Tuesday, November 27, 2012

உலக வெப்பமயமாதலால் பெரிதாகி வரும் உருளைக்கிழங்கு

உலக வெப்பமயமாதலின் எதிரொலி: அளவில் பெரிதாகி வரும் உருளைக்கிழங்கு


உலகம் வெப்பமயமாகி வருவதால் உருளைக் கிழங்குகளின் அளவும் பெரிதாகி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வாகனப் புகை, மரங்களை வெட்டித் தள்ளுதல், தொழிற்சாலை புகை என பல்வேறு காரணங்களால் பூமியில் கார்பன் டை ஆக்ஸைடின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த கார்பன் டை ஆக்ஸைடு வெப்பத்தை தன்னுள் ஈர்த்துக் கொள்வதால், பூமியின் வெப்பநிலையும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

இதனால் ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிக் ஆகிய துருவப் பகுதிகளில் பல ஆயிரம் கி.மீ. பரப்பில் பரந்து விரிந்துள்ள பனி மலைகள் உருகிக் கொண்டுள்ளன.

இந் நிலையில் ஹவாய் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளரான ஹோச் ஜெஹ்ரேன் நடத்திய ஆய்வில் பூமி வெப்பமயமாகி வருவதால் உருளைக் கிழங்கின் அளவும் கூட அதிகரித்து வருவதைக் கண்டுபிடித்துள்ளார்.

வளரும் நாடுகளில் 5வது மிக முக்கிய உணவாக இருப்பது உருளைக் கிழங்கு தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் கார்பன் டை ஆக்ஸைடு அளவை 390 ppm, 760 ppm, 1140 ppm, 1520 ppm என்ற அளவுகளில் வைத்து ஆய்வகத்துக்குள் உருளைக் கிழங்கு செடிகளை வளர்த்துள்ளனர் விஞ்ஞானிகள்.

இதில், கார்பன் டை ஆக்ஸைட் 760 ppm என்ற அளவைக் கொண்டு வளர்க்கப்பட்ட செடியில் விளைந்த உருளைக் கிழங்கு வழக்கமான அளவை விட 96 சதவீதம் பெரிதாக வீங்கியுள்ளது.

அளவு தான் மிகவும் பெரிதாக இருந்ததே தவிர இந்த உருளைக் கிழங்குகளில் உள்ள சத்துக்களின் அளவு பெருமளவு குறைந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கார்பன் டை ஆக்ஸைடு அதிகரிக்க அதிகரிக்க விளையும் பொருட்களின் புரோட்டீன், வைட்டமின்கள் உள்ளிட்ட சத்துக்களின் அளவு குறைவது ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட ஒன்று தான். ஆனால், இப்போது இந்த உருளைக் கிழங்கு சோதனை இதை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!