Thursday, October 17, 2013

ரகசிய வங்கிக் கணக்கு விவரங்களைத் தர ஸ்விட்சர்லாந்து சம்மதம்

ரகசிய வங்கிக் கணக்கு விவரங்களைத் தர ஸ்விட்சர்லாந்து சம்மதம்


உலகிலேயே மிக ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வரும் தங்கள் நாட்டு வங்கி வாடிக்கையாளர்களின் கணக்கு விவரங்களை வெளியிட ஸ்விட்சர்லாந்து அரசு சம்மதம் தெரிவித்துள்ளது.
இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் என பலரும் தங்கள் கருப்புப் பணத்தை ஸ்விட்சர்லாந்து வங்கிகளில் பதுக்கி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

அவர்களின் விவரங்களை யாருக்கும் வழங்காமல் ஸ்விட்சர்லாந்து அரசு மிக ரகசியமாக பாதுகாத்து வந்தது. இதனால் அதிக வரி ஏய்ப்பு நடப்பதால் தங்கள் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுவதாக உலக நாடுகள் குற்றச்சாட்டு எழுப்பின.

இதையடுத்து பொருளாதார கூட்டுறவு மேம்பாட்டு அமைப்பு மாநாட்டில் வெளிநாட்டினர் உள்பட அனைத்து வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கு தகவல்களையும் அவர்களின் அனுமதியின்றி, பரஸ்பர நிர்வாக ரீதியின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நாடுகளிடம் வழங்க ஸ்விட்சர்லாந்து அரசு சம்மதம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஸ்விட்சர்லாந்து அரசு நேற்று புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பல நாடுகளின் கோரிக்கைகளை ஏற்று வங்கிக் கணக்குகளை தானாக வெளியிட ஸ்விட்சர்லாந்து அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது.

எனினும், இதில் பல நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. ஸ்விட்சர்லாந்து நாட்டின் சட்டத்தின்படி, வரிசெலுத்துபவரின் வங்கி கணக்கு விவரங்களை அவர்களின் ஒப்புதல் பெற்றபின்பே வழங்கும் நடைமுறை இருந்து வருகிறது. எனினும், இதில் திருத்தம் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை எந்த காரணத்தின் அடிப்படையில் கேட்கிறார்கள் என்பதை பொருத்து அவற்றை அளிக்கவும், குறிப்பிட்ட சில சந்தர்ப்பங்களில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அதன்பின் தகவல் தெரிவிப்பது குறித்தும் நாடாளுமன்ற விவாதித்தத்துக்கு பின்பு சட்டத்திருத்தம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதற்கு முன்பாக பொது மக்களிடமும் கருத்து கேட்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

அதிசயம் ஆனால் உண்மை: தூக்கிட்டும் உயிர்பிழைத்த ஈரான் கைதி... மீண்டும் தூக்கிலிட அரசு முடிவு

அதிசயம் ஆனால் உண்மை: தூக்கிட்டும் உயிர்பிழைத்த ஈரான் கைதி... மீண்டும் தூக்கிலிட அரசு முடிவு 


தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்ட கைதி, மீண்டும் உயிர் பெற்றதால் குழப்பமைடைந்த ஈரான் அரசு, அக்கைதியை மீண்டும் தூக்கிலிட முடிவு செய்துள்ளது. ஆனால், இதற்கு மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.

போதைப் பொருள் கடத்திய வழக்கில் கைதாகிய அலிரெசா(37) என்ற குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை, கடந்த வாரம் புதன்கிழமை அதிகாலையில் போஜ்னர்ட் சிறை வளாகத்தில் நிறைவேற்றப் பட்டது. 

கிட்டத்தட்ட 12 நிமிடப் போராட்டத்திற்குப் பிறகு, அடங்கிப்போன அலிரெசாவின் உடலை பரிசோதித்த சிறை மருத்துவர்கள் அவரது உயிர் பிரிந்து விட்டதாக அறிவித்தனர். 

பின்னர், சவக்கிடங்குக்கு அனுப்பப்பட்ட அந்த உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைப்பதற்காக மூட்டை கட்டும் பணி நடந்தது. அப்போது, அலிரெசாவின் உடலில் அசைவு இருப்பதாக சந்தேகித்த சவக்கிடங்கு ஊழியர்கள், உடனடியாக அத்தகவலை மருத்துவர்களுக்குத் தெரிவித்தனர். 

