சாரநாத் - பௌத்த மத வரலாறு தொடங்கிய இடம்!
உத்திரப்பிரதேச மாநிலம் வாரணாசிக்கு அருகில் உள்ள சிறிய கிராமம் சாரநாத். இந்த சிறு கிராமம் புகழ் பெற்றிருக்க காரணமாக விளங்குவது கௌதம புத்தர் தனது முதல் போதனையை செய்த இடமாக இங்கிருக்கும் பூங்கா தான். மேலும், இந்த இடத்தில் தான் முதல் பௌத்த சங்கமும் தொடங்கப்பட்டது.
புத்தருடன் உள்ள ஆழமான தொடர்பின் காரணமாக, சாரநாத் இந்தியாவிலுள்ள முக்கியமான பௌத்த மத புனிதத் தலமாக உள்ளது. உண்மையில், சாரநாத்தில் தான் இந்தியாவின் மாபெரும் சக்ரவர்த்தியாக இருந்த மகா அசோகர் சில ஸ்தூபிகளையும் மற்றும் இங்கு மிஞ்சியிருக்கும் தூண்களில் புகழ் பெற்ற கலைச்சின்னமான அசோகர் தூணையும் உருவாக்கி வைத்துள்ளார்.
இந்த தூணில் இருக்கும் நான்கு சிங்கங்கள் தான் இன்றைய இந்தியாவின் தேசிய சின்னமாக உள்ளன. மேலும், இந்த தூணில் இருக்கும் அசோக சக்கரம் இந்திய தேசிய கொடியின் மையத்தை அலங்கரித்து வரும் சின்னமாகவும் உள்ளது.
1907-லிருந்தே பல்வேறு அகழ்வாராய்ச்சிகள் இந்த இடத்தில் செய்யப்பட்டு, பல்வேறு பழங்கால நினைவுச்சின்னங்கள் மற்றும் கலைப்பொருட்கள் ஆகியவை தோண்டி எடுக்கப்பட்டு, அவை இந்தியாவில் பௌத்த மதத்தின் தோற்றம் மற்றும் பரிணாமத்தை படம் போட்டுக் காட்டும் வகையில் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
சாரநாத்தை சுற்றியுள்ள முதன்மையான சுற்றுலா தலங்கள்
பல்வேறு பௌத்த சமய கட்டிடங்கள் மற்றும் நினைவுச்சின்னங்களை கொண்டிருக்கும் சாரநாத்தில் உள்ள சில தொல்பொருட்கள் கி.மு.2-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும்.
இந்த நினைவுச்சின்னங்களில் இருக்கும் பழங்கால எழுத்துக்களை படித்து அவற்றில் உள்ள செய்திகளை தெரிவிப்பதற்காக வரும் சுற்றுலாப் பயணிகள், பௌத்த மத புனிதப் பயணிகள், வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் தொல்லியல் ஆய்வாளர்களுக்கு முக்கியமான இடமாக சாரநாத் திகழ்கிறது.
இங்கிருக்கும் மான் பூங்காவில் கௌதம புத்தர் தனது முதல் போதனையை தொடங்கியதால் அது சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலோர் வந்து செல்லும் இடமாக உள்ளது. உண்மையில், மான் பூங்காவில் இருக்கும் தமேக் ஸ்தூபி உள்ள இடத்தில் தான் புத்தர் தனது எண்-வழி மார்க்கங்களைப் பற்றிய போதனைகளை முதன்முதலில் வழங்கினார்.
சாரநாத்தில் இருக்கும் மற்றுமொரு ஸ்தூபியான சௌகான்டி ஸ்தூபியில் தான் புத்தருடைய எலும்புகள் கண்டெடுக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. தொல்பொருள் மற்றும் அகழ்வாய்வு பகுதியில், அசோகரின் கல்தூண் உட்பட பல்வேறு பழமையான நினைவுச்சின்னங்கள் பலமுறை தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.
மேலும், சாரநாத் அருங்காட்சியகத்திலும் அகழ்வாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. 1931-ம் ஆண்டில் மகா போதி சங்கத்தால் கட்டப்பட்ட மூலகாந்தா குடி விஹார் இவற்றில் சமீபத்தில் சேர்க்கப்பட்டதாகும்.
இவை மட்டுமல்லாமல் இங்கிருக்கும் தாய் கோவில் மற்றும் காங்யு திபெத்திய மடாலயம் ஆகிய இடங்களும் சுற்றுலாவிற்கு மிகவும் ஏற்ற இடங்களாகும்.