Thursday, November 29, 2012

அதிர வைக்கும் பேங்க் மோசடி அம்பலம்! ஏர்லைன் உணவு ட்ரேகளில் வெளியேறிய பணம்!!

அதிர வைக்கும் பேங்க் மோசடி அம்பலம்! ஏர்லைன் உணவு ட்ரேகளில் வெளியேறிய பணம்!!




நூற்றுக் கணக்கான மில்லியன் டாலர் பணம், ஆப்கானிஸ்தானின் ‘காபுல் பேங்க்’ வங்கியில் இருந்து ரகசியமாக நாட்டை விட்டு வெளியேறிய விபரம் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதற்கான விசாரணை அறிக்கை நேற்று (புதன் கிழமை) வெளியாகியுள்ளது.

நாட்டை விட்டு வெளியேறிய பணத்தில் ஒருபகுதி, ஆப்கானுக்கு வந்த போகும் ஏர்லைன்ஸில் பணிபுரிந்த சிலரின் உதவியுடன், விமான உணவு ட்ரேகளில் மறைத்து வைக்கப்பட்டும் வெளியேறியுள்ளது.

இது தவிர சுமார் 28 வெவ்வேறு நாடுகளில் உள்ள பேங்க் கணக்குகளுக்கும் ட்ரான்ஸ்ஃபர் செய்யப்பட்டுள்ளதை தற்போதுதான் தெரிந்து கொண்டுள்ளார்கள்.

விசாரணையில் தெரியவந்த மற்றொரு விஷயம், காபுல் பேங்கில் பணிபுரிந்த அதிகாரிகளில் சிலர், மற்றும் அவர்களது நண்பர்கள் பெயர்களில் 861 மில்லியன் டாலர் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்தக் கடன்களுக்கு, ஒரு மாதாந்த தவணை தொகைகூட செலுத்தப்படவில்லை.

நாட்டில் இருந்த யுத்த சூழ்நிலை, அவ்வப்போது இடம்பெறும் தற்கொலைத் தாக்குதல்கள், தலைநகரிலேயே வெடித்துச் சிதறும் வெடிகுண்டுகள் என்ற குழப்பத்தில், பேங்கில் நடைபெற்ற இந்த மோசடியை யாரும் கவனிக்கவில்லை.

இதில் உள்ள மற்றொரு விவகாரம், யுத்தத்தின் பின் ஆப்கான் பொருளாதாரம் தள்ளாடிக் கொண்டிருந்த நிலையில், வங்கிகள் மீது அரசு இறுக்கமான கட்டுப்பாடுகளை வைத்திருக்கவில்லை.

அநேக பேங்குகள், இரண்டு செட் ஆவணங்களை வைத்துள்ளன. அரசு ரெகுலேட்டர்களுக்கு காண்பிக்க போலியாக ஒரு செட் ஆவணங்கள் உள்ளன. அதன் அடிப்படையிலேயே பேங்க்குகள் இயங்க அனுமதிக்கபபடுகின்றன.

நிஜமான செட் ஆவணங்கள், பேங்க்கின் பாதுகாப்பான அறையில் உள்ளன.

‘காபுல் பேங்க்’ வங்கியின் அதிகாரிகள் இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, புகுந்து விளையாடி விட்டார்கள். இவர்கள் செய்த பல பண ட்ரான்ஸாக்ஷன்கள் போலி ஆவணங்களில் வராது. நிஜ ஆவணங்களில் பதிவானதா என யாரும் செக் பண்ணுவதில்லை

பேங்க்கின் கிரெடிட் டிபார்ட்மென்ட், போலி ஆவணங்களில் பதிவுகளை செய்வதற்காக நூற்றுக்கணக்கான போலி நிறுவன லெட்டர் ஹெட்டுகளை தயாரித்து வைத்துள்ளது. அதாவது, பேங்கே, போலி லெட்டர் ஹெட்டுகளை வைத்து, தமது போலி கணக்குகளை நேர்ப்படுத்தும் நடைமுறை!

இதனால், வெளியே போன பணத்தில், எது நிஜ நிறுவனத்துக்கு போனது, எது, போலி லெட்டர் ஹெட் ரிக்வெஸ்டில் போனது என்று கண்டுபிடிக்க வருடக் கணக்கில் ஆகும்!

முழுமையான விசாரணையின்பின் தெரியவரப்போகும் இறுதி மோசடிக் கணக்கு, நாட்டின் பொருளாதாரத்தை குப்புற விழுத்திவிடும் என்று கூறப்படுகிறது.

தற்போதைய விசாரணை அறிக்கை, ஆரம்பகட்ட ஊழல்களை கண்டுபிடித்துள்ளது. இந்த அறிக்கையில், “உலகிலேயே மிகப்பெரிய பேங்க் மோசடிகளில் ஒன்றாக, காபுல் வங்கி மோசடி இருக்கப்போகிறது” என்று கூறப்பட்டுள்ளது!

பேங்கில் இருந்து வெளியேறிய பணம், எலக்ட்ரோனிக் ட்ரான்ஸ்ஃபர் மூலம் 28 வெவ்வேறு நாடுகளுக்கு சென்றுள்ளன. இந்த 28 நாடுகளில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சுவிட்சலாந்து, அமெரிக்கா, தென் கொரியா, துருக்கி, ரஷ்யா ஆகிய நாடுகளும் அடக்கம்.

இதுதவிர, பாமிர் ஏர்வேஸ் என்ற விமான நிறுவன பைலட்டுகளுக்கும், இந்த பேங்க் ‘மேலதிக சம்பளம்’ கொடுத்திருக்கிறது. அதாவது பைலட்டுகளுக்கு அவர்கள் பணிபுரியும் ஏர்லைன்ஸ் ஊதியம் கொடுப்பதைவிட, பேங்கும் ஒரு ஊதியம் கொடுத்துள்ளது!

மார்ச் 2008-ம் ஆண்டில் இருந்து, நவம்பர் 2010-ம் ஆண்டுவரை பைலட்டுகளுக்கு கொடுக்கப்பட்ட மேலதிக ஊதியம், 3 லட்சத்து 20 ஆயிரம் டாலர்! இந்த பண வழங்கலுக்காக பேங்க் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்கியம் என்ன தெரியுமா? “pilots of cash delivery!”

இந்த பைலட்டுகள் ஆபரேட் பண்ணிய விமானங்களில்தான், உணவு ட்ரேகளில் பணம் ஏற்றப்பட்டு, அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த விமானங்கள் சென்ற நாடுகள் நான்கு.

அவற்றில் ஒரு நாடு எது தெரியுமா? டட்டடாங்… இந்தியா! மற்றைய முன்று நாடுகளும், சுவிட்சலாந்து, பிரான்ஸ், பிரிட்டன்.

இந்தியா உட்பட 4 நாடுகளிடமும், காபுல் பேங்க் அதிகாரிகளுக்கு சொத்துக்கள் உள்ளனவா என்று தகவல் கேட்க முடிவு செய்துள்ளது, ஆப்கான் அரசு!

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!