உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் சில கெட்ட பழக்கங்கள்!!!
உலகில் உள்ள அனைவருக்குமே நிச்சயம் ஒருசில கெட்ட பழக்கங்கள் இருக்கும். கெட்ட பழக்கங்கள் என்றதும், புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற பெரிய அளவுக்கு எல்லாம் செல்ல வேண்டாம். இங்கு குறிப்பிடப்படும் கெட்ட பழக்கங்கள் அனைத்தும் சாதாரணமானது தான். மேலும் இத்தகைய பழக்கங்களை எவ்வளவு தான் முயற்சித்தாலும், அந்த பழக்கங்களை தவிர்க்க முடியாது. ஏனெனில் தற்போதுள்ள வாழ்க்கை முறையில் பல மாற்றங்கள் இருக்கலாம். ஆனால் இத்தகைய பழக்கங்களை மாற்றிக் கொள்வதில் நிறைய சிரமம் இருக்கும்.
உதாரணமாக, தாமதமாக எழுவது, சூயிங் கம் மெல்லுவது, நகங்களை கடிப்பது மற்றும் இது போன்று நிறைய கெட்ட பழக்கங்கள் அனைவரிடமும் உள்ளது. இத்தகைய செயல்களை மேற்கொள்ளும் போது, பெற்றோர்கள் அல்லது தெரிந்தவர்கள் யாரேனும் பார்த்தால், அதனை செய்யாதே என்று கண்டிப்பார்கள். ஆகவே பலர் அந்த பழக்கங்களை தவிர்க்க முயற்சிப்பார்கள். இருப்பினும், தவிர்க்க முடியாமல் தவிப்பார்கள்.
ஆனால் அவ்வாறு மேற்கொள்பவர்களுக்கு ஒரு நற்செய்தி. அது என்னவென்றால், அத்தகைய பழக்கங்கள் உடலுக்கு மிகவும் நல்லது. இப்போது அந்த மாதிரியான சில நல்ல கெட்டப் பழக்கங்களை பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து, அத்தகைய பழக்கம் இருந்தால், உடலுக்கு ஆரோக்கியம் தான் என்று நினைத்து சந்தோஷப்படுங்கள்.
நகம் கடிப்பது
சிறு குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரிடமும் இருக்கும் ஒரு பொதுவான பழக்கம் தான் நகம் கடிப்பது. இதை கெட்ட பழக்கம் என்று நினைக்கிறோம். ஆனால் ஆய்வு ஒன்று, நகங்களை கடிப்பது ஒரு நல்ல பழக்கம் என்று சொல்கிறது. ஏனெனில், நகங்களை கடிக்கும் போது, உடலின் நோயெதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கப்படுகிறது. எனவே நகம் கடிக்கும் பழக்கம் இருந்தால், அது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான ஒரு பழக்கமாகும்.
வாயுவை வெளியேற்றுவது
பொது இடங்களில் எதையும் மனதில் கொள்ளாமல் வாயுவை வெளியேற்றுவது ஒரு சங்கடப்பட வைக்கும் கெட்ட செயலாக இருக்கலாம். ஆனால் வாயு வெளியேறும் போது, அதனை அடக்கி வைக்காமல், வெளியேற்றி விட வேண்டும். ஏனெனில் இவ்வாறு வாயுவை வெளியேற்றினால், வயிற்று உப்புசம் வருவதை தவிர்க்கலாம். ஒருவேளை வெளியேற்றாமல் அடக்கி வைத்தால், வயிறானது தொல்லையை கொடுத்து, பின் வயிற்றுப் பிரச்சனையை உண்டாக்கிவிடும்.
சொடக்கு எடுப்பது
சொடக்கு எடுப்பது கெட்ட பழக்கமாக இருக்கலாம். மேலும் இது மூட்டுகளை வலுவிழக்கச் செய்யும் என்று பலர் சொல்வார்கள். அது உண்மையல்ல. ஏனென்றால், சொடக்கு எடுப்பதால், விரல் மூட்டுகள் நன்கு ரிலாக்ஸாவதோடு, விரல்கள் நன்கு செயல்படும்.
