7 கோடி இந்தியர்களுக்கு வேலையில்லை: மத்திய அரசு
இந்தியாவில் ஏழு கோடி பேர் வேலை இல்லாமல் இருக்கின்றனர் அல்லது சரியான வேலை அமையாமலோ இருக்கின்றனர் என்று ராஜ்யசபாவில் தொழிலாளர் நலத் துறை மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சர், மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். இந்த வேலை இல்லாத்திண்டாட்டம் இந்தியாவிற்கு, மோசமான பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தும் என, பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.
படித்தவர்கள் எண்ணிக்கை அதிகம்
மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு கல்வி திட்டங்களால், கடந்த 20, 30 ஆண்டுகளில் படித்தவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில், படித்த, வேலை இல்லாத இளைஞர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
7 கோடி பேருக்கு வேலை இல்லை
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, உள்கட்டமைப்பு வளர்ச்சி, ஏற்றுமதி அதிகரிப்பு போன்றவற்றால், புதிய வேலைவாய்ப்புகள் உருவாகுகின்றன. என்.எஸ்.எஸ்.ஓ., எனப்படும், தேசிய மாதிரி சர்வே அமைப்பு, 2009 - 10ம் ஆண்டுகளில் மேற்கொண்ட ஆய்வின் படி, நாடு முழுவதும், ஏழு கோடி பேருக்கு, வேலையில்லை அல்லது அவர்களுக்கு, போதுமான வேலை இல்லை என்ற நிலை காணப்படுகிறது.
34.7 கோடி பேர் தேவை
இது குறித்து ராஜ்யசபாவில் பதிலளித்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே, தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் மேற்கொண்டுள்ள ஆய்வின் படி, வரும், 2022ம் ஆண்டில், நாட்டில், 34.7 கோடி, திறமையான தொழிலாளர்கள் தேவைப்படுவர் என்று கூறியுள்ளார்.
உலக அளவில் 3 கோடி
உலக அளவில், 20 கோடியே 50 லட்சம் பேர் வேலையில்லாமல் இருக்கின்றனர் என்று புள்ளிவிபரம் தெரிவித்துள்ளது. இது 6.1 சதவீதமாகும். இதில், 7 கோடியே 80 லட்சம் பேர் இளைஞர்கள். கடந்த 2007ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 7 கோடியே 35 லட்சமாக இருந்தது. சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையும், படித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுமே இந்நிலைக்கு காரணமாக கூறப்படுகிறது.
விவசாயத்துறை வேலை வாய்ப்பு
உலகளவில் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவு காரணமாகவே இந்தியாவிலும் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 1993 - 94ம் ஆண்டில் விவசாய துறையில் வேலை வாய்ப்புகள் 61.67 சதவீதமாக இருந்தது.ஆனால், 2004 -05ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 52 சதவீதமாக குறைந்துவிட்டது. விவசாயத்துறை மூலம் வரும் வருமானம் அதிகமாக உள்ள நிலையில், விவசாய வேலை வாய்ப்புகள் குறைந்து வருவது. இந்திய பொருளாதாரத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலை இல்லாத்திண்டாட்டம்
வர்த்தகம், ஓட்டல், உணவு விடுதி, போக்குவரத்து, தகவல் தொடர்பு ஆகிய துறைகளில் பணி செய்பவர்கள், தங்களின் பணி பாதுகாப்பு இல்லாத நிலையை உணர்கின்றனர். சுய தொழில், சிறு தொழில் செய்யும் இளைஞர்களின் தொழிலை பாதிக்கும் அளவிற்கு பெரிய நிறுவனங்களும், சூப்பர் மார்க்கெட்டுகளும், ஷாப்பிங் மால்களும் ஏராளமாக வந்துவிட்டன. இது, வேலை இல்லா திண்டாட்டத்தை மேலும் அதிகரிக்கும் என்று பொருளாதார வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பொருளாதாரம் மோசமடையும்
120 கோடி மக்கள் தொகை உள்ள இந்திய நாட்டில் , ஏழு கோடி பேருக்கு வேலையில்லாத நிலை காணப்படுவது, வளரும் நாடான இந்தியாவிற்கு, மோசமான பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தும் என, பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!