Thursday, November 29, 2012

ஊட்டி மலை ரயில் மீது விழுந்த ராட்சத கல்! கூரையை துளைத்து உள்ளே விழுந்தது!!

ஊட்டி மலை ரயில் மீது விழுந்த ராட்சத கல்! கூரையை துளைத்து உள்ளே விழுந்தது!!



ஊட்டி மலை ரயில் ஓடிக்கொண்டு இருந்தபோது, அதன் கூரை மீது ஒரு ராட்சத கல் விழுந்தது. கனம் தாங்காமல் ரயிலின் கூரையில் துவாரம் ஏற்பட்டு, ராட்சத கல் கூரையை துளைத்து உள்ளே விழுந்தது. ரயிலுக்குள் இருந்த சிறுமி ஒருவர் காயமடைந்தார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு புறப்பட்டு சென்ற மலை ரயிலில் 149 பயணிகள் இருந்தனர். அடர்லி ரயில் நிலையம் சென்ற ரயில் அங்கு தண்ணீர் பிடித்து விட்டு மீண்டும் புறப்பட்டது. 400 மீட்டர் தொலைவு சென்ற போது திடீரென 15 கிலோ எடை கொண்ட ராட்சத கல் ஒன்று மலை ரயில் பெட்டி மீது விழுந்தது.

அதிக உயரத்தில் இருந்து கல் விழுந்ததால் விழுந்த வேகத்தில் ரயில் பெட்டி கூரையை துளைத்துக் கொண்டு உள்ளே பாய்ந்தது. பயணிகள் அதிர்ச்சி அடைந்து அலறினர்.

அந்த பெட்டியில் அமர்ந்திருந்த கோழிக்கோட்டை 11 வயதான சகினாஷான் என்ற சிறுமியின் தோள் பட்டையில் உரசியபடி கல் விழுந்தது. இதில் சிறுமிக்கு லேசான காயம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் கூட்டம் அதிகம் இல்லாத இடத்தில் கல் விழுந்ததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

ரயில் பெட்டியின் மேற்கூரையில் ஓட்டை விழுந்தது. இதையடுத்து ரயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து அந்த ராட்சத கல்லை அகற்றி அந்த சிறுமிக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து மலை ரயில் குன்னூர் ரயில் நிலையத்திற்கு சென்றது. ஓட்டை விழுந்த பெட்டி மாற்றப்பட்டு மீண்டும் ஊட்டிக்கு சென்றது. விபத்து காரணமாக அரை மணி நேரம் தாமதம் ஏற்பட்டது.

கல் ரயிலுக்கு முன் தண்டவாளத்தில் விழுந்திருந்தால் அதன்மீது இன்ஜின் மோதி ரயில் தடம் புரள்வதோடு, ரயில் பெட்டிகள் அதலபாதாளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டிருக்கும்.

காயமடைந்த சிறுமி குன்னூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ரயில்வே பரிபாஷையில் இதைத்தான், “இளமையில் கல்” என்று சொல்வார்களோ!

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!