Wednesday, November 28, 2012

திக்குமுக்காடியது திருவண்ணாமலை 20 லட்சம் பேர் மகா தீப தரிசனம்

திக்குமுக்காடியது திருவண்ணாமலை 20 லட்சம் பேர் மகா தீப தரிசனம்



திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் நேற்று மாலை ஏற்றப்பட்டது. அதனை 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர். திரும்பிய திசையெல்லாம் மக்கள் வெள்ளமாக காட்சியளித்தது. ‘அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தர்கள் விண்ணதிர முழக்கமிட்டனர்.பஞ்ச பூதத் தலங்களில் அக்னி தலமான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக 23ம் தேதி வெள்ளித் தேரோட்டமும், 24ம் தேதி மகா தேரோட்டமும் நடந்தது.தீபத்திருவிழா உச்சகட்டமாக 10ம் நாளான நேற்று, மகா தீபப்பெருவிழா கோலாகலமாக நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு, அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. பஞ்சபூதங்களை அரசாளும் இறைவன் ஒருவனே பலவாக காட்சியளிக்கிறான் என்ற ‘ஏகன் அனேகன் தத்துவத்தை விளக்கும் வகையில் இந்த பரணி தீப விழா நடைபெற்றது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.அதைத்தொடர்ந்து, மாலை மகா தீபப்பெருவிழா நடந்தது. இதையொட்டி, பிற்பகல் 2.30 மணியில் இருந்து பே கோபுர நுழைவு வாயில் வழியாக பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

முக்கிய பிரமுகர்கள், உபயதாரர்கள் ஆகியோர், அம்மணி அம்மன் கோபுர நுழைவு வாயில் வழியாக அனுமதிக்கப்பட்டனர். நுழைவு வாயில்களில் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் பக்தர்களை சோதித்து அனுப்பினர். மாலை 5.30 மணியளவில், அண்ணாமலையார் கோயில் 3ம் பிரகாரத்தில் உள்ள தீப தரிசன மண்டபத்தில் பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகர், உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் எழுந்தருளினர். பின்னர், உமையாளுக்கு இடபாகம் வழங்கிய சிவபெருமான், ‘அர்த்தநாரீஸ்வரர்‘ திருக்கோலத்தில் ஆனந்த தாண்டவமாடியபடி மாலை 5.57 மணிக்கு கோயிலுக்குள் இருந்து அங்கு வந்தார். ஆண்டுக்கு ஒருமுறை, மகா தீபத்தன்று மட்டுமே சில நிமிடங்கள் அர்த்தநாரீஸ்வர் காட்சியளிப்பது வழக்கம். அதைத்தொடர்ந்து பஞ்சமூர்த்திகளுக்கு மகா தீபாராதனை காட்டி, கோயில் தங்க கொடிமரம் அருகே அகண்டத்தில் தீபம் ஏற்றினர். இதையடுத்து சரியாக மாலை 6 மணிக்கு, 2,668 அடி உயர அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.அப்போது அண்ணாமலையாரை போற்றும் பாமாலைகளும், சங்கொலியும் முழங்கின. மலை மீது ஜோதி வடிவாக அண்ணாமலையார் தோன்றியதைக் கண்டு, திரண்டிருந்த 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா என விண்ணதிர முழக்கமிட்டனர். காணும் திசையெல்லாம் மக்கள் வெள்ளமாக காட்சியளித்தது.இதையடுத்து வீடுகள், கடைகள், வர்த்த நிறுவனங்களில் அகல் விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டனர்.










நகரமே ஒளிவெள்ளத்தில் ஜொலித் தது. கோயில் முழுவதும் தீப ஒளியால் பிரகாசித்தது.கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று மாலை 6.26 மணிக்கு தொடங்கி, இன்று இரவு 8.29 மணிக்கு முடிகிறது. ஆனாலும், நேற்று அதிகாலையில் இருந்தே பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். மகா தீபத்தை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் மலை மீது சென்றனர். வடக்கு மண்டல ஐஜி கண்ணப்பன் தலைமையில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.கோயில், மாட வீதி உள்ளிட்ட இடங்களில் 70 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. மேலும், ஆளில்லாத சிறிய ரக விமானம் மூலம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 33 இடங்களில் புறக்காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நேற்று காலை முதல் நகருக்குள் வாகனங்கள் செல்ல அனுமதிக்கவில்லை. 9 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள், இன்று இரவு வரை செயல்படுகிறது.500 இடங்களில் அன்னதானம்: தீப தரிசனம் காண இத்தாலி, சிங்கப்பூர் போ ன்ற வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்தனர். மாட வீதிகள், கிரிவலப் பாதை, நகரின் முக்கிய சாலைகளின் சந்திப்புகள் என 500க்கும் மேற்பட்ட இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. இட்லி, வடை, பொங்கல், பூரி, தயிர் சாதம், எலுமிச்சை சாதம், புளி சாதம், சாம்பார் சாதம் என விதவிதமான உணவுகள் சுடச்சுட வழங்கப்பட்டது.









No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!