்கள்.
மொத்தத்தில் கப்பவை விற்பதால், கடற்படைக்கு பேரீச்சம்பழம் கூட கிடைக்காது!
இந்தக் கப்பல், அமெரிக்க சரித்திரத்தில் இடம்பிடித்த கப்பல் என்றோமே. அந்த விபரம் என்ன?
1967-ம் ஆண்டு, ஜூலை 29-ம் தேதி, இந்தக் கப்பல் மேல்தளத்தில் பெரிய விபத்து ஒன்று ஏற்பட்டது. கப்பல் மேல்தளத்தில் இருந்த ராக்கெட் ஒன்று, தவறுதலாக வெடித்தது. இது விமானம்தாங்கி கப்பல் என்பதால், மேல் தளத்தில் பல விமானங்கள் பார்க் செய்யப்பட்டிருந்தன.
தவறுதலாக வெடித்த ராக்கெட், கப்பல் மேல்தளத்தில் வெடிகுண்டு பொருத்தப்பட்டு புறப்பட தயாராக நின்ற A-4 Skyhawk விமானத்தை போய் தாக்கிறது. அந்த விமானத்துக்குள் இருந்த இளம் விமானி ஜான் மக்கெயின், விமானத்தில் இருந்து வெளியே குதித்து தப்பினார். ஆனால், அவரது விமானம் வெடித்தது. அதைத் தொடர்ந்து, கப்பல் தளத்தில் இருந்த மற்றைய விமானங்களும் வெடிக்கத் தொடங்கின.
அமெரிக்க கடற்படை வரலாற்றின் மிகப்பெரிய விபத்துக்களில் இதுவும் ஒன்று. 134 கடற்படை வீரர்கள் கொல்லப்பட்டனர். 21 விமானங்கள் சேதமடைந்தன.
சரி. தவறுதலாக வெடித்த ராக்கெட், முதலில் தாக்கிய விமானத்துக்குள் இருந்த இளம் விமானி ஜான் மக்கெயின், விமானத்தில் இருந்து வெளியே குதித்து தப்பினார் என்று சொன்னோமே.. அதன்பின் அவருக்கு என்ன ஆனது? இந்த விபத்தில் அவருக்கு மார்பிலும் காலிலும் பலத்த அடி.
அதிலிருந்து குணமடைந்தபின், மீண்டும் போர் விமானங்களை செலுத்தியபோது, அவரது விமானம் வியட்னாமில் சுட்டுவீழ்த்தப்பட்டது. அதிலும் உயிர் தப்பினார். ஆனால், வியட்னாமியர்களிடம் போர் கைதியாக சிக்கிக் கொண்டார். ஐந்தரை ஆண்டுகள் போர் கைதியாக இருந்தார். அதன்பின் விடுவிக்கப்பட்டு 1973-ம் ஆண்டு அமெரிக்கா வந்தார்.
பின்னாட்களில் அரசியலில் ஈடுபட்டு செனட்டர் ஆனார். நாட்டுக்காக அவர் புரிந்த சேவை காரணமாக ஜெயிப்போம் என்ற நம்பிக்கையில், ஜனாதிபதி வேட்பாளராகவும் போட்டியிட்டார். ஆம். அந்த இளம் விமானிதான், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு, ஒபாமாவிடம் தோற்றுப்போன ஜான் மக்கெயின் (John S. McCain III)!