தாய் போல இருந்த பவானி யானை இறந்ததால் தவிக்கும் ராமலட்சுமி யானை
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்த தேக்கம்பட்டியில் யானைகள் புத்துணர்வு முகாம், கடந்த 26ம் தேதி துவங்கியது. ஜன. 12 வரை நடக்கும் இந்த முகாமுக்கு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் யானை பவானி, லாரி மூலம் அழைத்து வரப்பட்டது. சோர்வுடன் காணப்பட்ட இந்த யானை, ஆற்றில் குளிக்க இறங்கியபோது துவண்டு சரிந்து இறந்தது. யானை இறந்ததற்கான காரணம் மர்மமாக உள்ளது.
பவானியுடன், அதே கோயிலுக்கு சொந்தமான 10 வயது யானை ராமலட்சுமியும் வந்தது. ராமலட்சுமிக்கு பவானி யானை தாய் போல இருந்தது. இந்நிலையில், பவானி யானையை திடீரென காணாததால் காரணம் புரியாமல் சோகத்துடன் ராமலட்சுமி யானை காணப்படுகிறது. சரியாக உணவும் உண்பதில்லை. பவானி யானை இறந்ததை தொடர்ந்து முகாமில் உள்ள மற்ற யானைகளின் உடல்நலன் குறித்து கால்நடை டாக்டர் மனோகரன் உள்ளிட்டோர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
வெயிலில் தவிக்கும் யானைகள்
முகாமில் யானைகள் நிற்கும் இடத்தில் நிழல் தரும் மரங்கள் குறைவாக உள்ளன. ஸ்ரீரங்கம் கோயிலுக்கு முதல்வர் வழங்கிய ஆண்டாள், கோவை பேரூர் யானை கல்யாணி, அகிலா, செங்கமலம், லட்சுமி உள்ளிட்ட யானைகள் வெயிலில் நிற்கின்றன. கோயிலில் நிழலில் நின்று பழகிய யானைகளால் வெயிலை தாங்க முடியவில்லை. வெயில் தாங்காமல், மண்ணை தும்பிக்கையால் வாரி தலையிலும், உடலிலும் போட்டு கொண்டே இருக்கின்றன. மூத்த யானையான சுசீந்திரம் கோயில் கோபாலன் (57) வெயிலை சமாளிக்க ஆற்றிலேயே நீண்ட நேரம் கிடக்கிறது. வெயில் தாக்கத்தில் தென்னை ஓலை, சோள கதிர்களை யானைகள் தூக்கி வீசுகின்றன. யானை முகாமை பொதுமக்கள் பார்க்க காலையில் ஒரு மணி நேரமும், மாலையில் ஒரு மணி நேரமும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நேற்று ஏராளமான மக்கள் யானைகளை ரசித்தனர்.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!