இங்கிலாந்து, ஜப்பான் விஞ்ஞானிகள்
கார்டன், யமனகாவுக்கு மருத்துவ நோபல் பரிசு
இங்கிலாந்தை சேர்ந்த ஜான் கார்டன், ஜப்பானை சேர்ந்த ஷின்யா யமனகா ஆகிய விஞ்ஞானிகளுக்கு இந்தாண்டுக்கான மருத்துவத் துறை நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. உலகின் மிகப்பெரிய கவுரவமாக நோபல் பரிசு கருதப்படுகிறது. இயற்பியல், வேதியியல், மருத்துவம் மற்றும் அமைதி ஆகிய துறைகளில் மிகப் சிறப்பானவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் தேர்வு குழுவினரால் இப்பரிசுக்குரியவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 1895ல் இப்பரிசை தோற்றுவித்தவரான ஆல்பிரட் நோபெலின் இறந்த தினமான 1896 டிசம்பர் 10ம் தேதியை நினைவு கூறும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10ம் தேதி சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நடக்கும் விழாவில் பரிசு வழங்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டு மருத்துவ துறைக்கான நோபல் பரிசு பெறுபவர்கள் முதலில் அறிவிக்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்து மருத்துவ ஆராய்ச்சியாளர் ஜான் கார்டன், ஜப்பான் ஆராய்ச்சியாளர் ஷின்யா யமனகா ஆகியோர் இந்த பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது பற்றி, ஸ்டாக்ஹோம் கரோலின்ஸ்கா இன்ஸ்டியூட் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘இவர்கள் இருவரும் இணைந்து ஸ்டெம் செல் குறித்தும், உடல் உறுப்புகள் எவ்வாறு வளர்ச்சி அடைகின்றன என்பதும் குறித்தும் ஆராய்ச்சி செய்து புதிய கண்டுபிடிப்புகளை வெளியிட்டுள்ளனர். விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிக்கு, இந்த கண்டுபிடிப்புகள் பெரிதும் உதவும். மருத்துவ துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை காணவும் இவர்களின் கண்டுபிடிப்பு உதவும்’’ எனறு கூறியுள்ளது.
நோபல் பரிசாக வழங்கப்படும் 1.2 மில்லியன் அமெரிக்க டாலர்(ரூ.6.5 கோடி) தொகையை 2 விஞ்ஞானிகளும் பங்கிட்டு கொள்வார்கள். டிசம்பர் 10ம் தேதி நடக்கும் விழாவில் இவர்கள் பரிசை பெறுவார்கள். இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு இன்றும், வேதியியலுக்கான பரிசு நாளையும், இலக்கியத்துக்கான பரிசு நாளை மறுநாளும் அறிவிக்கப்படுகிறது. நோபல் பரிசிலேயே மிகப்பெரியதாக கருதப்படும் அமைதி விருது, வரும் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!