உடனடியாக போஜ்னர்ட் இமாம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அலிரெசாவைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் உயிரோடு இருப்பதாக ஆச்சர்யம் தெரிவித்தனர். மரணித்து விட்டார் எனக் கருதப்பட்ட அலிரெசா, தற்போது நலமாக உள்ளதை அறிந்த உறவினர்கள் ஆனந்தத்தில் திளைத்தனர்

ஆனால், தகவலறிந்து மருத்துவமனைக்கு விரைந்து வந்த போலீசார் மீண்டும், அலிரெசாவைக் கைது செய்தனர். அவர் முழுமையாக குணமடைந்த பிறகு மீண்டும் தூக்கிலிட்டு கொல்ல ஈரான் அரசு திட்டமிட்டுள்ளது. 

சர்வதேச சட்டங்களின்படி, மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ஒரு நபர் உயிர் பிழைத்து விட்டால் அவரது குற்றத்தை மன்னித்து விடுதலை செய்து விடுவது தான் மரபு. இதற்காகவே மரண தண்டனை கைதிகளின் உடல்நிலை, தூக்கிலிடும் கயிறு உள்பட பல்வேறு அம்சங்கள் ஒன்றிற்கு இருமுறை சிறை அதிகாரிகளால் தீவிரமாக பரிசோதிக்கப்படுகிறது. 

ஆனால், அலிரெசாவுக்கு மரண தண்டனை விதித்த நீதிபதி, 'அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர் மரணத்தில் இருந்து தப்பிவிட்டாலும் மீண்டும் அந்த தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும்' எனக் கூறியுள்ளார்.

அலிரெசாவை மீண்டும் தூக்கிலிடும் முடிவுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட்டில் ஈரானின் புதிய அதிபராக ரவுகானி பதவியேற்றதிலிருந்து இதுவரை 125 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


Tuesday, October 15, 2013

வடஇந்தியாவில் உருமாறிய துர்கா பூஜை! மகிஷாசுரனுக்கு வீரவணக்கம் செலுத்தும் நாளாக கடைபிடிப்பு!!

வடஇந்தியாவில் உருமாறிய துர்கா பூஜை! மகிஷாசுரனுக்கு வீரவணக்கம் செலுத்தும் நாளாக கடைபிடிப்பு!! 



வட இந்தியாவில் துர்கா தேவியை முன்வைத்தே நடைபெற்று வந்த நவராத்திரி விழா இந்த ஆண்டு துர்கா தேவியால் கொல்லப்பட்ட மகிஷாசுரனுக்கு வீரவணக்கம் செலுத்தும் நாளாக உருமாறியது.

மகிஷாசுரன் என்ற அரக்கனை தேவர்களால் உருவாக்கப்பட்ட மகிஷாசுரமர்த்தினி அழித்ததை நவராத்திரி நாள் என்று கொண்டாடி வருகின்றனர். ஆனால் அண்மைக்காலமாக இந்த நிகழ்வு தலைகீழாக உருமாறத் தொடங்கியது.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் அகில இந்திய பிற்படுத்தப்பட்ட மாணவர் சங்கத்தினர்தான் முதன் முதலாக ஆரியர்களால் வீழ்த்தப்பட்ட மகிஷாசுரனை மாவீரன் என்று போற்றி வீரவணக்க நாளாக கடைபிடித்தனர். 



அதன் பின்னர் இந்த ஆண்டு உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ஒடிஷா ஆகிய மாநிலங்களில் பல மாவட்டங்களில் துர்கா பூஜையின் இறுதி நாள் மகிஷாசுரன் வீரவணக்க நாளாக கடைபிடிக்கப்பட்டிருக்கிறது. இதற்குக் காரணம் மகிஷாசுரன் தங்களது முன்னோர் என்கின்றனர். 

பீகாரில் மகிஷாசுரன் சிலைகள் வைக்கப்பட்டு அவன் கொல்லப்பட்ட நாள் என்பதால் கறுப்பு உடை அணிந்து துக்க நாளாகவும் கடைபிடித்துள்ளனர். அதாவது துர்கா தேவியை ஏவியது ஆரியர்கள் என்றும் தாங்கள் ஆரியரல்லாதோர் என்பதால் அப்படி ஏவிவிட்டு தங்களது குலத் தலைவர் மகிஷாசுரனை வீழ்த்தினர் என்பதும் அவர்களது கருத்து.

அத்துடன் பெண்களுக்கு எதிராக ஆயுதங்கள் ஏந்தாதவர்கள் நாங்கள் என்பதாலேயே பெண் ஒருவரை ஆரியர்கள் அனுப்பி மகிஷாசுரனை கொலை செய்தனர் என்றும் கூறுகின்றனர். 



ஒடிஷா, மத்திய பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட் மாநில பழங்குடிகளில் பலர் திராவிட இனப் பழங்குடிகள் என்றே வரலாற்று ஆய்வாளர்கள் பதிவு செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.