ஒருவாட்டி பாத்ரூம் போனா 6 மணி நேரம் மின்சாரம்.. நைஜீரிய மாணவிகள் சாதனை!
சிறுநீரிலிருந்து மின்சாரம் தயாரித்து நைஜீரிய மாணவிகள் நான்கு பேர் சாதனை படைத்துள்ளனர். இவர்களின் இந்த வித்தியாசமான கண்டுபிடிப்பு நைஜீரியாவில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலகம் பூராவும் மின்தடை பிரச்சினைதான். அந்த மின்தடைக்கு ஆறுதல் தேடித் தரும் வகையில் நைஜீரிய மாணவிகள் நால்வரின் கண்டுபிடிப்பு வந்து சேர்ந்துள்ளது.
நைஜீரியா பொருளாதார ரீதியில் வளர்ந்து வரும் ஆப்பிரிக்க நாடு. ஆனால் இங்கு மின்சாரம் என்பது பெரும் பிரச்சினையாகவே இருந்து வருகிறது. பல பகுதிகள் இன்னும் மின்சாரத்தைக் காணாமலேயே இருக்கின்றன. பலருக்கு மின்சாரத்தைப் பார்த்தே பல காலமாகி விட்டதாம்.
இந்த நிலையில்தான் 14 வயதான டூரோ அய்னா அடிபோலா, அகின்டேல் அபியோலா, பேலகே வொலுவடோயின் மற்றும் 15 வயதான பெல்லோ எனியோலா ஆகிய மாணவிகள் சிறுநீரிலிருந்து மின்சாரம் தயாரித்து நைஜீரிய மக்கள் மனதில் பால் வார்த்துள்ளனர்.
லாகோஸில் நடந்த ஆப்பிரிக்க சிறு முதலீட்டாளர்கள் மாநாட்டில் தங்களது கண்டுபிடிப்பை அவர்கள் காட்சிக்கு வைத்தனர்.
சிறுநீரை முதலில் இவர்கள் நைட்ரஜன், தண்ணீர் மற்றும் ஹைட்ரஜனாக பிரிக்கின்றனர். பின்னர் ஹைட்ரஜனை ஒரு நீர் வடிகட்டிக்குள் அனுப்பி சுத்திகரிக்கின்றனர். அது பின்னர் ஒரு கேஸ் சிலிண்டருக்குப் போகிறது.
அங்கு ஹைட்ரஜன் போராக்ஸ் திரவமாக மாறுகிறது. பின்னர் அதிலிருந்து ஹைட்ரஜன் வாயு தனியாக பிரிக்கப்படுகிறது. அந்த சுத்திகரிக்கப்பட்ட ஹைட்ஜன் வாயு, ஜெனரேட்டருக்குப் போய் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.
ஒரு லிட்டர் சிறுநீரைப் பயன்படுத்தினால் 6 மணி நேரத்திற்குத் தேவையான மின்சாரம் கிடைக்கிறதாம்.
நைஜீரிய இளம் மாணவிகளின் இந்த கண்டுபிடிப்பு நைஜீரியாவில் இப்போது பெரும் பேச்சாக மாறியுள்ளதாம்.
தமிழ்நாட்டில் முதலி்ல் இந்த டெக்னிக்கைப் பயன்படுத்தி நிறைய மின்சாரம் தயாரிக்கலாம். பஸ் ஸ்டாண்ட் பக்கம் போனால் சுவர் பக்கம் ஒதுங்குவோரிடமிருந்து லிட்டர் கணக்கில் சிறுநீரைப் பிடித்தாலே போதும் நிறைய மின்சாரத்தை அள்ளி விடலாமே...
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!