பணம் மட்டுமே குறிக்கோள் தங்கும் விடுதிகளாக மாறி வரும் வீடுகள்
சென்னையில் வந்திறங்குபவர்களுக்கு இரு கைகளை நீட்டி அடைக்கலம் அளிப்பவை தங்கும் விடுதிகள். வசதி படைத்தவர்கள், நகரின் முக்கிய பகுதிகளில் அமைந்துள்ள நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் அனைத்து வசதிகளும் உள்ள லாட்ஜ்களில் தங்கி கொள்கின்றனர். இதற்கு கட்டணமாக தினமும் ஆயிரக்கணக்கில் வசூலிக்கப்படுகிறது.
நட்சத்திர ஓட்டல்களில் அறை வாடகை நாளொன்றுக்கு ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரம் வரை (வரிகள் உள்பட) கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஓரளவு வசதியுள்ள ஓட்டல்களிலும், அனுமதி பெற்ற லாட்ஜ்களிலும் தங்க ஒரு நாளைக்கு ஆயிரம் முதல் ரூ.2,000 வரை ரூம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் குறைந்த கட்டணத்தில் கிடைக்கும் லாட்ஜ்களையும், மேன்ஷன்களையும் தேடி செல்கின்றனர். கோழி கூடு போல அமைந்துள்ள இந்த லாட்ஜ்களில் எந்த வசதியும் இருப்பதில்லை. இருப்பினும், குறைந்த வாடகை என்பதால் ஏராளமானோர் தங்குகின்றனர். இதன் மூலம் நல்ல வருவாய் கிடைப்பதால் சென்னையில் முக்கிய பகுதிகளில் அமைந்துள்ள வீடுகளை தங்கும் விடுதிகளாக மாற்றி வருகின்றனர்.
ஆயிரம்விளக்கு, திருவல்லிக்கேணி, பாரிமுனை, சவுகார்பேட்டை, கொண்டித்தோப்பு, தி.நகர், பூக்கடை உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகள் தங்கும் விடுதிகளாக மாற்றப்பட்டுள்ளன. ஆயிரம் விளக்கு பகுதியில் போலீஸ் நிலையம் அருகில் உள்ள குடியிருப்புகளில் பல வீடுகள், அனுமதியின்றி தங்கும் விடுதிகளாக செயல்பட்டு வருகிறது. மேலும், இந்த பகுதியில் உள்ள வீட்டில் செயல்பட்ட தங்கும் விடுதி சீல் வைத்த பிறகும் பின்பக்கம் வழியாக லாட்ஜ் நடத்தப்படுகிறது. இது தொடர்பான புகார் சென்னை மாநகராட்சி கமிஷனரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புகாரில் நடவடிக்கை எடுக்க போலீஸ் துணை கமிஷனருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
அடிப்படை வசதிகள் பெயரளவிற்கு உள்ள விடுதிகளில் நாளொன்றுக்கு ரூ.500 முதல் ஆயிரம் வரை ரூம் வாடகை வசூலிக்கப்படுகிறது. இங்கு அறை எண்ணிக்கைக்கு ஏற்ப கழிப்பிட வசதி, தண்ணீர் வசதி கிடையாது. அங்கு சுகாதாரமற்ற சூழ்நிலை நிலவுவதால் தொற்று நோய் ஏற்படும் நிலை உள்ளது. சென்னை நகரில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் உள்ளன.
