பூமியை நெருங்கும் வியாழன்: மார்ச் 1ல் இங்கிலாந்தில் தெளிவாக தெரியுமாம்!
சூரிய குடும்பத்தில் மிக பெரிய கிரகமான வியாழன் தனது 4 துணை கோள்களுடன் மார்ச் 1ந்தேதி பூமிக்கு மிக அருகே வருகிறது. இந்த நிகழ்வினை இங்கிலாந்து நாட்டில் எந்த பகுதியில் இருந்தும் பைனாகுலர் வழியே இரவு நேரத்தில் பார்க்கும்போது தெளிவாக தெரியும்.
பூமியை விட 1,100 மடங்கு அளவில் பெரியதான வியாழன் கிரகம், பூமியில் இருந்து 435 மில்லியன் மைல்கள் தொலைவில் உயரே நிற்குமாம்.
பூமிக்கு மிக அருகே தெரியும் இது போன்ற நிகழ்வு அடுத்து வருகிற 2026ம் ஆண்டில் தான் நடக்கும்
தெளிவாக தெரியும் கிரகங்கள்
நாம் வெறும் கண்ணால் வெள்ளி, வியாழன், செவ்வாய், சனி, புதன், ஆகிய ஐந்து கிரகங்களை மட்டுமே நன்றாக காணமுடியும்.
பொன் கிடைத்தாலும்
தமிழில் ‘பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது' என்பார்கள். ஏனெனில் புதனைக் காண்பது என்பது மிக அரிது. புதன் கிரகம் சூரியனுக்கு மிக அருகாமையில் இருப்பதே அதற்குக் காரணம். புதன் கிரகம் சூரியன் அஸ்தமித்த பிறகு மேற்குத் திசையில் அடிவானில் சிறிது நேரமே தெரியும். அல்லது சூரிய உதயத்துக்கு முன்னர் கிழக்கே அடிவானில் சிறிது நேரம் தெரியும். எனவேதான் இவ்வாறு கூறியுள்ளனர்.
வியாழன் பெரியது
சூரிய குடும்பத்திலேயே மிகப் பெரிய கிரகம் என்ற பெருமையைப் பெற்றது வியாழனாகும். மிகப்பெரிய கிரகமாக விளங்கும் வியாழனை, ஆங்கிலத்தில் ரோமானிய ஆட்சிக் கடவுளான ஜூபிடரின் பெயரால் அழைக்கப்படுகிறது.
பொன் கிரகம்
சூரியனிலிருந்து ஐந்தாவதாக உள்ள வியாழன் கிரகம், விண்வெளியில் சூரியன், நிலா, வெள்ளி கிரகங்களுக்கு அடுத்தபடியாக பிரகாசமாகத் தெரியக் கூடிய கிரகமாகும். இதனை பொன் கிரகம், குரு என்றும் தமிழில் ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
எவ்ளோ பெரிய கிரகம்
இது 88,736 மை அதாவது 1,42,800 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. வியாழனின் சுற்றளவு பூமியைப் போல 11 மடங்கு அதிகமாகும். வியாழன் கிரகத்திற்கு உள்ளத் துணைக் கிரகங்களில் இதுவரை 28 கிரகங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 1610ஆம் ஆண்டில் நான்கு துணை கிரகங்களை கலிலியோ கண்டுபிடித்தார்.
பூமிக்கு அருகில்
இந்த வியாழன் கிரகம் தனது 4 துணை கோள்களுடன் மார்ச் 1ந்தேதி பூமிக்கு மிக அருகே வருகிறது. இந்த நிகழ்வினை இங்கிலாந்து நாட்டில் எந்த பகுதியில் இருந்தும் பைனாகுலர் மூலம் பார்க்கலாம் என்கின்றனர் அறிவியலாளர்கள்.
தேசிய வானியல் வாரம்
இங்கிலாந்து நாட்டில் தேசிய வானியல் வாரம் ஆனது மார்ச் 1ந்தேதியில் இருந்து 8ந்தேதி வரை கொண்டாடப்படுகிறது. எனவே, நாடு முழுவதும் வியாழன் கிரகத்தினை பார்க்கும் வகையில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளன.
வாயுக்களால் நிரம்பியது
இது குறித்து, லண்டன் நகர பல்கலை கழக கல்லூரியை சேர்ந்த வானியல் நிபுணர் ஸ்டீவ் மில்லர் கூறும்போது, சூரிய குடும்பத்தின் மிக பெரும் கிரகம் வியாழன். நாம் வாழும் பூமியை விட வேறுபட்ட உலகம் கொண்டது. அது பாறை மற்றும் சமுத்திரங்களால் ஆனதல்ல.அது வாயுக்கள் நிறைந்த பெரிய கிரகம்.
துணை கோள்களுடன் வியாழன்
வியாழன் பல்வேறு வானிலை அமைப்புகளை கொண்டது. அதனால் அதன் மேற்பரப்பில், கோடுகள், மண்டலங்கள் மற்றும் பிற அம்சங்கள் பார்க்கும் வகையில் உள்ளது. மார்ச் 1ம் தேதி பைனாகுலர் வழியே வியாழன் கிரகத்தை தெளிவாக பார்க்க முடியும். அதனுடன் வியாழன் கிரகத்தின் 4 மிக பெரும் துணை கோள்களையும் தெளிவாக பார்க்க முடியும். அவை வியாழன் கிரகத்தை சுற்றி வருவதை சில தினங்கள் பார்க்க முடியும் என்றும் வானியல் நிபுணரான டாக்டர் கிறிஸ் ஆர்ரிட்ஜ் தெரிவித்துள்ளார்.