கிரிக். சூதாட்டத்தில் நடுவர்கள் : வீடியோவில் சிக்கினர்
ஐ.பி.எல் 5வது சீசன் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 வீரர்களை, தனியார் சேனல் ஒன்று சிக்க வைத்தது. பிசிசிஐயின் தொடர் விசாரணையில் இவர்களுக்கு கிரிக்கெட் போட்டியில் விளையாட வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் வங்கதேசத்தில் நடந்த பி.பி.எல் 20-20, இலங்கையில் நடந்த எஸ்.எல்.பி.எல் 20-20 மற்றும் உலககோப்பை 20-20 பயிற்சி ஆட்டங்களில் இந்தியா - பாகிஸ்தான், இங்கிலாந்து -ஆஸ்திரேலியா மோதிய ஆட்டங்கள் ஆகியவற்றில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 6 நடுவர்கள் சிக்கியுள்ளனர்.
தனியார் டி.வி. சேனல் ஒன்று இவர்கள் சூதாட்டத்திற்காக பேரம் பேசியதாக பரபரப்பு காட்சிகளை வெளியிட்டுள்ளது. இலங்கையை சேர்ந்த சகாரா காலேகே, காமினி திசநாயகே, மோரிஸ் வின்ஸ்டன், பாகிஸ்தானை சேர்ந்த நதீம்சவுத்ரி, அனீஸ்சித்திக், வங்கதேசத்தை சேர்ந்த நதிர்ஷா ஆகிய 6 பேரும் சூதாட்டத்தில் ஈடுபட்டதை வெளிப்படையாக அவர்கள் கூறும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
வங்கதேசத்தில் நடந்த பிபிஎல் 20-20 தொடரில் பாகிஸ்தான் வீரர் நசீர்ஜேஸ்மத் பல்வேறு ஆட்டங்களில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும் இவர்கள் தெரிவித்தனர். பாக். கிரிக்கெட் வாரியத்திற்கு இந்த விவகாரம் தெரியும் என்றும் இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்தால் தொடருக்கும், வங்கதேச வாரியத்திற்கும் ஏதாவது பிரச்னை ஏற்படும் என நழுவி விட்டதாகவும் கூறியுள்ளனர். இலங்கையில் நடந்த எஸ்எல்பிஎல் 20-20 தொடரில் பாக். மாஜி வீரரும், இங்கிலாந்து கவுண்டி அணிகளில் ஆடிவரும் அசார்முகமது சூதாட்டத்தில் கைவரிசை காட்டியுள்ளார்.
நடுவர்கள் புட்டுவைத்த விவரங்கள்:
நதிர்ஷா (வங்கதேசம்): 40 ஒருநாள் போட்டி, 6 டெஸ்ட் போட்டிகளுக்கு நடுவராக இருந்துள்ளார். சர்வதேச போட்டியாக இருந்தாலும், உள்ளூர் லீக் ஆட்டங்களாக இருந்தாலும் சரி யாருக்கு வேண்டுமானாலும் சாதகமாக செயல்படுகிறேன். பணம் தான் முக்கியம். வங்கதேச வீரர்களுக்காக எப்படி வேண்டுமானாலும் உதவுவோம். பிபிஎல் 20&20 தொடரில் பாக்.வீரர் நசீர்ஜேஸ்மத் பல்வேறு ஆட்டங்களில் சூதாட்டத்தில் ஈடுபட்டார்.
சகாரா காலேகே (இலங்கை): உலககோப்பை 20&20ல் பாகிஸ்தான் & இந்தியா மோதிய பயிற்சி ஆட்டத்தில் 4வது நடுவராக செயல்பட்டார். போட்டி தொடங்குவதற்கு முன்பே மைதானத்தின் தன்மை, டாசில் ஜெயிப்பது யார்? இரு அணியிலும் இடம்பெறும் வீரர்கள் பட்டியலை ரூ.50 ஆயிரத்திற்காக வழங்கியுள்ளார். எஸ்.எல்.பி.எல் தொடரில் இம்ரான்நசீருக்கு ஆதரவாக செயல்பட சம்மதித்துள்ளார். இந்தியா போட்டிகளின்போது மேட்ச் ரெப்ரி மற்றும் இதர அதிகாரிகளை சரிகட்டுவதாக கூறியுள்ளார்.
