மேற்கு வங்கத்தில் விநோதம் மாணவர்களே இல்லாத பள்ளியில் சம்பளம் வாங்கும் ஆசிரியர்கள்
மேற்கு வங்கத்தில் மாணவர்களே இல்லாத பெண்கள் பள்ளிகளில் வெட்டியாக பொழுதை போக்கும் ஆசிரியர்கள், மாதந்தோறும் சம்பளம் மட்டும் வாங்குகின்றனர்.
மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் உமா சஷி வித்யாலயா மற்றும் டரக் தாஸ் சிக்ஷா சதன் என்ற பெயரில் அரசு உதவி பெறும் 2 பள்ளிகள் உள்ளன. இரண்டுமே பெண்களுக்கான பள்ளி. பெண் கல்வியை வளர்ப்பதற்காக ஒன்று 1969லும், மற்றொறு பள்ளி 1973லும் கட்டப்பட்டது.
இந்த பள்ளிகளில் மொத்தம் 14 ஆசிரியர்கள் உள்ளனர். ஆனால், மாணவிகள்தான் ஒருவர் கூட இல்லை. அதனால், பாடம் நடத்தும் வேலையும் ஆசிரியர்களுக்கு இல்லை. பள்ளியில் நிர்வாக குழுக்களும் இல்லை. தினமும் பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் நாளிதழ்கள், வார இதழ்கள் படிப்பது, வம்பு பேசுவது என்று பொழுதை போக்கி வருகின்றனர்.
ஆனால், மாதா மாதம் சம்பளம் மட்டும் இவர்களுக்கு வழங்கப்படுகிறது. 3 ஆண்டுகளாக இந்த கூத்து தொடர்கிறது.
இத்தனைக்கும் இந்த பள்ளிகள், நல்ல கட்டிடத்தில் குடிநீர், கழிப்பறை, விசாலமான அறை போன்ற வசதிகளுடன் உள்ளது. பள்ளியின் வளர்ச்சிக்கு முன்னாள் எம்பி., எம்.எல்.ஏ.க் கள் நிதியுதவி அளித்துள்ளனர். ஆனால், மாணவிகள்தான் பள்ளிக்கு வருவது கிடையாது இது பற்றி உமா சஷி வித்யாலயாவின் தலைமை ஆசிரியை தீபிகா கோஷ் கூறுகையில், ‘‘பல ஆண்டுகளாகவே மாணவிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்தது. கடைசியாக 2009ல் 85 மாணவிகள் இருந்தனர். அதிகாரிகளின் உத்தரவுப்படி இவர்களும் வேறு பள்ளிகளுக்கு மாற்றப்பட்டனர்.
இங்கு 8ம் வகுப்பு வரை மட்டுமே பள்ளியில் உள்ளது. அதற்கு பின் வேறு பள்ளியில் சேர்ப்பது கடினம் என்பதால் பிளஸ் டூ வரை உள்ள பள்ளிகளில் மாணவிகளை பெற்றோர் சேர்க்கின்றனர். இப்போது மாணவிகளே இல்லை. இது குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். ஆசிரியர்கள், பணியாளர்களை வேறு பள்ளிகளுக்கு இடமாற்றம் கோரியுள்ளோம். ஆனால் அரசு இதை கண்டு கொள்ளவில்லை’’ என்றார்.