ரயிலில் ஐயப்ப பக்தர்கள் கற்பூரம் ஏற்ற வேண்டாம்
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் ஓடும் ரயிலில் கற்பூரம் ஏற்ற வேண்டாம் என தெற்கு ரயில்வே சேலம் கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கார்த்திகை மாதம் தொடங்கியதில் இருந்து தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சபரிமலையில் குவிந்து வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் ரயில் மூலம் சபரிமலை செல்கின்றனர். சேலம் வழியே சபரிமலை சீசனுக்காக சுமார் 25 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்களில் செல்லும் பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபாடு நடத்துகின்றனர். ரயிலின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கற்பூரம் ஏற்ற வேண்டாம் என்றும் சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக சேலம் கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:ஒவ்வொரு ரயில் பெட்டிக்கும் தலா 400 லிட்டர் அளவு கொண்ட 4 தண்ணீர் தொட்டிகள் உள்ளது. இதில் 1600 லிட்டர் தண்ணீர் பிடித்து வைக்கப்பட்டிருக்கும். இந்த தண்ணீரை கழிவறைக்கும், முகம், கை கழுவுவதற்கும் மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆனால் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் அனைவரும் அதிகாலையில் குளித்து விடுகிறார்கள்.
இதனால் தண்ணீர் காலியாகிவிடுகிறது. இதர பயணிகள் தண்ணீர் இன்றி தவிக்க நேரிடுகிறது. பக்தர்கள் வீணாக தண்ணீரை செலவு செய்யக்கூடாது. ரயில்களில் உள்ள கழிவறையில் குளிக்க கூடாது. ஐயப்ப பக்தர்கள், ரயில் பெட்டிக்குள் கற்பூரம் ஏற்றி வழிபாடு நடத்துகின்றனர். அவ்வாறு செய்யும்போது சிறிய கற்பூர துண்டு கீழே விழுந்து விட்டால் பெரும் தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் ரயில் பெட்டிக்குள் கற்பூரம் ஏற்ற வேண்டாம் எடுத்துரைத்து வருகிறோம். எனவே சபரிமலை செல்லும் பக்தர்கள் ஓடும் ரயிலில் கற்பூரம் ஏற்ற வேண்டாம்.இவ்வாறு தெற்கு ரயில்வே சேலம் கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!