நதீம்சவுத்ரி (பாக்.): ஐசிசி எலைட் பிரிவில் நடுவராக உள்ளார். இந்திய அணி விளையாடும் எல்லா போட்டிகளிலும் எந்த வகையில் வேண்டுமானாலும் வீரர்களுக்கு சாதகமாக செயல்படுகிறேன்.
மோரிஸ் வின்ஸ்டன் (இலங்கை): ஆஸ்திரேலியா & இங்கிலாந்து அணிகள் 20&20 உலககோப்பையில் மோதிய பயிற்சி ஆட்டத்தில் மைதான தன்மை, வீரர்கள் விவரம் வழங்க ரூ.50 ஆயிரம் கேட்டுள்ளார்.
காமினி திசநாயகே (இலங்கை): இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் உள்ள அதிகாரிகளுக்கு மதுபானம் மற்றும் டூர்கள் அழைத்து சென்றால் எந்தவித காரியத்தையும் சாதித்து விடலாம்.
அனீஸ்சித்திக் (பாகிஸ்தான்): இந்திய அணிக்காக எல்லா வகையிலும் உதவி செய்ய தயார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை எளிதாக சமாளித்து விடுவேன்.
சூதாட்டத்தில் ஈடுபட மறுத்த நடுவர்
வங்கதேசத்தை சேர்ந்த சபர்துல்லாவை சூதாட்டத்தில் ஈடுபடுவதற்காக டி.வி. சேனல் அணுகியது. அவர் மறுப்பு தெரிவித்து விட்டார். பணத்திற்காக தகாத செயலில் ஈடுபடமாட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
அப்ரிடி லீலை
பிபிஎல் தொடரில் டாக்கா கிளாடியேட்டர்ஸ் அணிக்காக அப்ரிடி, ராணாநவீத், அகமதுசேசாத் ஆகியோர் ஆடினர். இவர்கள் மீது அந்த அணியின் மீடியா மானேஜர் மின்கா சுதீன் பரபரப்பு புகார் கூறியுள்ளார். இந்த வீரர்கள் 3 பேரும் வழக்கமாக போட்டிகள் முடிந்ததும் இரவில் விருந்துக்கு செல்வார்கள். அங்கு அழகிகளுடன் கொட்டம் அடித்துவிட்டு தங்களது அறைக்கே அழைத்து வந்து விடுவார்களாம்.
ஊர் சுற்றிய வீரர்
வங்கதேச தொடக்க பேட்ஸ்மேன் தமீம் இக்பால் துபாய், மலேசியா நாடுகளுக்கு அடிக்கடி டூர் சென்று வந்துள்ளார். இதற்காக அவர் அதிகளவு ஹவாலா பணத்தை பயன்படுத்தியதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
ஐ.சி.சி விசாரணை
நடுவர்கள் சூதாட்ட விவகாரம் கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளில் வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபடுகிறார்களா என்பதை ஐசிசியின் ஊழல் தடுப்பு பிரிவு தீவிரமாக கண்காணித்து வருகிறது. இந்த கண்காணிப்பு ஒருபுறம் இருக்க மறுபுறம் ஐசிசியின் கட்டுப்பாட்டில் உள்ள நடுவர்களே சூதாட்டத்தில் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. இந்த விவகாரம் குறித்து ஐசிசி விசாரணை நடத்த உள்ளது. ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், நடுவர்கள் சூதாட்ட விவகாரம் தொடர்பாக டி.வி. சேனலிடம் உள்ள ஆதாரங்களை கொண்டு விசாரணை நடத்தப்படும். உள்ளூர் அளவிலான போட்டியில் மட்டுமே சூதாட்டம் நடந்துள்ளது. சர்வதேச போட்டிகளில் இவர்களுக்கு தொடர்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!