ஹைவே நடுவே தனியே ஒரு வீடு! கையகப் படுத்த நிலம் கொடுக்க மறுத்தவரின் தில்!
புதிதாக அமைக்கப்பட்ட அகலமான ஹைவே ஒன்றின் நடுவே, தனி வீடு ஒன்று இருந்தால் எப்படியிருக்கும்? அப்படியொரு காட்சியை சுலபமாக பார்த்துவிட முடியாது. ஆனால், சீனாவின் வென்லிங் என்ற நகரத்தில் பார்க்கலாம்.
நடுவே என்றால், வீதியின் நடுவே! அந்த இடம்வரை வேகமாக வரும் வாகனங்கள் ஸ்லோவாகி, வீட்டை சுற்றிச் செல்ல வேண்டும்! வீதி அமைப்பதற்காக அப்பகுதியில் நிலம் எடுக்கப்பட்ட போது, இந்த வீட்டு உரிமையாளர் தமது நிலத்தை கொடுக்க மறுத்துவிட்ட காரணத்தால், இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
சீனாவின் வென்லிங் நகரில் லு போகென், மற்றும் அவரது மனைவிக்கு சொந்தமாக வீடு இது. இந்தப் பகுதியில் பெரிய ஹைவே கட்ட முடிவு எடுக்கப்பட்டு, அப்பகுதியில் நிலம் வைத்திருந்தவர்களிடம் இருந்து நிலம் எடுக்கப்பட்டு, அரசு நிர்ணயித்த விலையில் இழப்பீடு வழங்கப்பட்டது.
அந்தப் பணத்தை வைத்து இதேபோல வீடு ஒன்றை கட்ட முடியாது என்று கூறிய லு போகென், நிலத்தை அந்த விலைக்கு கொடுக்க மறுத்து விட்டார். அவரிடம் நிலப் பத்திரம் பக்காவாக இருந்ததால் (பார்க்க, கீழேயுள்ள போட்டோ), அந்த நிலத்தை எடுக்க முடியவில்லை.
அதே நேரத்தில், மற்றைய நிலங்கள் அனைத்தும் எடுக்கப்பட்டு, பணமும் கொடுக்கப்பட்டு விட்டதால், திட்டமிடப்பட்ட வீதியை வேறு இடத்துக்கு கொண்டு செல்லவும் முடியவில்லை. அந்த வீட்டை நடுவே வைத்துக்கொண்டு, வீதியை அமைத்தார்கள். லு போகெனின் வீட்டுக்கு எவ்வளவு நெருக்கமாக வீதி வருகிறது என்பதை அடுத்த போட்டோவில் பாருங்கள்.
இப்போது லு போகெனின் வீட்டு வாயில்வரை வருகிறது வீதி. வீடு அமைந்துள்ள நிலத்தில், வீட்டை சுற்றி உபரி நிலம் ஏதும் அவருக்கு சொந்தமாக இல்லை. அதனால், அடைவெளி விட வேண்டிய தேவை ஏதும் வீதி அமைப்பவர்களுக்கு கிடையாது.
வீதி இப்போதுதான் அமைக்கப்பட்டு வருகிறது. இன்னமும் போக்குவரத்துக்காக திறந்து விடப்படவில்லை. அடுத்த மாதம் இந்த வீதி போக்குவரத்துக்காக திறந்து விடப்படும்போதுதான், வரப்போகிறது சிக்கல். எப்படியென்றால் லு போகென் தமது வீட்டை விட்டு வெளியேற வேண்டுமென்றால், பிசியான highway ஒன்றின் ட்ராஃபிக்கை கடக்க வேண்டியிருக்கும்.
சீனாவின் கடுமையான கம்யூனிஸ்ட் காலங்களில், தனியார் நில சொத்துக்கள் தடை செய்யப்பட்டிருந்தன. நிலங்கள் அரசுக்கு உரியவையாக இருந்தன. அதன்பின் தனியார் நில உரிமை அனுமதிக்கப்பட்ட போது உருவாக்கப்பட்ட சட்டம், நில உரிமையாளரிடம் இருந்து நிலத்தை அரசு கையகப் படுத்துவது என்றால்கூட, இரு தரப்புக்கும் இடையே முறையான ஒப்பந்தம் ஒன்று இருக்க வேண்டும் என்ற வகையில் உள்ளது.
அதுதான், பக்காவாக பத்திரம் வைத்திருக்கும் இவரது வீட்டை தொட முடியவில்லை. ஆனால், வீதி இயங்கத் தொடங்கியபின் இவரால் தொடர்ந்தும் தங்கியிருக்க முடியாமல், தாமாகவே கிளம்பி விடுவார் என எதிர்பார்க்கிறது மாகாண அரசு.
ஆனால், லு போகென் என்ன சொல்கிறார்? “வேகப்பாதையின் நடுவே குடியிருக்கும் தில் எனக்கு இருக்கிறது. நான் இந்த வீட்டை காலி பண்ண போவதில்லை. இதேபோல வீடு ஒன்றை கட்டிக் கொள்ளும் அளவுக்கு பணம் கொடுக்கட்டும், அப்போதுதான் இங்கிருந்து நான் கிளம்புவேன்” என்கிறார்.
இடைஞ்சல் இவருக்கு மட்டுமல்ல, இந்த வீதியில் வாகனம் செலுத்தப் போகும் ஆட்களுக்கும் இருக்க போகிறது.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!