துப்புதல்
அடிக்கடி எச்சில் துப்புவது எரிச்சலை ஏற்படுத்துவதோடு, அது ஒரு கெட்ட பழக்கம் என்று சொல்வோம். ஆனால் எச்சில் துப்புதலும் ஒரு உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் ஒரு நல்ல பழக்கம் தான். எப்படியெனில், எச்சில் துப்பினால், சுவாசிக்க எளிதாக இருக்கும். அதுமட்டுமல்லாமல், உடற்பயிற்சி செய்யும் போது, வாயில் அதிகப்டியான எச்சிலானது சுரக்கும். அவ்வாறு சுரக்கும் எச்சிலை உடனே துப்பினால், நன்கு நிம்மதியாக சுவாசிக்கலாம்.
படபடப்புடன் இருப்பது
எப்போதும் படபடப்புடன், அங்கும் இங்கும் அலைந்து கொண்டே இருக்கக்கூடாது என்று சொல்வார்கள். ஆனால் அந்த பழக்கமும் உடலுக்கு மிகவும் நல்லது. எப்படியெனில், இவ்வாறு படபடப்புடன் இருக்கும் போது, மூளைக்கு ஒரு நல்ல பயிற்சி கிடைத்து, மூளை எப்போதும் நன்கு சுறுசுறுப்புடன் இருக்கும்.
அதிகமான தூக்கம்
பெரும்பாலான வீடுகளில், விடுமுறை நாட்களில் நீண்ட நேரம் தூங்கும் பழக்கம் இருக்கும். பலர் இத்தகைய பழக்கத்தை ஆரோக்கியமற்ற பழக்கம் என்று சொல்வார்கள். ஆனால் உண்மையில் இது ஒரு நல்ல பழக்கம். அதிலும் வாரத்திற்கு ஒரு முறை இவ்வாறு நீண்ட நேரம் தூங்கினால், ஞாபக சக்தியானது அதிகரிக்கும்.
பெட் காபி மற்றும் காலை உணவு
சிலருக்கு படுக்கையிலேயே உணவை உண்ணும் பழக்கம் இருக்கும். இந்த பழக்கத்தை மிகவும் மோசமான பழக்கம் என்று சொல்வார்கள். ஆனால் இந்த பழக்கத்தை மேற்கொண்டால், செரிமான பிரச்சனையில் இருந்து விடுபடலாம். வேண்டுமெனில் முயற்சித்து பாருங்கள்.
உடற்பயிற்சியை தவிர்ப்பது
ஆம், உண்மையில் தினமும் உடற்பயிற்சியை மேற்கொண்டு, திடீரென்று அவற்றை சிறிது நாட்கள் தவிர்த்தாலும் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. எப்படியெனில், இவ்வாறு உடற்பயிற்சியை திடீரென்று தவிர்க்கும் போது, உடற்பயிற்சியினால் தசைகளில் ஏற்பட்ட காயங்களானது குணமாகி, மறுமுறை உடற்பயிற்சியை மேற்கொள்ளும் போது வலுவுடன் செயல்பட முடியும்.
ஏப்பம்
ஏப்பம் விடும் போது சப்தமாக விட்டால், அது கெட்ட பழக்கம் என்று பலர் சொல்வார்கள். ஆனால், அவ்வாறு ஏப்பத்தை அடக்கி வைத்து விட்டால், நெஞ்செரிச்சல் ஏற்பட்டு, நெஞ்சு வலியை ஏற்படுத்தும். எனவே யாரேனும் ஏப்பம் விட்டால், அவர்களை தவறாக நினைக்க வேண்டாம்.
சூயிங் கம்
கெட்ட பழக்கத்திலேயே மிகவும் மோசமானது என்று சொல்வது சூயிங் கம்மை மெல்லுவது தான். அதிலும் பேசிக் கொண்டிருக்கும் போது சூயிங் கம்மை மென்றால், மற்றவர்களுக்கு அது எரிச்சலை உண்டாக்கும். மேலும் திமிர் அதிகம் என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தும். ஆனால் சூயிங் கம்மை மெல்லுவது உடலுக்கு மிகவும் நல்லது. அதிலும் இந்த பழக்கத்தால், மூளையானது நன்கு செயல்படுவதோடு, அடிக்கடி பசி ஏற்படும் உணர்வைத் தடுக்கும்.