வங்கக் கடலில் மீண்டும் புயல் உருவாகிறது! தமிழகத்தில் கரை கடக்கலாம்!!
கடந்த மாதம் 31ம் தேதி நீலம் புயல் அடித்து ஓய்ந்துள்ள நிலையில், மீண்டும் வங்கக் கடலில் ஒரு புயலுக்கு அடையாளமாக தீவிர காற்றழுத்தம் உருவாகியுள்ளது. கிழக்கு மத்திய வங்கக் கடலில் உருவாகியிருக்கும் இந்த காற்றழுத்தம், தீவிரமடைந்து இருப்பதாகவும், தமிழகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என்றும், சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக வறண்ட வானிலை காணப்பட்டது. ஆனால், இரவிலும் அதிகாலையிலும் கடும் பனி வீசியது. நேற்று முன்தினம் வங்கக் கடலில் வளி மண்டல மேல் அடுக்கில் ஒரு காற்று சுழற்சி ஏற்பட்டது. இதனால் தென் தமிழகத்தில் மழை பெய்தது. அந்த காற்று சுழற்சி நேற்று தீவிர காற்றழுத்தமாக மாறியது.
இந்த காற்றழுத்தம் நேற்றிரவு சென்னைக்கு 1,000 கி.மீ. தொலைவில் இருந்தது. இன்று காலை அது மெல்ல நகர்ந்து சென்னைக்கு 950 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது புயலாக மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது என்கிறது வானிலை ஆய்வு மையம்.
3 நாட்களுக்கு பிறகு இந்த புயல் தமிழக கடலோரத்தை கடந்து செல்லும். புயல் கரையை நோக்கி நகர்ந்து வரும் போது தமிழக கடலோரத்தில் மழை பெய்யத் தொடங்கும். தற்போது உடனடியாக இந்த புயல் காரணமாக தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ள காரணத்தால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே மீன் பிடிக்க சென்றவர்கள் கரைக்கு திரும்பவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இப்புதிய புயலால் அனைத்து ஆந்திர மாநில கடலோர துறைமுகங்களிலும் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!