இதில் 500க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் அனுமதியில்லாமல் செயல்படுகின்றன. இதற்கு தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டிய காவல்துறையும், தீயணைப்பு துறையும் எதையும் கண்டுக்கொள்வதில்லை. சென்னையில் அனுமதியில்லாமல் செயல்பட்டு வரும் தங்கும் விடுதிகளை சீல் வைக்கும் அதிகாரம் இருந்தும் நடவடிக்கை எடுக்க மாநகராட்சி மற்றும் காவல்துறையினர் தயக்கம் காட்டுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து மாநகராட்சி வட்டாரங்கள் கூறுகையில், ‘மாநகராட்சி, காவல்துறை, தீயணைப்பு துறை ஆகியவற்றின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே அனுமதியின்றி செயல்படும் தங்கும் விடுதிகளை முழுமையாக கட்டுப்படுத்த முடியும். வீடுகள் என வரி செலுத்தி விட்டு தங்கும் விடுதிகளை நடத்துவதால் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. குடிநீரை மோட்டார் மூலம் அதிகளவில் எடுப்பதால் மற்ற குடியிருப்புகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. அதோடு சுகாதார சீர்கேட்டிற்கும் வழிவகை ஏற்படுத்துகின்றனர்Õ என்றனர்.
பாதுகாப்பு கேள்விக்குறி
அனுமதியில்லாமல் மற்றும் விதிமுறை மீறி செயல்படும் தங்கும் விடுதிகளில் பாதுகாப்பு கேள்வி குறியாக உள்ளது. தீயணைப்பு கருவிகள் கூட பொருத்தப்படுவதில்லை. இதனால் தீ விபத்து ஏற்பட்டால் கூட அதிலிருந்து தப்பிக்க அவசர வழிகள் இருப்பதில்லை. குறுகிய சந்தில் தங்கும் விடுதிகள் செயல்படுவதால் மீட்பு பணியிலும் எளிதில் ஈடுபட முடிவதில்லை.
‘வீட்டு’ விடுதிகளால் வரி ஏய்ப்பு
விடுதிகளுக்கு சில விதிமுறைகள் உள்ளது. தங்க வருபவர்களை அடையாளம் காணும் வகையில் ஏதாவது அடையாள அட்டை நகல் பெற வேண்டும். இதில் சந்தேகம் ஏற்பட்டால் தங்க வருபவர்களுக்கு யாராவது முன்மொழிய வேண்டும். விடுதிகளில் தங்குபவர்களின் பதிவேடு கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். தங்குபவர்களுக்கு தேவையான சுகாதார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை விடுதி நடத்துபவர்கள் செய்து கொடுக்க வேண்டும்.
ஆனால் இத்தகைய விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படுவதில்லை. அறைகளை தவிர மற்ற பகுதிகளில் கேமரா பொருத்தப்பட்டு இருக்க வேண்டும். மேலும், தங்கும் விடுதிகளுக்கான கட்டிடங்களுக்கு அனுமதி தனியாக வழங்கப்படுகிறது. இதற்கு வரி அதிகம் என்பதால் மாநகராட்சியை ஏமாற்றி வீடுகளில் பல தங்கும் விடுதிகள் நடத்தப்படுகின்றன.
பாலியல் தொழிலுக்கு புகலிடம்
லாட்ஜ் தொல்லை என்பதால், அனுமதியின்றி தங்கும் விடுதிகளாக மாறியுள்ள குடியிருப்புகளை பாலியல் தொழிலாளர்கள் தேர்வு செய்கின்றனர். இதன்காரணமாக இந்த விடுதிகளில் குடும்பத்தோடு வருபவர்கள் தங்குவதற்கு தயக்கம் காட்டுகின்றனர்.
லேடீஸ் ஹாஸ்டல்ஸ்
சென்னையில் மேன்ஷன், பேயிங் கெஸ்ட் ரூம்கள், லேடீஸ் ஹாஸ்டல்ஸ் என்ற பெயரில் விடுதிகள் செயல்படுகின்றன. இதில் லேடீஸ் ஹாஸ்டல்களை நடத்துபவர்கள் பாதுகாப்பில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். இங்கு ரயில் பெட்டிகளில் இருப்பதை போல லோயர், மிடில், அப்பர் பெர்த் போன்று படுக்கை வசதிகள் உள்ளன. இதனால் இரண்டு அல்லது மூன்று பேர் தங்க வேண்டிய 10க்கு 10 அளவு அறையில் 5க்கும் மேற்பட்டவர்கள் தங்க வைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு தரப்படும் உணவும் தரமானதாக இல்லை என கூறப்படுகிறது.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!