சூரிய புயல் விரைவில் பூமியை தாக்கும் அபாயம்? : விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்
விரைவில் சூரிய புயல் பூமியை தாக்கும். இதனால் தொலைதொடர்பு சாதனங்கள் பாதிக்கும் அபாயம் உள்ளது என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். சூரியனில் இருந்து அதிசக்தி வாய்ந்த வெப்பம் வெளிப்படும் போது புயலாக மாறி அண்ட வெளியில் அவ்வப்போது பரவி வருகிறது. இதனால் பூமிக்கு ஆபத்து என்று பல முறை கூறப்பட்டது. எனினும், இதுவரை எந்த ஆபத்தும் இல்லாமல் பூமி சுற்றிக் கொண்டிருக்கிறது. சூரியனில் இருந்து நெருப்பு போன்ற சிறுசிறு துண்டுகள் சிதறி பூமியை அடைவதற்குள் அவை கரைந்து விடுகின்றன. ஆனால், இப்போது மீண்டும் சூரிய புயல் பூமியை விரைவில் தாக்கும் அபாயம் உள்ளது. அது எப்போது நடக்கும் என்று அரை மணி நேரத்துக்கு முன்புதான் தெரிய வரும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். சூரிய புயல் பூமியை தாக்கினால், கம்ப்யூட்டர் நெட்வொர்க், போன் உள்பட எல்லா தொலைதொடர்பு சாதனங்களும் ஸ்தம்பிக்கும்.
பூமி முழுவதும் மின்தடை ஏற்படும். இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், சூரியனில் இருந்து வெளிப்படும் அதிசக்தி வாய்ந்த வெப்ப புயல் ஒரு மணி நேரத்துக்கு 16 லட்சத்து 9 ஆயிரத்து 344 கி.மீ வேகத்தில் பூமியை நோக்கி பாயலாம். எனினும் புயல் ஏற்படுவதை 30 நிமிடங்களுக்கு முன்புதான் துல்லியமாக கணிக்க முடியும்’ என்றனர். இதுபோல் 100 அல்லது 200 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் சூரிய புயல் ஏற்படும் என்று லண்டனில் உள்ள இன்ஜினியரிங் ராயல் அகடமி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 1989ம் ஆண்டு இதுபோல் சூரிய புயல் சிறிய அளவில் கனடாவை தாக்கியது. அப்போது மின் தடை ஏற்பட்டது. எலக்ட்ரானிக் உள்கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், சூரிய புயல் தாக்குதல் குறித்த பயம் வேண்டாம். இப்போதுள்ள அதிநவீன தொழில்நுட்பம் மூலம் சூரிய புயல் தாக்குதலின் தீவிரத்தை குறைக்க எல்லா நடவடிக்கைகளும் எடுத்து வருகிறோம் என்று இங்கிலாந்து அரசு கூறியுள்ளது.