பூமிக்கு திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ் திரும்பி வரவே மனசில்லையாம்
விண்வெளி ஆய்வு மையத்தில் 4 மாதங்களாக ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் நேற்று வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினார். 'விண்வெளியை விட்டு திரும்பி வரவே மனசில்லை' என்று பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான ‘நாசா’ மற்றும் ரஷ்யா உள்பட பல நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தை (ஐஎஸ்எஸ்) அமைத்துள்ளன. இந்திய வம்சாவளியை சேர்ந்த நாசா விஞ்ஞானி சுனிதா, ரஷ்யாவின் யூரி மெலன்செங்கோ, ஜப்பானின் அகிகிடோ ஹொசைட் ஆகியோர் ரஷ்ய சோயுஸ் விண்கலத்தில் கடந்த ஜூலை 15ம் தேதி விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்றனர். நான்கு மாதங்களுக்கு பின்னர், சுனிதா உள்பட 3 பேரும் நேற்று கசகஸ்தான் பகுதியில் தரையிறங்கினர். அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சுனிதாவின் பெற்றோர் இந்தியாவின் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்கள். அமெரிக்காவின் ஒஹியோ மாநிலத்தில் பிறந்த சுனிதா அங்கேயே படித்து, நாசாவில் விஞ்ஞானியாக பணியாற்றுகிறார். பாஸ்டன் நகரில் வசிக்கும் இவரது தந்தை தீபக் பாண்டியா, பூமி திரும்பிய மகளை காண கசகஸ்தான் வந்திருந்தார். பூமி திரும்பிய சுனிதா உற்சாகமாக பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
விண்வெளி மிகவும் ரம்மியமானது. அங்கு போனால் திரும்பி வர யாருக்கும் மனது வராது. எனக்கும் அப்படித்தான். அந்தரத்தில் எந்த பிடிப்பும் இல்லாமல் மிதப்பது ஆச்சரியமானது. விண்வெளியில் இருந்து டி ஷர்ட், குடும்ப போட்டோ ஆல்பம், நோட்புக், யோ யோ விளையாட்டு சக்கரம் ஆகியவற்றை மீண்டும் பூமிக்கு எடுத்து வந்தேன். சோயுஸ் விண்கலத்தில் செல்லும்போது ஒவ்வொருவரும் 1.5 கிலோ எடையுள்ள பொருள் மட்டும்தான் எடுத்து செல்ல முடியும். அதனால் துணி, பிரஷ், பேஸ்ட், ஷாம்பு ஆகியவற்றை எடுத்து செல்லவில்லை. ஏற்கனவே விண்வெளி மையத்தில் அவை இருந்தன. அதனால் பிரச்னை இல்லை.
விண்வெளியில் துணி மாற்றும் பிரச்னை இல்லை. ஒரே பேன்ட்தான். விண்வெளி ஆய்வு மையத்தில் சில பராமரிப்பு பணிகளை செய்யும்போது, பேன்டில் கறை ஏற்படும். மற்றபடி அழுக்கு படியாது. துணி மாற்ற வேண்டுமானால் லாண்டரி எல்லாம் செய்ய முடியாது. பழைய பேன்ட், டி ஷர்ட்களை ‘வெளியே’ (அந்தரத்தில்) வீசிவிட்டு வேறு உடைதான் அணிந்து கொள்ள வேண்டும். மனிதர்கள், விலங்குகள், பறவைகளை பார்க்க முடியாவிட்டாலும், விண்வெளியில் இருந்து திரும்பி வரவே எனக்கு மனதில்லை. மிக அற்புதமான அனுபவம் அது. இவ்வாறு சுனிதா வில்லியம்ஸ் கூறினார்.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!